புதுடில்லி, ஏப். 11 ரயில்களில், 58 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதியுடன் இச் சலுகை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மேற்கண்ட மூத்த குடிமக்களும் முழு கட்டணம் செலுத்தி ரயில் களில் பயணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக, 2020-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரெயில்வேக்கு கிடைத்த கூடுதல் வருவாய் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் கேள்வி கேட்டார்.
அதற்கு ரயில்வே அமைச்சகத் தின் கீழ் உள்ள ரயில்வே தகவல் சேவை மய்யம் பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் 31 கோடியே 35 லட்சம் மூத்த குடிமக்கள், ரயில்களில் பயணித்து இருப்பதாகவும், அவர்கள் மூலம் ரூ.20 ஆயிரத்து 133 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இது முழுகட்டணம் செலுத்தியதால் கிடைத்த தொகை. கட்டண சலுகை அளித்திருந்தால், ரூ.8 ஆயிரத்து 913 கோடி குறைவாகவே வருவாய் கிடைத்திருக்கும். எனவே, கட் டண சலுகை ரத்து காரணமாக, கூடுதலாக ரூ.8 ஆயிரத்து 913 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே தகவல் சேவை மய்யம் கூறியுள்ளது