காங்கிரஸ் கட்சியில் செயல்படாத தலைவர்கள் ஓய்வு பெறட்டும்! கட்சியினருக்கு கார்கே கடும் எச்சரிக்கை

viduthalai
3 Min Read

புதுடில்லி, ஏப். 11 காங்கிரஸ் கட்சியில் செயல்படாத தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என கட்சியி னருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடும் எச்சரிக்கை விடுத்தார்.

ஒன்றிய அரசுமீது குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டமும், தேசிய மாநாடும் குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் நடந்தது. இதில் காரியக் கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடந்த நிலையில், கட்சியின் தேசிய மாநாடு நேற்றுமுன்தினம் (9.4.2025) நடந்தது

இதில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கட்சியினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஒன்றியத்தில் ஆளும் பா.ஜனதா அரசு மீதும் பல் வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

தனது உரையில் அவர் கூறிய தாவது:-

மாவட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் 

காங்கிரஸ் கட்சியில் செயல்படாத தலைவர்கள், கட்சிப்பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும். தங்கள் கடமைகளை நிறைவேற்றாதவர்கள் நிச்சயம் ஓய்வுபெற வேண்டும். காங்கிரசில் மாவட்ட தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இனி மேல் தேர்தல்களின்போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களையும் ஈடுபடுத்த உள்ளோம். எனவே அவர்களின் நியமனம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதல் படி கண்டிப்பாகவும், பாரபட்சமின்றியும் இருக்கும்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் பூத் கமிட்டி, மண்டல கமிட்டி, ஒன்றிய கமிட்டி மற்றும் மாவட்ட கமிட்டியை சிறந்த நபர்களை கொண்டு உருவாக்க வேண்டும். இதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது.

தேர்தல்களில் முறைகேடு

தேர்தல்களில் முறைகேடுகள் நடந்து வருகின்றன மராட்டிய தேர்தலில் மோசடி செய்தே வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

உலகின் வளர்ந்த நாடுகள் மின் னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் கைவிட்டு வாக்குச்சீட்டுக்கு மாறி விட்டன. ஆனால் நமது தேர்தல் ஆணையம் இதைப் பொருட்படுத்தத் தயாராக இல்லை.

500 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்சினைகளை எழுப்பி பா.ஜனதா அரசு வகுப்புவாத மோதல்களை உருவாக்குகிறது. நாட்டின் எதிர்கால சவால்களுக்கு தயாராவதை விட்டுவிட்டு மக்களுக்கு இடையே பிரிவி னையை உருவாக்கி வருகிறது.

இத்தகைய ஆபத்தான சிந்தனை களை ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது.

2ஆவது சுதந்திர போராட்டம்

இந்தியாவின் விடுதலைக்காக நாங்கள் மீண்டும் ஒரு முறை போராடுகிறோம். அநீதி, சமத்துவ மின்மை, பாகுபாடு, வறுமை மற்றும் வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இந்த 2-வது சுதந்திர போராட்டம் தேவையாகிறது.

இதில் ஒரே வித்தியாசம் என்னவென்றால், அப்போது வெளி நாட்டினர் அநீதி, வறுமை மற்றும் சமத்துவமின்மையை ஊக்குவித்தனர், இப்போது நமது சொந்த அரசு அதைசெய்கிறது. இந்த போரிலும் நாங்கள் வெற்றி பெறு வோம்.

இந்தியாவின் ஜனநாயகம் மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. தனியார்மயமாக்கல் மூலம் நாட்டில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. இடஒதுக்கீடு முடிவுக்கு வருகிறது. இதே நிலை நீடித்தால் மத்திய அரசும், பிரதமர் மோடியும் மொத்த இந்தியாவையும் விற்று விடுவார்கள்.

நாடாளுமன்றத்தில்….

அரசியல்சாசன நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. அவற்றை பாதுகாக்க நாம் போராட வேண்டும். அரசு தனது விருப் பங்களுக்கு ஏற்ப நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை நடத்துகிறது.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரை சபாநாயகர் பேச விடவில்லை. இது ஜனநாயகத்தின் அவமானம். எதிர்க் கட்சிதலைவரையே பேசவிடவில்லை என்றால் மக்களை எப்படி அனுமதிப்பீர்கள்?மக்கள் பிரச்சினையை விவாதிப்பதற்கு பதிலாக அரசு தனது வகுப்புவாத செயல்திட்டத்தை (வக்பு திருத்த மசோதா) நள்ளிரவு வரை விவாதிக் கிறது.

மணிப்பூர் குறித்த விவாதம் அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. ஆனால் மறுநாள் அதை விவாதிக்க வேண்டுகோள் விடுத்தும் அரசு அனுமதிக்கவில்லை.இதில்இருந்து அரசு எதையோ மறைக்க முயற்சிப்பது தெரிகிறது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *