ஒடிஷாவில் சந்திக்க வாருங்கள்
சீமானுக்கு பிரதமர் அழைப்பு
‘‘சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு இழுக்க பா.ஜ., முயற்சித்து வரும் நிலையில், சீமானை ஒடிஷாவில் சந்தித்து பேச, பிரதமர் மோடி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள் கூறியதாவது:
‘அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, ‘மெகா’ கூட்டணி அமைக்க வேண்டும். ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுகளை சிதற விடாமல் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஆதரவு குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சியை, தே.ஜ., கூட்டணியில் சேர்க்க வேண்டும் என, பா.ஜ., டில்லி மேலிடம் விரும்புகிறது.
இதற்கு, மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கை முக்கியமாக கருதப்படுகிறது. அந்த அறிக்கையில், 8 சதவீதம் ஓட்டுகளை வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியை எப்படியாவது பா.ஜ., கூட்டணியில் சேர்க்க வேண்டும்.
இதனால், திராவிட மற்றும் ஈ.வெ.ராமசாமி எதிர்ப்பு அரசியல் வாயிலாக இளைஞர்களை ஈர்க்க, சீமானின் பிரசாரம் பலம் சேர்க்கும்; தேர்தல் வெற்றிக்கு கை கொடுக்கும். சீமான் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறினாலும், பிரதமர் மோடியை ஒருமுறை சந்தித்து பேசினால், அவர் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்க வாய்ப்புள்ளது என, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, மத்திய அரசின் உளவுத்துறை உயர் அதிகாரி அலுவாலியா தரப்பிலிருந்து, ஒடிஷாவில் பிரதமர் மோடியை சந்திக்க, சீமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை சீமான் ஏற்பாரா என்பது தெரியவில்லை.
ஆனால், சமீப காலமாக பிரதமரை சீமான் புகழ்ந்து வருகிறார். சென்னையில் நேற்று எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் நடந்த விழாவில், சீமானும், அண்ணாமலையும் ஒரே மேடையில் பேசினர்.
அந்நிகழ்ச்சியில் சீமான் பேசுகையில், அண்ணாமலை மற்றும் பிரதமருக்கு புகழாரம் சூட்டினார். அண்ணாமலையும் பதிலுக்கு சீமானை புகழ்ந்தார். இது, பா.ஜ., பக்கம் சீமான் நகர்வதைக் காட்டுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.’’
(‘தினமலர்’ 8.4.2025 பக்.7)
புரிகிறதா?
இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக் குமா? என்று நினைத்த வர்கள் நிதானிக்க வேண்டிய இடம்.
2003ஆம் ஆண்டு வரைகூட தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி ‘மானமும் அறிவும் மனிதற்கு அழகு’ என்று சுவரொட்டி ஒட்டிய சிறு கும்பல் – இப்பொழுது யாருடைய காலடியில்?
ஒரு கல்லூரி விழாவில் இவர் அவரைப் பாராட்டுகிறாராம் – அவர் இவரைப் பாராட்டுகிறாராம்.
‘அடேயப்பா! என்ன பேச்சு! உடல் மொழி‘ – இவை எல்லாம் எதற்கு? அதிக ஏலம் போவதற்கான சினிமா யுக்தி என்பது இப்பொழுது புரிகிறதா?
தந்தை பெரியாரைப்பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது என்று சுற்றறிக்கை விட்டதெல்லாம் யாரை ஏமாற்ற? (19.4.2015)
தோசையை ஏன் திருப்பிப் போடுகிறார்கள்?
தந்தை பெரியாரை ஏச ஏச ஏலம் ‘அதிக ரேட்டு‘
விபீஷணர்களுக்கா பஞ்சம்
எதிரிகளிடத்தில் அந்தப் பணம் தானே பெரிய ஆயுதம்!
ஆனால் அந்த அற்பர்களுக்கு ஒன்று தெரியாது. தந்தை பெரியாரைத் திட்டத் திட்ட அதன் எதிர் விளைவு வேறு மாதிரியாகத் தானிருக்கும் என்பது.
காவி வேட்டியணிந்து கழுத்தில் உத்திராட்சம் அணிந்து நெற்றியில் நீறு பூசிய தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் ‘தலைவர் பெரியார்!’ என்று அகம் புறம் சிலிர்க்க அழைத்தவர்.
‘விடுதலை’ பணிமனையைத் திறந்து வைத்தவரும் அடிகளாரே! (31.10.1965)
இன்றைய ஆத்திகம் என்பது சிறுபான்மையினர் நலம் – இன்றைய நாத்திகம் என்பது பெருவாரியான மக்களின் நலம் என்று குறள் போல் கருத்தினை உதிர்த்தவர் ஓர் ஆதினத் தின் அதிபர்தான் என்பது நினைவிருக் கட்டும்!
காவி கட்டியிருக்க லாம், நெற்றியில் நாமமோ, திருநீறோ பூசி யிருக்கலாம்; ஆனால் பெரியார் என்றால் தந்தை என்ற இடத்தில் வைத்துப் போற்றுபவர்கள் தமிழ்நாட்டு மக்கள்; அதற்குப் பெயர்தான் பெரியார் மண் – ஈரோட்டு மண்ணாகும்.
1971இல் ராமனை வைத்துக் கொம்பு சுற்றினார்களே – விளைவு என்ன?
அதுவரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சி அதிகப் பெரும்பான்மை (234க்கு 184) பெற்றது அந்தத் தேர்தலில் மட்டும்தானே!
திமுகதான் அந்த இமாலய வெற்றியை பொறித்தது.
சொல்லுகிறாராம். ஈ.வெ.ராவைப் பற்றி எதிர்த்துப் பேச அந்த ஆள் கிடைத்திருக்கிறார் – விடாதீர்கள் – வளைத்துப் போடுங்கள் – ஒடிசாவுக்கு அழைத்து வாருங்கள் நான் பாத்துக்கிறேன் என்று ‘பசை’ சமிக்ஞை காட்டியிருக்கிறார்.
பசைதான் எங்கும் ஒட்டுமே!
விலை போக விபீஷணர்களுக்கா பஞ்சம்!
பரவாயில்லை – பாம்பாட்டிகளின் கதை வெளிச்சத்துக்கு வந்து விட்டது.
இந்தத் தாயத்தை வாங்குங்கள் – நினைத்தது நடக்கும்! கடைசியில் கீரியும் பாம்பும் சண்டை போடும் காட்சியைக் காணப் போகிறீர்கள் என்று ‘திகிலை’ ஊட்டி மக்கள் பாக்கெட்டுகளைக் காலிப் பண்ணும். ‘மோடி’ மஸ்தான்களை நாம் கண்ட தில்லையா!
அதுதான் இப்போது! ஏற்கெனவே கூடாரம் கலகலத்து விட்டது.
கொஞ்ச நஞ்சம், மிச்சம் மீதி இருப்பதுகளும் ‘குட்பை’ சொல்லும் நிலைதான்.
கட்சிகளை உடைப்பது, ஆட்களைப் பிடிப்பது எல்லாம் காவிக் கூட்டத்துக்குக் கை வந்த கலையாயிற்றே!
என்னென்ன செப்படி வித்தைகளை எல்லாமோ செய்து பார்க்கிறார்கள். குட்டிக் கரணம் அடித்துப் பார்க்கிறார்கள்.
‘‘விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்தபாடில்லை’’ என்ற நிலைதான்!
பாம்பைப் பழுதென்று நம்பி ஏமாற வேண்டாம், எச்சரிக்கை! எச்சரிக்கை!!
குறிப்பு: அழைப்பு வந்து இரண்டு நாட்களா யிற்று. ‘கப்பு, சிப்புப் பேச்சு மூச்சு இல்லை – முண்டாதட்டவில்லை. முழக்கம் கிழக்கம் இல்லை – மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் அல்லவா! அடையாளம் காண்பீர்.
– கருஞ்சட்டை