சூப்பர் கம்ப்யூட்டர், குவாண்டம் கம்ப்யூட்டர்கள் பல வந்துவிட்டாலும் மனித மூளைக்கு நிகராக இதுவரை எந்த கம்ப்யூட்டரும் உருவாக்கப்படவில்லை. முதல்முறையாக, ஸ்காட்லாந்திலுள்ள ஹிரியாட் வாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் ஹார்ட்மேன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு அம்முயற்சியில் இறங்கியுள்ளது.
`தி கன்சர்வேஷன்’ என்கிற இதழுக்கு ஹார்ட்மேன் எழுதியுள்ள கட்டுரையில், “இதுவரை, சாப்ட்வேர்களை அடிப்படையாகக் கொண்டே கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மனித மூளையில் செயல்படும் நரம்பு மண்டலங்களைப் போன்று, குவாண்டம் கம்ப்யூட்டர்களிலும் நியூரான் சக்திகளை இணைத்து புதுவகை கம்ப்யூட்டர்களை உருவாக்க முயன்று வருகிறோம். இதனால் கம்ப்யூட்டர்களின் விரைவாக முடிவெடுக்கும் திறனும், சிக்கலான கேள்விகளுக்கு விடைதேடும் திறனும் அதிகரிக்கும்.
உதாரணத்திற்கு, நகரின் போக்குவரத்து நெருக்கடியை இந்த மனித மூளை குவாண்டம் கம்ப்யூட்டர் தானாகவே கிரகித்துத் தீர்வு காணும். கம்ப்யூட்டர் யுகத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக இக்கண்டுபிடிப்பு அமையப் போகிறது” என்று எழுதியுள்ளார். ஹார்ட்மேனின் கம்ப்யூட்டர் ஆராய்ச்சி உலகில் புது விவாதத்தையும் கிளப்பியுள்ளது.