தாய்மொழி பண்பாட்டின் அடையாளம் – சிறப்பு நிகழ்வு
சிங்கப்பூர், ஏப். 9- தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் “பகுத்தறிந்து பேசுவோம்” இரண்டாவது கூட்டம் கடந்த 16.3.2025 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கவிஞர் பிச்சினிக் காடு இளங்கோ கலந்துகொண்டு வாழ்த்துரை வழங் கினார்.
இந்நிகழ்வில் “தாய்மொழி பண்பாட்டின் அடையாளம்” என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியை நடராஜன் சாந்தி சிறப்புரையாற்றினார்.
இளைய தலைமுறையினர்களிடம் பெரியாரின் மனிதநேய சிந்தனைகளையும், பகுத்தறியும் தன்மை யையும், பேச்சுத் திறனையும் வளர்க்க உதவும் நோக்கத்தில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம் என்று நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நடத்திய நெறியாளர்கள் மாதவி மற்றும் நரசிம்மன் குறிப்பிட்டார்கள்.
நிகழ்ச்சியின் முதல் அங்கமாக “திருக்குறளை ஒட்டி கதை சொல்லுதல்” நடைபெற்றது.
முதலாவதாக திருக்குறளை ஒட்டி கதை சொல்ல வந்த தொடக்கப்பள்ளி மாணவி குந்தவை நாச்சியார்
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு
இன்னா பிற்பகல் தாமே வரும்”
என்ற திருக்குறளுக்கு ஏற்ற ஒரு கதையைச் சொல்லி கதையில் உள்ள எல்லா கதாபாத்திரங்களிலும் அவரே நடித்தும் காண்பித்தார். அவரது உச்சரிப்பு மிகத் தெளிவாக இருந்தது.
அடுத்ததாக, தொடக்கப்பள்ளி மாணவி வைணவி தினேஷ் குமார் ரம்யா,
“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற”
என்ற திருக்குறளின் பொருளை விளக்கி அன்பாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும் என்றும், ஒருவருக்கு எது சிறந்த அணிகலன் என்றும் அழகாக விளக்கினார்.
இறுதியாக உயர்நிலைப்பள்ளி மாணவர் சுகந்தன் சாரதி,
“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்”
என்ற திருக்குறளுக்கு, முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே, வலிமை வரும் என்பதை எடுத்துரைக்க சுவையான ஒரு கதையை மிகச் சிறப்பாகக் கூறினார்.
நூறாண்டுகள் கடந்தும் தந்தை பெரியாரின் மனிதநேய சமூகப் பணியின் தாக்கம் அளப்பரியது என்பதை மாணவர்கள் தாங்களாக உணரவேண்டும் என்ற நோக்கில் நிகழ்ச்சியின் அடுத்த அங்கமாக உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குகொண்ட “பெரியாரின் பொன்மொழி கூறி விளக்குதல்” நடைப்பெற்றது.
முதலில், உயர்நிலைப்பள்ளி மாணவர் சேகர் தனுஷ் “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்ற பெரியாரின் பொன் மொழியை, மக்கள் ஏற்றுக்கொண்டதால் காலம் கடந்தும் இன்றும் நிற்கிறது என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, “யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே” என்ற பெரியாரின் பொன் மொழி, யார் எதைக் கூறியிருந்தாலும் அதை கண்மூடித்தனமாக நம்பாமல் பகுத்தறிந்து ஆராய்ந்து அதை ஏற்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தியதால் எனக்கு இப்பொன்மொழி மிகவும் பிடித்ததாக அவர் கூறினார்.
அடுத்து பேச வந்த உயர்நிலைப்பள்ளி மாணவர் தருண்ராஜ் நரசிம்மமூர்த்தி “மானம் உடையவனுக்குத் தான் மனிதன் என்ற பெயர்” என்ற பெரியாரின் பொன் மொழி பற்றி பேசினார். மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முதன்மையான வேறுபாடு இது. மானம் என்பது வெறும் ஆடை அணிவது மட்டுமில்லை சுயமரியாதையோடு வாழ்வதே என்று பெரியார் கூறுவதாக அம்மாணவர் கூறினார்.
இறுதியாக பேச வந்த உயர்நிலைப்பள்ளி மாணவர் கவின் வள்ளியப்பன், “ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை” என்ற பெரியாரின் பொன் மொழிக்கேற்ப இன்று தமிழ், அறிவியல் மற்றும் கணிதம் அனைத்துத் துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன. அறிவியலில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய கருவிகள் பல உருவாக்கப்பட்டுள்ளன என்று அம்மாணவர் கூறினார்.
சிறப்புரை
“தாய்மொழி பண்பாட்டின் அடையாளம்” என்ற தலைப்பில் நடராஜன் சாந்தி சிறப்புரையாற்றினார்.
சிந்தனை, மாற்றம், பகுத்தறிவு பண்பாட்டில் இருக்கவேண்டிய முக்கிய கூறுகள் என்று கூறினார். சிந்தனை மூலம் உருவாகும் கருத்துகள் மாற்றத்திற்கு வழி வகுக்கும், மேலும் பகுத்தறிவோடு செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
முன்னேற்றத்திற்கு வழி வகுத்தால் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளலாம். தாய் மொழியின் வாயிலாக தான் அடுத்த தலைமுறைக்கு மொழி உணர்வை ஊட்ட முடியும் என்று ஆணித்தரமாக நம்புவதாகக் கூறினார். பண்பாட்டில் சிதைவு ஏற்பட்டால் மொழி அழிந்து விடும் என்று எச்சரித்தார் . நாம் தாய்மொழியின் அவசியத்தைப் புரிந்து கொண்டு, எச்சரிக்கையோடு பயணிக்க வேண்டிய காலகட்டம் இது என்றும் வலியுறுத்தினார்.
சிறப்புரையாற்றிய நடராஜன் சாந்தி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் கு.சி.மலையரசி நினைவுப் பரிசு வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
சிறப்பு விருந்தினர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ தனது வாழ்த்துரையில் மாணவர்களின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார்.
திருக்குறளை விளக்க வெறும் புனைவுக் கதைகளை பயன்படுத்தாமல் வரலாற்றுச் செய்திகளை தொடர்புபடுத்தி பெற்றோர்கள் மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.
அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக
“இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்”
என்ற திருக்குறளுக்கு, மனிதர்களிடம் வேற்றுமை காட்டாமல் ஏற்றத்தாழ்வு பாராமல் சமமாக பார்த்த தலைவர்கள் லீ குவான் யூ மற்றும் பெரியார் என்று பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் என்றார் அவர்.
பெரியாரைப் போல் மற்றவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், புதிய சிந்தனைகளோடு, புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு மன்றத்தின் தலைவர் க.பூபாலன் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார், செயலாளர் இரா.தமிழ்ச் செல்வி நினைவுப் பரிசு வழங்கினார்.
பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, சான்றிதழ்களையும் அன்பளிப்புகளையும் வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்கள்.
தமிழவேள் கோ.சாரங்கபாணி மற்றும் அன்னை மணியம்மையார் ஆகிய இருபெரும் தலைவர்களின் நினைவு நாளான மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவர்களை நினைவுக்கூர்ந்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முன்னேற்பாடுகளை செய்த செயலாளர் தமிழ்செல்வி, ஒருங்கிணைத்த உறுப்பினர் மாதவி மற்றும் நரசிம்மன், பொருளாளர் பழனி, ஆடிட்டர் மாறன், ராமன்,மனோ, வள்ளியப்பன் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மன்ற உறுப்பினர்கள் மலையரசி, குடியரசி, கவிதா, லீலாராணி, குமரேசன் ஆகியோருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுக்கும் பெற்றோருக்கும் நன்றி கூறப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
செய்தி: மாதவி, சிங்கப்பூர்