சென்னை, ஏப். 9- மசோ தாவுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்தால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இனி குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரை எதிர்த்து வழக்குதொடர வாய்ப்பு கிடைத்துள்ளதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் பி.வில்சன் அளித்த பேட்டி வருமாறு:
வரலாற்று திருப்பு முனை தீர்ப்பு
ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில், வரலாற்று திருப்புமுனை தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு என்ன சொல்கிறதோ அல்லது சட்டப்பேவையில் எப்படிப்பட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்புகிறார்களோ அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். அமைச்சரவையில் முடிவெடுக்கும் அறிவுரையின் படிதான் ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு 10 பல்கலைக் கழக மசோதாக்களை பல்வேறு காலக்கட்டங்களில் நிறைவேற்றி அனுப்பியும், அதற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்தார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். பல்வேறு பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். வேந்தராக இருந்து கொண்டு, அந்த பல்கலைகழகத்திற்கு துணை வேந்தர் உள்பட எல்லா நடவடிக்கைகளையும் அவர் தடுத்துக்கொண்டே வந்தார்
எனவே மாநில அரசு நியமனம் செய்பவர்தான் இனி துணை வேந்தராக இருக்க வேண்டும் என்ற மசோதாக்களை அரசு நிறைவேற்றி அனுப்பியது. அவற்றுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததால், இந்த வழக்கு தொடரப்பட்டது. கைதி களுக்கு தண்டனைக் காலத்தை குறைக்கும் கோப்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகம் சம்பந்தப்பட்ட கோப்புகள் அவரிடம் அனுப்பப்பட்டாலும் அவற்றின் மீது எந்தவித நடவடிக் கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்
இந்த 10 மசோதாக்களும் 2023ஆம் ஆண்டில், அதாவது வழக்கை தாக்கல் செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருந்ததால், அவற்றுக்கு உச்சநீதி மன்றமே ஒப்புதல் அளித்து அதற்கு இனி ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என்று கூறிவிட்டது. மேலும், அந்த 10 மசோதாக்களும் உடனே நடைமுறைக்கு வரும்படியாகவும் உத்தரவிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ஆளுநர்கள் எந்த ஒரு மசோதாக்களையும், முதல் அமைச்சர் உள்பட அமைச் சரவை கூட்டம் அளிக்கும் அறி வுரைப்படிதான் நடந்து கொள்ள வேண்டும்; அதை மீறி நடந்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மசோதா ஆளுநருக்கு வந்துவிட்டால் அந்த மசோதாவில் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் முடிவெடுக்கும்பட் சத்தில், 3 மாதத்திற்குள் அனுப்பி வைக்கலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை நம் முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார். அரசுக்கு ஆளுநர்கள் இடையூறாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றிருக்கிறார். ஆளுநர் ஒரு நண்பராக, ஆலோசகராக இருக்க வேண்டுமே தவிர, வேகத் தடை போடுவது போல நடந்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ள தீர்ப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநருக்கும் பொருந்தும்
நீட் தேர்வு
இந்த தீர்ப்பின் அடிப்படை யில் தமிழ்நாடு அரசே வேந்தரை நியமிக்குமா? என்று கேட்டால், பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் இருப்பதை நீக்கம் செய்வதற்காகத்தான் இந்த வழக்கு இயற்றப்பட்டது. இதன்படி, இன்றிலிருந்து வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த மசோதாவில் வேந்தருக்கு பதிலாக தமிழ்நாடு அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு யாரை நியமிக்கிறதோ அவர்தான் இனி வேந்தராக இருக்க முடியும். இந்த வழக்கில் ஆளுநர் என்ன மனு போட்டாலும் எதிர்த்து வாதிடுவோம்.
நீட்தேர்விற்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை. நீட் மசோதாவுக்கு குடியர சுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததால், இந்த வழக் கின் தீர்ப்பின்படி, அதை நீதி மன்றத்தில் எதிர்க்க முடியும். இந்த வழக்கில் நீட் சம்பந்தமாக எதுவும் சொல்லவில்லை. ஆனாலும், நீதிமன்றம் குறிப்பிட்டு காட்டியுள்ள உத்தரவின்படி பார்த்தால், நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்ததைக் கூட எதிர்த்து நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் முதல்-அமைச்சரின் அறிவுரையின் பேரில், அதை நேற்றைக்கு நாங்கள் தாக்கல் செய்து விட்டோம். விரைவில் அது விசாரணைக்கு வர வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.