மத நம்பிக்கையால் வீட்டிலேயே பிரசவம்!
பெண் பரிதாப பலி
கேரளாவில் வீட்டிலேயே பிரசவித்த பெண், சற்றுநேரத்தில் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதம் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் சிராஜுதின், தனது கர்ப்பிணி மனைவி அஸ்மாவை மருத்துவமனையில் சேர்க்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தையை பெற்றெடுத்த அவர், சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். மகளின் இறப்புக்கு சிராஜுதினே காரணம் என அவரது பெற்றோர் புகாரளித்துள்ளனர். காவல்துறை விசாரித்து வருகிறது.
உ.பி.யில் சட்டம் சீர்குலைந்து விட்டது… உச்சநீதிமன்றம் கருத்து
உ.பி.யில் சட்டம் சீர்குலைந்து விட்டதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. செக் மோசடி வழக்கில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்தது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிவில் விவகாரங்களில் காவல்துறை கிரிமினல் வழக்குகள் பதிவு செய்வதாகவும், இதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டது. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உ.பி. டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
ரயில் தாமதமானால் பயணச் சீட்டுக் கட்டணம் திருப்பித் தரப்படுமா?
ரயில் தாமதமானால் முன்பதிவு பயணச் சீட்டுக் கட்டணம் திருப்பித் தரப்படுமா, தரப்படாதா? என பயணிகளுக்கு சந்தேகம் இருக்கும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம். ரயில் 3 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகி, அதில் பயணி பயணிக்காது போனாலோ, அவர் செலுத்திய முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும். ஆன்லைன் டிக்கெட் எனில், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். கவுன்ட்டர் டிக்கெட் எனில் நேரில் சென்று விண்ணப்பித்து கட்டணம் பெறலாம்.
பக்தர்களுக்குள் அடிதடி!
பல நேரங்களில் மிகப்பெரிய சண்டைக்கு காரணமாக இருப்பது சிறிய விஷயம் தான். அப்படி, உ.பி. லக்னோவில் சந்திரிகா தேவி கோயிலில் கடை வைத்திருப்பவர்கள், பக்தர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது. தங்களுடைய கடையில் பிரசாதம் வாங்கவில்லை என்றுதான் இந்த சண்டையே நடந்திருக்கிறது. பெண்கள் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானதை பார்த்துவிட்டு, நான்கு பேரை காவல்துறை கைது செய்தனர்.
கண் பார்வையை பாதிக்கும் ரீல்ஸ்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ரீல்ஸ் சிறியதாக இருந்தாலும், கண் ஆரோக்கியத்தில் வாழ்நாள் முழுக்க பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்கின்றனர். எனவே, குழந்தைகளை அதிக நேரம் அலைபேசியில் மூழ்கவிடாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பெரியவர்களும் அலைபேசி பயன்பாட்டை குறைப்பது நல்லது என அட்வைஸ் செய்கின்றனர்.