சிறீநகர், ஏப்.8 வக்பு திருத்த சட்டம் தொடர்பாக காஷ்மீர் சட்டப் பேரவையில் கொண்டுவரப் பட்ட ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,’வக்பு சட்டம் மீதான ஒத்திவைப்பு தீர்மானத்தை பேரவைத் தலைவர் நிராகரித்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.பா.ஜனதாவின் முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலுக்கு அரசு முற்றிலும் அடிபணிந்து அவர்களை திருப்திப் படுத்த இழிவாக முயற்சிப்பது போல் தெரிகிறது’
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்த்த தமிழ்நாட்டை பார்த்து தேசிய மாநாடு கட்சி பாடம் கற்க வேண்டும் எனக்கூறியுள்ள மெகபூபா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே பிராந்தியமான காஷ்மீரில், இந்த முக்கியமான பிரச்சினையை விவாதிக்கக் கூட அரசுக்கு தைரியம் இல்லாதது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதைப்போல தேசிய மாநாடு கட்சி எம்.எல்.ஏ. அல்தாப் கலூவும்தமிழ் நாட்டை சுட்டிக்காட்டி சட்டப் பேர வைத் தலைவரை குற்றம் சாட்டினார்.
அவர் கூறுகையில், ‘6 சதவீத முஸ்லிம்களை கொண்ட தமிழ்நாடு சட்ட பேரவையில் வக்பு மசோ தாவுக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் சட்டப் பேரவை யில் அது குறித்து விவாதிக்க முடியா தது ஏன்?’ என கேள்வி எழுப்பினார்.