வாசிங்டன், ஏப்.8- அமெரிக் காவில் பல்வேறு மாகாணங்களில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாக சென்று எதிர்ப்பு முழக்கங்களை முழங்கினர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதன்பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக குடி யேறியவர்களை நாடுகடத்துவ தாக இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டவர்களை அமெரிக்காவைவிட்டு வெளியேற்றினார். இதுபோலவே பொருளாதார நடவடிக்கைகளிலும் சீர்திருத்தம் என்ற பெயரில் பல மாற்றங்களை செய்தார். ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். இதற்காக பிரபலதொழில் அதி பர் எலான் மஸ்க் உள்ளிட்ட வர்களை கொண்ட அரசாங்க செயல்திறன் துறை (டோஜ்) குழுவையும் உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.
பரஸ்பர வரிவிதிப்பு, வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் உலக நாடுகள் மத்தியில் டிரம்புக்கு எதிரான மனநிலையை தூண்டி உள்ளது போல, சமூக பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் அமெரிக்கர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனால் டிரம்ப் மற்றும் எலான்மஸ்க் கூட்டணிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்து உள்ளது.
போராட்டம்
அமெரிக்காவின் நியூயார்க் முதல் அலாஸ்கா வரை மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் போராட் டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மக்கள் உரிமை அமைப் புகள், தொழிலாளர் சங்கங்கள்,
எல்.ஜி.பி.டி.கியூ,, வக்கீல்கள், மேனாள் ராணுவ வீரர்கள் மற்றும் தேர்தல் ஆர்வலர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட குழுக்களால் ‘ஹேண்ட்ஸ் ஆப்’ என்ற பெயரில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. 1,200-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மன்ஹாட்டன் முதல் அலாஸ்காவின் ஆங்கரேஜ் வரை, பல மாகாண தலைநகரங்கள் உள்பட, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் டிரம்புக்கு எதிரான முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு வேலைகளில் ஆட்குறைப்பு, பொருளாதாரம், குடியேற்றம் மற்றும் மனித உரிமைகள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து முழக்கமிட்டனர். கைகளில், கண்டன பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.
சியாட்டிலின் மேற்கு கடற் கரையில் ‘ஸ்பேஸ்நீடில்’ நினைவு சின்னம் அருகே, போராட்டக் காரர்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனர். போர்ட்லேண்ட், ஓரிகான் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தெருக்களில் போராட்டக் காரர்கள் டிரம்ப், மஸ்கிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
இது பற்றி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “அதிபர் டிரம்பின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது: தகுதியான பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி ஆகியவற்றை அவர் எப்போதும் பாதுகாப்பார்.
ஜனநாயக கட்சியினரின் நிலைப்பாடு சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினருக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி வழங்குவதாகும். அது இந்தத் திட்டங்களை திவாலாக்கி அமெரிக்க குடிமக்களை நசுக்கும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.