ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பயனாடை அளித்து வாழ்த்துப்பெற்றார். கழகத் தலைவர் அவருக்கு இயக்கப் புத்தகங்களை வழங்கினார். உடன் ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன், கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.வந்தியதேவன். (சென்னை பெரியார் திடல், 7.4.2025)
நமது இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களால் பெரிதும் மதிக்கப்படும், நமது தாய் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களை நேற்று (7.4.2025) காலை பெரியார் திடலுக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
அப்போது ஆசிரியர் அவர்கள் எனது நாடாளுமன்றப் பணிகள் சிறப்பாக உள்ளதாக எடுத்துரைத்து என்னை வெகுவாக பாராட்டினார். ஒரு ஆசிரியரிடம் பாராட்டு பெறும் மாணவனைப் போல மனதுக்கு நிறைவாக இருந்தது. அவருக்கு பயனாடை வழங்கி வாழ்த்து பெற்றேன்.
அப்போது நான் எனது திருச்சி தொகுதியில் மேற்கொண்ட சில பணிகளை ஆசிரியர் அவர்களுக்கு எடுத்துரைத்தேன்.
அதில் முக்கியமானதாக ஜி-கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே துறை, போக்கு வரத்து காவல்துறை ஆகிய மூன்று துறையினரை ஒருங்கிணைத்து அங்கு வாகனம் செல்லும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் வெற்றி கண்டது,
அதுபோல திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் 99 சதவீதம் முடிவடைந்தது, அதற்கு நான் மேற் கொண்ட பணிகளை ஆசிரியர் அவர்களிடம் எடுத் துரைத்தேன்.
அது மட்டுமல்லாமல், திருச்சியில் இண்டிகோ மட்டுமே சேவையாற்றிக் கொண்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்தில் இன்னொரு நிறுவனமும் வரவேண்டும் என்ற அடிப்படையில் டில்லியில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன அலுவலகத்திற்கு சென்று, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசினேன்.
அதன் அடிப்படையில் பல உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சிக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இனியும் கொண்டுவருவார்கள். அதில் முக்கியமாக திருச்சி – சென்னை, மும்பையிலிருந்து புறப்படும் பல வெளிநாட்டு விமானங்களை இணைக்கும் விமான சேவையாக திருச்சி – மும்பை உள்நாட்டு விமான சேவை தொடங்கி உள்ளதை குறிப்பிட்டு ஆசிரியரிடம் தெரிவித்தேன்.
இதனால் பாதிக்குப் பாதி விமான கட்டணம் குறைந்துள்ளதையும், பயணிக்க விரும்பும் அனைவருக்கும் விமான டிக்கெட் கிடைப்பதையும் ஆசிரியர் அவர்களிடம் தெரிவித்தேன்.
அதுபோல ரயில்வே துறையிலும் பல கோரிக்கைகளை முன் வைத்திருப்பதையும் விரைவில் திருச்சி – திருப்பதி இரயில் சேவை தொடங்க நான் கேட்டுக் கொண்டதையும் ஆசிரியர் அவர்களிடம் எடுத்துரைத்தேன்.
குறிப்பாக எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியிலேயே மிகவும் பின்தங்கிய கந்தர்வ கோட்டை பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற நான் திட்டமிட்டுள்ளதை ஆசிரியர் அவர்களிடம் விளக்கினேன். அனைவருக்குமான வளர்ச்சிக்கு அதுதான் சரி அதனை மேற் கொள்ளுங்கள் என்று வாழ்த்தினார்.
அதோடு ஆசிரியர் அவர்கள்தாம் எழுதிய “தந்தை பெரியாரின் சுயமரியாதைப் புரட்சி” என்ற நூலை வழங்கி, எனக்கு பயனாடை அணிவித்து, என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
மனம் நிறைந்த சந்திப்பாக அமைந்தது. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டி விடை பெற்றேன்.
இந்த சந்திப்பிலன்போது மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ. வந்தியத்தேவன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் துரை. வைகோ எம்.பி.,