சென்னை, ஏப்.7- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் 2017ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது வரையில் நடைமுறையில் இருக்கின்றன.
தமிழ் புத்தக பாடப் பகுதிகள்
இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப்பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் படிப்பதில் சிரமத்தை சந்திப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் கல்வித்துறை வசம் வந்து சேர்ந்தன.
இதனையடுத்து அந்த பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது. குறிப்பாக 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளை குறைக்கவும், பொருத்தமற்ற பாடப்பகுதிகளை நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில் அதற்கான வல்லுநர்கள், பாடநூல் உருவாக்க குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு 1, 2ஆம் வகுப்பு பாடநூல்களில் உரிய திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு பாடநூல்களில் அதிக பக்கங்கள் கொண்ட பாடப்பகுதிகளை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதேபோல், 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 இயல்களை 8 ஆகவும், 9, 10ஆம் வகுப்பு பாடநூல்களில் 9 இயல்களை 7 ஆகவும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 இயல்களை 6 ஆகவும் குறைத்து இருக்கின்றனர். அவ்வாறு சீரமைக்கப்பட்ட 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் இந்த பாடப் புத்தகங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.