‘தினமலரின் தகடுதத்தமான கட்டுரைக்குப் பதிலடி!!

Viduthalai
27 Min Read

* ‘நீட்’ நேர்மையானதா – தகுதிக்கு அளவுகோலானதா?
* ‘நீட்’டின் பெயரால் நடைபெற்ற தில்லுமுல்லுகள்!!
* சமூகநீதியை ஒழிக்கவே இந்த ‘நீட்’ தேர்வு!
கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

நேற்றைய தினமலரில் (6.4.2025) ‘‘‘நீட்’ நிரந்தரமானது; தேர்வுக்குத் தயாராவது புத்திசாலித்தனம்’’ என்ற பெயரில் மேனாள் துணைவேந்தர் இ. பாலகுருசாமி என்பவர் வரிந்து கட்டிக் கொண்டு எழுதித் தள்ளியுள்ளார் – கேள்வி பதில் வடிவத்தில்.
அதற்கான பதில் இவரைப் பொருட்படுத்தியல்ல; கடித்தால் உடனே சாகடிக்கும் பாம்புக்குப் பெயர் ‘நல்ல’ பாம்பு என்று சொல்வதில்லையா? அதைப் போல் ‘நீட்‘ என்பதில் பள்ளி கொண்டிருக்கும் நஞ்சைப் பற்றி பொதுவாக அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த கட்டுரை அதே கேள்வி பதில் வடிவத்தில்!

‘நீட்’மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ‘பொய்’ என்கிறது தினமலர். அவர்களின் திரிப்புகளை ‘மெய்’ என்கிறது.
நாம் அவற்றை குற்றச்சாட்டுகள், ‘தினமலர் திரிப்பு’ என்று குறிப்பிட்டு, நமது பதிலை முன் வைத்துள்ளோம்.
குற்றச்சாட்டு 1: சமூக நீதிக்கு எதிரானது.
தினமலரின் திரிபு 1: மாநிலங்கள், தாங்கள் கடைப்பிடித்து வரும் இட ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க தேசிய கல்வி ஆணைய சட்டத்தில் எந்த தடையும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கைப்படி தான் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை நடந்து வருகிறது.

நமது பதில்: இளநிலை மருத்துவத்தில் (MBBS) ஒவ்வொரு மாநிலமும் 15 விழுக்காடு இடங்களை அகில இந்திய பொதுத் தொகுப்புக்குக் கொடுக்கின்றன. அதில் அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு விழுக்காட்டில் இடங்கள் அளிக்கப்படுகின்றன. முதுகலை மருத்துவக் கல்விக்கு (PG) ஒவ்வொரு மாநிலமும் 50 விழுக்காடு இடங்களை அளித்து வருகின்றன.
இதில் மாநிலங்களில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டை அளிக்க மறுத்த நிலையில் திராவிடர் கழகம் உட்பட தி.மு.க. வழக்குத் தொடுத்த நிலையில்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்ற மருத்துவப் படிப்பில் நூறு விழுக்காடு இடங்களையும் ஒன்றிய அரசுக்கு மாநிலங்கள் தாரை வார்க்கின்றன. (தமிழ்நாட்டில்தான் அதிக இடங்கள்) ஆனால் இதில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.
உண்மை இவ்வாறு இருக்க மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டில் பாதிப்பு இல்லை என்பது அசல் அண்டப் புளுகு இல்லையா?

குற்றச்சாட்டு 2: மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.

தினமலரின் திரிபு 2: ஒரு படிப்புக்காக பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் வெவ்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுதும் சுமையையும் விரயத்தையும் நீட் தேர்வு விலக்குகிறது.
நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு, நாட்டில் எந்தப் பகுதியிலும் எந்த மருத்துவ கல்வி நிறுவனத்திலும் சேரும் வாய்ப்பு உண்டு.
நமது பதில்: இந்த கூற்று தவறானதாகும். ‘நீட்’ தேர்வு என்பதையும் கடந்து எய்ம்ஸ் கல்லூரிகள், புதுச்சேரி ஜிப்மர், சண்டிகரில் பி.ஜி. அய். மற்றும் இராணுவ மருத்துவக் கல்லூரிகளுக்கென்று தனித்தனி தேர்வுகள் தானே உள்ளன.
இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்வித் திட்டம் இல்லாத நிலையில் சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ நடத்துவது சரியானதா – நியாயமானதா?

‘நீட்’ வந்த பிறகு சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்களுக்குத்தானே அதிக இடங்கள் கிடைத்துள்ளன.
நீட்டில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு நாட்டில் எந்தப் பகுதியிலும் எந்த மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் சேரும் வாய்ப்பு உண்டாகும்.
கோனேரி குப்பத்தில் படித்த ஒரு பெண் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துக் கரையேற முடியுமா?
நடைமுறை சாத்தியத்தோடு ஒரு பிரச்சினையை அணுக வேண்டாமா?
மெத்தப் படித்த மேதாவிகளாக, தாங்கள் இருக்கும் மேட்டுக்குடி மனப்பான்மையோடு ஒரு பிரச்சினையை அணுகினால் இப்படித்தான் பேசுவார்கள்.குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி, நீட்டைப் பற்றிச் சொல்லும்போது, இது எங்களுக்குச் சுமை என்று சொல்லவில்லையா?

குற்றச்சாட்டு 3: கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு கல்வியில் சம வாய்ப்பை பறிக்கிறது.
தினமலரின் திரிபு 3: கிராமப்புற, ஏழை மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்ற வாதம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் +2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கும் பொருந்தும்!
நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதில் ஒரு தொகுதி மாணவர்களுக்கு சிரமம் இருக்கிறது என்றால், அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்துவது தான் சரியான தீர்வு. நுழைவு தேர்வை எதிர்ப்பது அல்ல.
நமது பதில்: கிராமப்புறங்களில் +1 மற்றும் +2 படித்து, அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது வராத பிரச்சினை ‘நீட்’டினால் வருகிறது என்றால், அதற்கான காரணத்தை மனந்திறந்து பார்க்க வேண்டாமா? அப்படி கிராமப்புறங்களில் படித்து டாக்டர்கள் ஆனவர்கள் எல்லாம் மட்டமானவர்களா?
பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் டாக்டர்கள் மதிக்கப்படுகிறார்களா? மக்களின் மதிப்பையும் நற்பெயரையும் ஈட்டுகிறார்களா?

மருத்துவ தொண்டு செய்கிறார்களா?
கிராமப்புறத்தில் விவசாயி மூன்று வேளை உணவுக்கே அல்லாடுகிறான் என்றால் அவன் ஏன் கிராமத்தில் இருக்க வேண்டும் – விவசாயம் செய்ய வேண்டும். அது அவன் தலையெழுத்து என்று கூறும் தலைக்கனம் படைத்தவர்கள் ஒரு பிரச்சினையை இப்படிதான் பார்ப்பார்கள்.
தமிழ்நாட்டு சூழல்: 2021-இல் தமிழ்நாடு அரசு நடத்திய ஆய்வில், நீட் அறிமுகமான பிறகு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை குறைந்திருப்பது தெரியவந்தது. மேலும், பல ஏழை மாணவர்கள் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டு ‘த ஸ்விப்ட் இந்தியா’ என்ற ஓர் அமைப்பு நடத்திய ஆய்வில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 வடமாநிலங்களில் 2016 ஆம் ஆண்டு முதல் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் யாருமே மருத்துவக் கல்வியில் சேரவில்லை என்று புள்ளி விவரங்களோடு தெரியவந்துள்ளது என்பதை இந்த மேதாவிகளுக்கு அர்ப்பணிக்கிறோம்.

பயிற்சி மய்யங்களின் செலவு: நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி மய்யங்கள் (Coaching Centers) பெரிதும் நம்பப்படுகின்றன. இந்த மய்யங்களில் பயிற்சி பெறுவதற்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கில் செலவாகிறது (சுமார் ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை). ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் இதை தாங்க முடிவதில்லை. இதனால், பயிற்சி பெறாத மாணவர்கள் மருத்துவக் கல்லூரி படிக்கட்டையே மிதிக்க முடிவதில்லை.

கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டா?: கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்கள், புத்தகங்கள், மற்றும் இணைய வசதி போன்றவை கிடைப்பது அரிது. நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம் வேறுபட்டிருப்பதால், இங்கு எளிய ஏழை மாணவர்கள், சமூகத்தில் பின் தள்ளப்பட்டவர்கள் தயாராவதற்கு சிரமப்படுகின்றனர்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு: நகர்ப்புறங்களில் உள்ள பணக்கார மாணவர்கள் தனியார் பயிற்சி, மாதிரி தேர்வுகள் (mock tests), மற்றும் பிற வளங்களை எளிதாக பெற முடியும். ஆனால், ஏழை மாணவர்களுக்கு இவை பெரும்பாலும் கிடைப்பதில்லை. இது ஒரு சமமற்ற போட்டியைச் சூழலை உருவாக்குகிறது.

மன அழுத்தம் மற்றும் வாய்ப்பு இழப்பு: நீட் தேர்வில் தோல்வியடைந்தால், மருத்துவக் கல்வி கனவு முடிந்துவிடும் என்ற அச்சம் ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களிடையே அதிகம் உள்ளது. பணக்கார மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சி செய்யலாம் அல்லது வெளிநாட்டில் படிக்கலாம். ஆனால், ஏழை மாணவர்களுக்கு அத்தகைய மாற்று வழிகள் இல்லை.
நீட் தேர்வு ஆங்கிலம் மற்றும் சில பிராந்திய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மொழியில் படித்தவர்களாக இருப்பதால், ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் தேர்வு எழுதுவது அவர்களுக்கு கடினமாக உள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

குற்றச்சாட்டு 4: தமிழக மாணவர்களுக்கு மிகவும் கடினமானது.
தினமலரின் திரிபு 4: இவ்வாறு கருத்து சொல்வதற்கு தமிழக அரசு வெட்கப்பட வேண்டும்.
கடந்த 2006ஆம் ஆண்டு வரையில் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளின் சேர்க்கை, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு வாயிலாக தான் நடைபெற்றது. அப்போது எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆனால், அதற்குப் பிறகு நீட் தேர்வை எதிர் கொள்வதில் சிக்கல் இருப்பதாக கூறுவதற்கு இரண்டே காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, 2006ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி முறை ஆகும். அதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் +2 வகுப்புகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் உள்ளடக்கங்கள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன.
அந்த நேரத்தில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரத்தில், அனைத்து மாநிலங்களும் தங்கள் பாடத் திட்டங்களை சீராக்கிக் கொண்டு இருந்தன். மாறாக, தமிழகத்தில், அதை விட குறைவான தரத்தில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டது.
இரண்டாவது, பெரும்பாலான பள்ளிகள் பிளஸ் 1 வகுப்பு பாடத்திட்டத்தை ஒதுக்கிவிட்டு, +2 வகுப்புக்கான பாடத்திட்டத்திலேயே முழுக் கவனம் செலுத்துகின்றன.

நீட் தேர்வு பிளஸ் 1 மற்றும் பிளஸ் +2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதனால், தமிழக மாணவர்கள் சிரமப்படும் நிலை இருந்தது.
நல்வாய்ப்பாக, தமிழக பள்ளி பாடத்திட்டம் அண்மையில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மேலும், பிளஸ் 1 வகுப்புக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. அதனால், தற்போது, மாணவர்கள் நீட் தேர்வை சிரமமின்றி எதிர்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது.
நமது பதில்: கல்வியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்தோங்கி தலை நிமிர்ந்துதான் நிற்கிறது.
மருத்துவக் கட்டமைப்பிலும் இந்தியாவிலேயே முதல் இடத்தில்தான் இருக்கிறது. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
தன் விருப்பத்திற்கு ஒரு கேள்வியைக் கிறுக்கிக் கொண்டு, திராவிட இயக்கம் என்றாலே ஓர் ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டு கல்லெறியக்கூடாது.
‘‘இந்தியா – வளர்ச்சியும் பிரிவினையும்’’ எனும் தலைப்பில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், பொருளாதாரப் பேராசிரியர் ஜீன் டிரெட்ஜ் இருவரும் இணைந்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் 1996, 2002 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டுள்ளது.

அதில், அவர்கள் குறிப்பிட்டிருப்பது: சமூக சூழலில் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த சாதனை நடைபெற்றது குறித்த சில ஆர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் அதிக ஆர்வம் தரும் குறிப்பு என்னவெனில், தமிழ்நாட்டில், மருத்துவ அதிகாரிகளுக்கும், நோயாளிகளுக்கும் உள்ள சமூக இடைவெளி மிகக் குறைவாக உள்ளது. இதற்குக் காரணம், இந்த மருத்துவ அதிகாரிகளில், 40 முதல் 45 விழுக்காடு அதிகாரிகள் பெண்களாக இருப்பதும் இந்த சூழ் நிலைக்கு உதவுகிறது என்பது உண்மை. மேலும், சமூக சீர்திருத்த இயக்கங்களும், இட ஒதுக்கீடு கொள்கையும், உயர்ஜாதி வகுப்பினரின் ஆதிக்கத்தை, மருத்துவத் துறையிலிருந்து வெகுவாக அழித்துள்ளது என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் என்பது நினைவிருக்கட்டும். கிராமத்திலிருந்து படித்து வந்த டாக்டர்கள்தான் கிராமத்தில் பணிபுரிய முன் வருவார்கள்.
சமச்சீர் கல்வி என்றால் மட்டமானது என்று நினைப்பது ஒரு மட்டமான புத்தியே. ஒன்றிய அரசின் தேசிய கல்வி திட்டம் போல கல்வித் துறைக்கே சம்பந்தம் இல்லாதவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல.
ஒன்றிய அரசின் குருகுலக் கல்வி திட்டத்தை ஏற்க மறுப்பதால், தமிழ்நாட்டிற்கு நியாயமாக தர வேண்டிய நிதியைக் கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கை விமர்சிக்கத் துப்பில்லாமல், உயர் ஜாதி மனப்பான்மையோடு அணுகுவதுதான் வெட்கக்கேடு!
நீட் தேர்வு இல்லாத கால கட்டத்தில் +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் அதிக எண்ணிக்கையில் சேர முடியாதது – சி.பி.எஸ்.இன் கல்வித் தரத்திற்குச் சான்று என்பதை மரியாதையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

குற்றச்சாட்டு 5: பயிற்சி மய்யங்கள் உருவாவதற்கு வகை செய்கிறது. அது சமத்துவத்திற்கு எதிரானது.
தினமலரின் திரிபு 5: நீட் இல்லாவிட்டால் 2006 வரை இருந்தபடி வேறு ஒரு தேர்வு இருக்கும் அல்லது தனித்தனி தேர்வுகள் இருக்கும். போட்டித் தேர்வு என்று வந்துவிட்டாலே பயிற்சி மய்யங்களை நாடுவது வாடிக்கை தான். போட்டித் தேர்வு என்ன; பள்ளி தேர்வுகளுக்கே டியூஷன் போவது இல்லையா?
பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற டியூஷன் மய்யம் போல் செயல்படும் பள்ளிகளும், அதீத கட்டணம் வாங்கி செயல்படத்தான் செய்கின்றன.
பின், சமத்துவம் இல்லை என்ற வாதத்திற்கான இடம் எங்கு இருக்கிறது? அதனால், இதெல்லாம் சால்ஜாப்பு காரணம் தான்.

நமது பதில்: நடப்பது போட்டித் தேர்வா? தகுதித் தேர்வா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். போட்டி தேர்வு என்று வந்துவிட்டாலே பயிற்சி மய்யங்களை நாடுவது வாடிக்கைதானாம்.
தன்னை அறியாமலே ‘நீட்’ என்பதே போட்டித் தேர்வே தவிர, தகுதித் தேர்வல்ல என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதுவரை தகுதி, திறமை என்று பேசி வந்ததெல்லாம் வெறும் உதட்டுச் சொல் என்பது புரியவில்லையா?
போட்டி தேர்வு நடத்துவது என்பது பயிற்சி மய்யங்களை நடத்தும் கார்ப்பரேட்டுகளை மேலும் கொழுக்க வைக்கத்தான் என்கிற பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!
எவ்வளவு தளுக்கு? பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற டியூஷன் செல்வதும், ‘நீட்’ தேர்வுப் பயிற்சி மய்யங்களுக்கு பல லட்சம் கொடுத்து, (அதுவும் இரண்டாண்டுகள், மூன்றாண்டுகள் வரை) பயிற்சி பெறுவதும் ஒன்றா? யாருக்குக் காது குத்துகிறார்கள்?
பரம்பரைப் பரம்பரையாகப் படிப்பைத் தங்களின் ஏகப் போகத்தில் வைத்திருந்த கூட்டம் அல்லவா – அதற்குப் பல்லக்குத் தூக்கும் விபீடணர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
அவர்கள் பார்வையில் பஞ்சமர்களும், சூத்திரர்களும், கிராமத்தில் கிடந்தவர்களும் படித்து மேலே ஏறும் பாதையையும் ஏணியையும் நேரடியாகப் பிடுங்க முடியாது; அப்படிச் செய்தால் பூகம்பம் வெடித்துக் கிளம்பும் என்ற அச்சம் உலுக்கும் நிலையில்தான் இத்தகைய வஞ்சணை தடுப்புச் சுவர்களை எழுப்புகிறார்கள்.
அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல உரிமை மறுக்கப் பட்டவர்கள் ஒரு கட்டத்தில் ஆதிக்கத்தின் அடிப்படையைத் தகர்த்து விடுவார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்!
‘நீட்’டின் அருமைப் பெருமைகளை எல்லாம் அள்ளி விடுபவர்களுக்கு ‘நீட்’டின் பெயரால் நடக்கும் முறைகேடுகள் பற்றி எழுதிட எழுதுகோல் வேலை நிறுத்தம் செய்கிறதா?
கடந்த ஆண்டு 2024ஆம் ‘நீட்’ தேர்வு முறைகேடு இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
பீகார் அரசுத் தேர்வாணையத்தின் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விஷால் சவுராஷியா என்பவர் கைதாகிறார்.
இவர் ஏற்கெனவே மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அரசுத் தேர்வு வினாத்தாளை தேர்விற்கு முன்பே கோடிக்கணக்கில் விற்பனை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, கைதாகி கடந்த ஆண்டு ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஒடிசா மாநில அரசுத்தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக இவரை ஒடிசா காவல்துறை கைது செய்து தற்போது புவனேஸ்வர் சிறையில் உள்ளார்.
அப்போது காவல்துறையினரிடம், “2024 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான விடைத்தாள் எந்த நாட்டிலும், எந்த பாதாள அறையிலும் பிரிண்ட் ஆனாலும் என் ஆட்கள் அதனைப் பெற்று விடுவார்கள். தேர்வு நடத்தும் அனைத்துத் துறைகளிலும் (N.T.A. உட்பட) எங்களது ஆட்கள் உள்ளனர்” என்று கூறி சவால் விட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா காவல்துறை பீகார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது,
பீகார் காவல்துறை 20.03.2024 அன்று தேசிய தேர்வு முகமைக்கு (N.T.A.) “இந்த ஆண்டு நடக்கப் போகும் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடக்க உள்ளன. ஆகவே உடனடியாக இந்த விவகாரத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கடிதம் எழுதியது.
மாதம் ஒரு நினைவூட்டல் கடிதம் என மார்ச், ஏப்ரல் மாதங்களில் 4 கடிதங்களை எழுதியது. மேலும் விஷால் சவுராஷியாவின் கூட்டாளியான விஜயேந்திர குப்தா என்பவர் இதுவரை கைதாகவில்லை.
முகத்தை மறைத்துக், கொண்டு ‘டைம்ஸ் ஆப் சுவராஜ்’ என்ற ஊடகத்துக்குப் பேட்டி அளிக்கும் போது “எனது கூட்டாளி சவுராஷியா எந்த மூலையில் இருந்தாலும் நீட் தொடர்பான வினாத்தாளை வாங்கிவிடுவார். வேண்டுமென்றால் பந்தயம் கட்டலாமா?” என்று கூறியுள்ளார்.
இதனையும் சாட்சியாக எடுத்துக்கொண்டு பீகார் காவல்துறை தேசிய தேர்வு முகமைக்கு எச்சரிக்கைக் கடிதம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் அனுப்பியது. இவ்வளவு நடந்தும் தேசிய தேர்வு முகமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து 15 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடி உள்ளது.

பிஜேபி ஆட்சியின் நிர்வாக இலட்சணம் எந்தக் கெதியில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் தான் இந்த நீட் முறைகேடுகள்.
இராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற பகுதியிலிருந்து சுமார் 2 லட்சம் மாணவர்களை, ஊரடங்கின்போது நாடு முழுவதும் அந்த அந்த மாநிலங்கள் தனியாக பேருந்துகளை அனுப்பி தங்களது மாநிலங்களுக்கு அழைத்து வந்துள்ளன. இவர்கள் அனைவரும் யார் என்றால் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பெரும் செல்வந்தர்களின் பிள்ளைகள், வெளி நாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகள் (என்ஆர்.அய்).
இவர்கள் அனைவருமே நீட் என்ற மருத்துவ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி எடுக்க இராஜஸ்தான் மாநிலம் கோட்டா விற்கு சென்றிருந்தவர்கள்
இதில் பலர் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தவர்கள் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. இவர்கள் ஆண்டு முழுவதும் இங்கே இருந்து நீட் பயிற்சி எடுத்தார்கள் என்றால் பள்ளியில் சென்று படிப்பது யார்?
இதற்கு விடை 2018ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 433 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார். கல்வியில் பின் தங்கிய மாநிலமாக உள்ள பீகார் மாநில மாணவி தேசிய அளவில் ‘நீட்’ தேர்வில் முதலிடம் பிடித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த மாணவி குறித்த சர்ச்சை ஒன்று எழுந்தது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அந்த மாணவிக்கு இல்லை என்ற சர்ச்சைதான் அது. பீகார் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த அந்த மாணவி, நீட்’ தேர்விற்காக வெளிமாநிலம் ஒன்றில் தங்கி இரண்டு ஆண்டுகளாக தயார் செய்துவந்துள்ளார். வெளிமாநிலத்தில் இருந்ததால், பீகார் பள்ளியில் வகுப்பிற்கு சரியாக அவர் செல்லவில்லை. அதனால் பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அவருக்கு இல்லை. ஆனாலும் நீட் தேர்வு எழுதிய அந்த மாணவி 500க்கு 433 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த கல்பனாவின் தந்தை பீகார் மாநில பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் பேராசிரியர் குழுவின் தலைவராக உள்ளார், இவரது தாயார் அரசு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராவார்.
அதுமட்டுமல்ல, சிறுவயதில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த இந்த மாணவி 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு பீகார் மாநில அரசு பள்ளியில் சேர்கிறார். பீகார் அரசுப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்தே, வகுப்பிற்குச் செல்லவில்லை.
இவர் குறிப்பிட்ட பள்ளியில் படித்தவர் என்று செய்தித் தாள்களில் வந்தபோது, அந்தப்பள்ளியைச் சேர்ந்த குறிப் பிட்ட வகுப்பு மாணவிகள், இவரை நாங்கள் பார்த்ததே கிடையாது என்று கூறியுள்ளனர். குறிப்பிட்ட மாணவி படித்த அரசுப்பள்ளியில் தேர்ச்சி விகிதம் 62.3.
பள்ளிக்கே செல்லாதவர்கள் எப்படி தேர்ச்சி பெறுவார்கள்? இரண்டு ஆண்டு நீட் தேர்வு பயிற்சியில் படிக்கும் மாணவர்கள் ஒருவேளை நீட் தேர்வில் சறுக்கிவிட்டால், அதற்காகத்தான் ஆள்மாறாட்டம், தேர்வு முடிவுகளில் தலையிடுவது என பல விதங்களில் தில்லுமுல்லுகள் உண்டு.
2018ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி கைதான மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை அளித்த தகவலின்பேரில் கேரள கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நபர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் நீட் தேர்வு பயிற்சி மய்யம் நடத்தி வந்த அந்த நபரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்திருப்பதன் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டாக்டர் வெங்கடேசன் பணியாற்றி வந்தார். இவரது மகன் உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்தார். இதுகுறித்து தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு இ-மெயில் மூலம் அசோக் கிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்தபோது மன உளைச்சல் என மாணவர் கல்லூரியைவிட்டு நின்றுவிட்டார். விவகாரம் பெரிதாகி கல்லூரி முதல்வர் காவல்துறையில் புகார் அளித்தார். உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானார். அவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் வழக்கு சிபிசிஅய்டி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஅய்டி காவல்துறையினர், தேனி தனிப்படை காவல்துறையினர் திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் உள்ளிட்டவர்களை பிடித்து சென்னை சிபிசிஅய்டி அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் தேனி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனது மகனை மருத்துவராக்க 2 முறை நீட் தேர்வு எழுதவைத்தும் தேர்வாகததால் குறுக்குவழியில் புனேயில் வேறு நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து நானே என் மகன் கைதாகும் நிலைக்கு தள்ளி வாழ்க்கையை அழித்துவிட்டேன் என தந்தை டாக்டர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
(2019 – ‘இந்து தமிழ் திசை’ செய்தி)

மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு அளவு கோல் ‘நீட்’ என்கிறார்களே அதாவது உண்மையா?
நீட் தேர்வுப் பாடங்களில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றாலும் பரவாயில்லை ‘நீட்’ எழுதினாலே போதும். தனியார் கல்லூரிகளில் சேரலாம் என்று அகன்றளவு கதவைத் திறந்து விடுவதுதான் தரமான டாக்டர்களை உருவாக்கும் வழியா?
நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 போன்ற மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ முடிவு செய்கிறது.
இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 மதிப்பெண்களை பெற்றிருந்த மாணவர்கள் கூட பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லுரிகளில் மருத்துவம் பயின்று வருகின்றனர். தகுதி மதிப்பெண்களை பெற்றிருந்தால் போதும், தனித்தனியாக பாட வாரியாக தேர்ச்சி பெற வேண்டியதில்லை என்ற காரணத்தினால் அவர்களுக்குத் தனியார் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.

முதல் முறையாக நீட் அறிவிப்பு வெளியான நேரத்தில் குறைந்தபட்சம் நீட்தேர்வின் ஒவ்வாரு தாளிலும் மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகளில் பாடவாரியான தேர்ச்சி பற்றி பேசப்படவில்லை. மொத்தமாக குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும் என அறிவிப்பாணை வெளியானது. இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தற்போது மருத்துவம் படித்து வரும் பலரும் வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் பூஜ்யத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்துள்ளது.
இயற்பியலில் -2 மதிப்பெண்கள், வேதியியலில் 0 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உயிரியல் பாடத்தில் 131 மதிப்பெண்கள் பெற்றதால், மொத்தமான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். இப்படிப்பட்ட மாணவர்கள் தனியார் கல்லூரியில் பல லட்சம் கொடுத்து மருத்துவம் படித்து வருகின்றனர். நீட் தேர்வில் பாஸ் மதிப்பெண்கள் பெற்றால் போதும், ஒரு சில பாடத்தில் மிக மோசமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட, பணம் இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். பெரும்பாலான இத்தகைய மாணவர்கள் ‘டீம்ட்’ (Deemed) பல்கலைக்கழங்களிலே பயில்கின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு அத்தகைய ‘டீம்ட்’ பல்கலைக்கழகங்களே எம்பிபிஎஸ் இறுதித் தேர்வையும் நடத்துகின்றன. இவர்கள் இத்தகைய தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், பயிற்சி மருத்துவராக பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

தனியார் கொள்ளையைத் தடுக்கத்தான் ‘நீட்’ என்பது பொய்யாகிடவில்லையா?
குற்றச்சாட்டு 6: தமிழக மாணவர்களுக்கான இடங்கள் பிற மாநிலத்தவருக்கு சென்றுவிடும்.
தினமலரின் திரிப்பு 6: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களில், 15 சதவீத ஒதுக்கீடு நீங்கலாக அனைத்து இடங்களும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த எந்த மாணவருக்கும் அதில் இடம் கிடையவே கிடையாது.
தமிழகத்தில் உள்ள 12,050 எம்.பி.பி.எஸ்., இடங்களில் 1,807 இடங்கள் தேசிய ஒதுக்கீட்டிற்கு சென்றுவிடும்.
அதே நேரம், மற்ற மாநிலங்களிலும் இது போல 15 சதவீத இடங்கள் தேசிய ஒதுக்கீட்டில் வரும் அல்லவா? அப்படி கிடைக்கும் இடங்கள் 15,921. அதாவது, தமிழகத்தின் மொத்த இடங்களைவிட அதிகம். இவற்றில் தமிழக மாணவர்களும் இடம் பிடிக்கலாம்.
உண்மையில் தமிழக மாணவர்களின் வாய்ப்பு விரியத்தானே செய்கிறது?
நமது பதில்: தமிழ்நாடு மட்டும்தான் 15 விழுக்காடு இடங்களைக் கொடுக்கிறது. அதனால் தமிழ்நாட்டின் மொத்த இடங்கள் பாதிப்பு என்பது உண்மையல்ல – பிற மாநிலங்களும் 15 விழுக்காடு இடங்களைத் தரத்தான் செய்கின்றன. அதனால் தமிழ்நாட்டுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று சால்ஜாப்பு.

கையில் இருப்பதை விட்டுவிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்ட கதைதான்!
எங்கள் மாநில வரிப் பணத்தில், எங்கள் மாநிலத்தில் உள்ள மாணவர்களை மருத்துவர்களாக்க (மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது – சொன்னதுதான்) மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினால், அதற்கு இப்படிப்பட்ட வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கமா?
மருத்துவ முதுகலைப் படிப்பிற்கு 50 விழுக்காடு தருகிறோமே – அதன்படி 50 விழுக்காடு இடங்களைத் தராதது ஏன்? சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் நூறு விழுக்காடு இடங்களையும் தாரை வார்க்கிறோமே.
அதில் இடஒதுக்கீடு உண்டா?
‘‘கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுது என்பானாம்’’ – அது தான் நினைவிற்கு வருகிறது.

குற்றச்சாட்டு 7: தற்கொலைக்கு வழி வகுக்கிறது. அதனால், அதை ரத்து செய்ய வேண்டும்.
தினமலரின் திரிப்பு 7: இதை பொய் என்பதைவிட தவறான கருத்து என்று சொல்ல வேண்டும். நீட் தேர்வின் முடிவுகளால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது உண்மை.
ஆனால், அதை வைத்து நீட் தேர்வே கூடாது என்பது சரியல்ல.
அப்படியானால், பல ஆண்டுகளாகவே 10 மற்றும் பிளஸ் +2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த விபரீத முடிவைத் தேடிய துயரமான நிகழ்வுகள் உண்டு. அதற்காக அந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட முடியுமா?
தற்கொலை என்பது மிகவும் துயரமான முடிவு. மாணவர்கள் இத்தகைய விபரீத முடிவைக் கைவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் அதே சமயம், பல தற்கொலை சம்பவங்களுக்குத் தேர்வு முடிவுகள் மட்டுமே காரணமாக இல்லை என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

நமது பதில்: +2 தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் குழு மூர் அனிதாவால் நீட் தேர்வில் 80 மதிப்பெண்தான் பெற முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன?
இவ்வளவுக்கும் மூட்டை தூக்கும் ஒரு தொழிலாளியின் – கிராமத்துப் பெண் – ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையாகப் படித்து டாக்டராக வேண்டும் என்று கனவு கண்ட பெண்.
அதை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியுமா? ஜாதி ஆணவமும் ஆதிக்க உணர்வும் இருந்தால் கடந்து செல்லலாம்.
வேறு எந்த ஒரு பிரச்சினைக்காகவும் 227 பேர் தற்கொலை செய்து கொண்டது உண்டா?
நாணயமான அறிவும், கீழே கிடந்தவர்கள் மேலே வர வேண்டும் என்ற மனித நேயமும் உள்ளவர்களாக இருந்தால், இதற்கெல்லாம தற்கொலை செய்து கொள்ளலாமா என்று அலட்சியப்படுத்த மாட்டார்கள்.
‘நீட்‘டால் தன் கனவு நனவாகவில்லையே என்ற துயரத்தால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணை ‘காதல் தோல்வியால் தற்கொலை’ என்று எழுதிய ஏடுகளும் இருக்கத் தானே செய்கின்றன.

குற்றச்சாட்டு 8: மாநிலத்தின் உரிமையில் தலையிடுகிறது.
தினமலரின் திரிப்பு 8: கல்வி, அரசியல் அமைப்பு சட்டத்தின் பொது பட்டியலில் உள்ளது. எனவே, நாட்டின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க முழு அதிகாரம் படைத்தது.
அதை பின்பற்றி செயல்படுத்த வேண்டியது மாநிலங்களின் கடமையாகும்.
நமது பதில்: பொதுப் பட்டியல் என்று சொல்லி அதிகார ஆணவத்தில் புது அகராதி எழுதக் கூடாது.
Concurrent பட்டியல் என்றால் ஒத்திசைவுப் பட்டியல் என்ற பொருள் என்பதை மறைக்கக் கூடாது. அருகாமை என்றால் பொதுவாக என்ன கருதுகிறார்கள்? மிகப் பக்கத்தில் என்று தானே கருதுகிறார்கள். அதன் உண்மையான பொருள் – தொலைவு என்பதாகும். அதைப் போலத்தான் பொதுப் பட்டியலில் – மாநிலத்திற்கும் உரிமய்யுண்டு – அது ஒத்திசைவுப் பட்டியல் என்ற உண்மையைத் திரித்து ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு மட்டுமே உட்பட்டது என்று அடம் பிடிக்கிறார்கள்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போது; அப்போது தி.மு.க. எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்று ‘தினமலரில்’ எழுதுகிறார் மேனாள் துணைவேந்தர் திருவாய்குருசாமி.
உண்மையைப் பேசுவதேயில்லை என்று சத்தியம் ெசய்து கொண்டு இருப்பார் போலும்.

உண்மையில் நடந்தது என்ன?
21.12.2010 அன்று அன்றைய ஒன்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் ‘நீட்’டைக் கொண்டு வந்தது. அந்தக் கூட்டணி ஆட்சியில் அங்கம் பெற்றிருந்த தி.மு.க.வாளாயிருக்கவில்லை.
முதல் அமைச்சர் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியதோடு நின்றுவிடவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட்டுக்கு எதிராக தி.மு.க.வால் வழக்குத் தொடுக்கப்பட்டது நீதிபதி ஜோதிமணி நீட்டுக்குத் தடையும் விதித்தார் (6.12.2011)).
நீட்டை எதிர்த்து பல தரப்பினராலும் போடப்பட்ட வழக்குகளை ஒன்றிணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் நீதிபதிகள் விக்ரஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரித்தது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 25, 26, 29, 30 பிரிவுகளின்படி ‘நீட்’ தேர்வை நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது என்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஏ.ஆர்.தவே மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் (18.7.2013).
இதோடு நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பின்மீது மறுசீராய்வு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது யார்? தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முன்னணி அரசல்ல. தாக்கல் ெசய்தது நரேந்திர மோடி தலைமய்யிலான தேசிய முற்போக்குக் கூட்டணி (NDA) அரசு தான்.
அதில் என்ன வேடிக்கை என்னவென்றால் ‘நீட்’ வழக்குத் தீர்ப்பில் மாறுபட்ட தீர்ப்பைப் பதிவு செய்த நீதிபதி ஏ.ஆர்.தவே தான் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கினார். ‘நீட்’ செல்லும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டது (16.3.2016).
இதில் குறிப்பிடத்தக்கது “சுவையான’ ஒன்று. இன்று நீட்டைத் திணித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் தவம் இருப்பது பிஜேபி அல்லவா? அப்போது குஜராத் முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த நீட்டை எதிர்த்தது என்பதுதான் அந்த “சுவையான” “அறுசுவை”.

பிரதமர் மோடி தலைமையிலான குஜராத் அரசு இந்திய மருத்துவக் கழகத்திற்கு எழுதிய கடிதம் என்ன?
“எங்கள் மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவர்களாக வரவேண்டும் என்பது எங்கள் மாநில உரிமையாகும். இந்திய மருத்துவக் கழகம் எங்களை ‘நீட்’டுக்காகத் தயாராகும்படி கூறியிருந்தது. ஆனால் எங்களால் நீட்டை ஏற்க முடியாது – எங்கள் மாநிலத்திற்கு என்று சிறந்த கல்வி அமைப்பு உள்ளது.
இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் எங்கள் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
நாங்கள் ‘நீட்’ பற்றி ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்தோம். அந்தக் குழு மாநில அரசின் பாடத்திட்டத்தின் படி படிக்கும் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு சுமையை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் கூறியுள்ளது. ஆகவே நாங்கள் ‘நீட்’டை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று குஜராத் மாநில சுகாதார அமைச்சர் ஜெய நாராயணன் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார் (அதே நிலைதான் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். இன்றைய தி.மு.க. தலைமையிலான இன்றைய அரசு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, அதன் பரிந்துரையின்படி நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரப்பட்டுள்ளது).
நீட் தொடர்பாக ‘தி.மு.க. அரசு சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டப் போகிறது என்ற அறிவிப்பு வந்த நிலையில் ‘தினமலர்’ திரிநூல் ஏடு, மேனாள் துணைவேந்தரை அழைத்து நீட்டுக்கு எதிராக எழுத வைத்துள்ளது. நீட்டுக்கு மட்டுமல்ல – சமூகநீதிக்கே எதிராக இருந்து வந்தவர்தான் – வருபவர்தான்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI)
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் விபரீதம்
என்.ஆர்.அய். என்ற பெயரில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு எந்தவித மதிப்பெண் வரைமுறையும் இல்லாமல், மதிப்பெண் பெற்றதில் கடைசி மணவனாக இருந்தாலும் எளிதாக இடம் கிடைத்து விடும். இந்த நிலையில் தகுதி – திறமை பற்றிப் பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.

‘நீட்’ தகுதிபற்றி அசாம் முதலமைச்சர்
‘நீட்’ தேர்வில் முதலிடம் பெற்று மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு கூட அடிப்படை ஆங்கிலம் தெரியவில்லை, சாதாரண பொது அறிவு கேள்விகளுக்கு கூட பதில் கூறமுடியவில்லை. இதனால் அவர்களுக்கு பாடங்களைச் சொல்லித்தருவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்கிறோம்,
மருத்துவப் பாடங்களைச் சொல்லித்தருவது பெரும் சவாலாக உள்ளது என்று மருத்துவத்துறை பேராசிரியர்கள் கூறியதாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா,  நீட் முறைகேடுகளை தடுப்பது தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறினார்.
(16.03.2025 ‘த டெலிகிராப்’)

‘நீட்’ தேர்வில் தில்லுமுல்லு
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பூரா நர்சையா கவுட் ‘நீட்’ தேர்வு தொடர்பாக 2.4.2018 அன்று கேள்வி எழுப்பினார்.
1. மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க் கைக்கான தேர்வினை நடத்தும் புரோ மெட்ரிக் எனும் அமெரிக்க நிறுவனம், தேர்வு தொடர்பான மென்பொருளை கையாடல் செய்ய முடியும் என ஒப்புக் கொண்டுள்ளதா?
2. மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வுக்கான மென்பொருள் கையாடல் செய்யப்பட்டதா? ஆம் எனில், விசாரணை நிலவரம் மற்றும் குற்றவாளிகள்மீது ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
3. ஆம் எனில், மத்திய தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளை நடத்திட பொறுப்பேற்கும் நிறுவனம் அல்லது முகவர், மேலும் சிலருக்கு உள் ஒப்பந்தம் செய்ய முடியுமா?
4.ஆம் எனில், இதன் விவரங்களும், காரணங் களும் என்ன?
மேற்குறிப்பிட்ட கேள்விக்கு, ஒன்றிய மனித வளத்துறையின் இணை அமைச்சர் டாக்டர் சத்யபால் சிங் அளித்த பதில்:
1, 2: ஒன்றிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
ஒன்றிய தேர்வு குழுமம், நீட் தேர்வு நடத்துவ தற்கான அதிகாரப்பூர்வ அமைப்பு இந்த அமைப்பு, ஒன்றிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. 2017 ஆண்டுக்கான மருத்துவ மேல்படிப்பு சேருவதற்கான ‘நீட்’ தேர்வை, அமெரிக்க நிறுவனமான புரோ மெட்ரிக் நிறுவனம் நடத்தியது.
இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக ஒன்றிய தேர்வு குழுமம் கொடுத்த புகாரின் பேரில், டில்லி குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த புகார் தொடர்பான குற்றப் பத்திரிக்கையில், விசாரணையின்போது, அமெரிக்க நிறுவனமான புரோ மெட்ரிக் நிறுவனத்துடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், தங்களது மென் பொருள் கையாடல் செய்யப்பட்டதை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், புதுடில்லி உயர் நீதிமன்றத்திலும், தகவல் அறிக்கையை, குற்றப்பிரிவு காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.
– நேர்மையாக ‘நீட்’ தேர்வு நடக்கவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசே ஒப்புக் கொண்ட பிறகு வாய் ஜாலம் காட்டுவது ஏன்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *