சென்னை, ஏப். 7- தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வழங்கியதை விட கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிக நிதி வழங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதற்கு மேனாள் ஒன்றிய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழ்நாட்டிற்கு 2004-2014 காலகட்டத்தை விட 2014-2024 காலகட்டத்தில் அதிகநிதி வழங்கி இருப்பதாக பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு முன்பை விட 7 மடங்கு அதிக நிதி வழங்கியதாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால் பொருளாதார அளவீடு எப்போதும் முந்தைய ஆண்டை விட அதிகமாகவே இருக்கும் என்பதை முதலாமாண்டு பொருளாதார மாணவரே கூறுவார்’ என குறிப்பிட்டு இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் வக்புக்கு எதிராக
300 இஸ்லாமியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை
முசாபர்நகர், ஏப். 7- நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துவிட்டார். இதன்மூலம் அது சட்டமாகியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள பல்வேறு மகுசூதிகளில் கடந்த 28ஆம் தேதி தொழுகையின்போது மக்கள் கருப்பு பட்டை அணிந்து இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு முசாபர்நகர் நகர நீதிமன்றம் மூலம் தாக்கீது அனுப்பப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமரா மூலம் மற்றவர்களையும் அடையாளம் காணப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக காவல் துறையினர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி விகாஸ் காஷ்யப் இந்த தாக்கீது அனுப்பி உள்ளார்.
வருகிற 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி தலா ரூ.2 லட்சத்துக்கு பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு தாக்கீதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பத்திரப்பதிவு சலுகை:
யார்-யாருக்கு பொருந்தும்?
ரூ.10 லட்சம் வரை சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் 1 விழுக்காடு கட்டண சலுகை அளிக்கப்படு கிறது. இது யாருக்கு பொருந்தும் என பார்க்கலாம். 1) சொத்தை வாங்குபவர் பெண்ணாக இருந்தால் சலுகை கிடைக்கும் 2) கூட்டாக பெண்கள் சேர்ந்து வாங்கினால் சலுகை கிடைக்கும் 3) நிலத்தை பிரித்து தனித்தனியே பெண்கள் பெயரில் பதிந்தாலும் சலுகை பொருந்தும் 4) ஒரே பெண் பெயரில் எத்தனை பத்திரப்பதிவு இருந்தாலும் பொருந்தும்
தீப்பிடிக்கும் ஏ.சி. மக்களே எச்சரிக்கை!
கோடை தீவிரமடையும்போது, குளிரூட்டி சாதனங்கள் வெடிக்கும் விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் ஏசி இயந்திரத்தை சரியாக பராமரிக்காதது தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக ஏசியில் தூசி அதிகம் சேர்வது, மின்சார பழுதுகள் மற்றும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் தான் வெடித்து தீவிபத்து ஏற்பட முக்கிய காரணமாக உள்ளனவாம். ஆகவே, உடனே உங்கள் ஏசியை பராமரியுங்கள்; அச்சமின்றி தூங்குங்கள்
தமிழ்நாடு அமைச்சர்களின் பெயர்களை சொல்லாத மோடி
பாம்பன் பாலத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் விழாவில் பங்கேற்றோரின் பெயர்களை பிரதமர் மோடி கூறுகையில், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, நவாஸ் கனி எம்பி ஆகியோரின் பெயர்களை கூறவில்லை. இது தற்செயலாக நடந்ததா? இல்லையா? எனத் தெரியவில்லை.
ராகுல் காந்தியின் புது வழி
ராகுல் காந்தி பீகாரில் வெள்ளை சட்டை இயக்கத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இளைஞர்கள் தன்னை பெருமளவில் ஆதரிக்க வேண்டும் என கூறி வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில் பீகார் இளைஞர்களின் கஷ்டங்களை உலகறியச் செய்ய வேண்டும். நான் உங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடப்பேன். பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவோம். புதிய பீகாரையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்குவோம் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.