வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

viduthalai
2 Min Read

மதுரை, ஏப். 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. கடந்த 2ஆம் தேதி துவங்கிய மாநாடு இன்றுடன் (ஏப். 6) முடிகிறது. 3ஆம் நாளன்று கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடந்தது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், வக்பு வாரிய திருத்த சட்டம் வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும் சேர்க்க வகை செய்கிறது. இது முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கான அரசியலமைப்பு உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல். சகோதரத்துவத்தை சீர்குலைக்கும். வக்பு சட்டத்தின் பிரிவு 40அய் ரத்து செய்வதன் மூலம், வக்பு சொத்துகளின் தன்மையை தீர்மானிக்கும் அதிகாரத்தை வக்பு வாரியம் இழக்கும்.

நீண்டகால பயன்பாட்டின் மூலம் வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான வக்பு சொத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய ஆணை, அவற்றை பறிமுதல் செய்வதற்கான அரசின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்துகிறது. இந்தத் திருத்தங்கள் மூலம், ஒன்றிய அரசு முஸ்லிம்களின் உரிமைகளை ஒழிப்பதை முன்னெடுத்து வருகிறது. இது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்க, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்து குடிமக்களும் இந்த பிளவுபடுத்தும் வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பின் போது, மக்கள் தொகை பெருக்கத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மாநிலங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கான நியாயமானதும், சீரானதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். எஸ்சி -– எஸ்டி தொகுதிகளுக்கான விகிதம் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லை நிர்ணயம், சமத்துவம், கூட்டாட்சி உள்ளிட்டவை குறித்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்திய தேர்தல் முறையில் உள்ள முறைகேடுகள் அம்பலப் படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தீவிரப் படுத்த வேண்டும்.
இஸ்ரேல் -– பாலஸ்தீன பிரச்சினையில் பாஜ அரசு இஸ்ரேலுடன் சேர்ந்து நிற்கிறது. இந்த பிரச்சினையில் பாலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்கிறோம். பாலஸ்தீன மக்கள் தங்களின் தாய்நாட்டிற்கான போராட்டத்தில் உறுதியாக நிற்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *