பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டிய தமிழ்நாடு!
ஒன்றிய அரசு புள்ளியியல் துறை வெளியிட்ட தகவல்
புதுடில்லி, ஏப்.5 2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்து 9.69% நாட்டிலேயே முதலாம் இடத்தில் உள்ளது.
ஒன்றிய புள்ளியியல் மற்றும் நீட்டி ஆயோக் (திட்ட அம லாக்கத்துறை) மாநிலங்களுக்கு இடையேயான பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) மதிப்பு, 2023-2024–க்கு ரூ.15,71,368 கோடியாக மதிப்பிடப்பட்டது, 2024-2025–க்கு ரூ.17,23,698 கோடி யாக உயர்ந்துள்ளது.
சென்னை பொருளியல் பள்ளியின் (MSE) பொருளாதார நிபுணர்கள் சி.ரங்கராஜன் மற்றும் கே.ஆர். சண்முகம் கடந்த ஆண்டு ஜூலை தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.3% என கணித்திருந்தனர். இந்த நிலையில் அவர்கள் கணித்த தைவிட அதிகமாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு உள்ளது.
செயல்திறன் – வளர்ச்சியால்…
மாநிலத்தின் செயல்திறன் (சேவைகள்) துறையில் 12.7% வளர்ச்சியாலும், தொழில் துறை உள்ளிட்டவைகளில் வளர்ச்சியாலும் இந்தச் சாதனை உயரத்தை அடைந்துள்ளது.
குறிப்பாக, கட்டுமானத்துறை தகவல் தொடர்பு (மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள்) வர்த்தகம், வாகன உதிரிபாகத்தயாரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், உணவகத் தொழில்கள் போன்றவை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
சிறு குறு தொழில் வளர்ச்சி துறை மேனாள் இயக்குநர் முனைவர் சண்முகம் கூறியதாவது:
2032-2033 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர்!
தமிழ்நாடு 2021-2022 முதல் ‘‘தொடர்ந்து 8% அல்லது அதற்கு மேல் உயர்ந்து அடைந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் அது 9.7% என்ற உச்சத்தை பெறும், மேலும் தமிழ்நாட்டில் உற்பத்திப் பொருள் ஏற்றுமதியுடன் சேர்ந்து, 2032-2033 ஆம் ஆண்டில் அது ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரமாக இருக்கும்.
அனைத்து துறைகளும் 0.5 சதவீத புள்ளி அதிகமாக வளர்ந்தால், 2025-26 இல் மாநிலத்தின் வளர்ச்சி சுமார் 10.7% ஆக இருக்கும்’’ என்று அவர் கூறினார்,
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக அதிகமாகும்.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017 – 2018 நிதி யாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59% ஆக இருந்தது. கரோனா நோய்த்தொற்றால் 2020 – 2021 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 0.07% என்ற மிக குறைவான அளவில் இருந்தது. பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா 8.21%, ராஜஸ்தான் 7.82%, அரியானா 7.55% ஆகிய மாநிலங்கள் உள்ளன.