சென்னை, ஏப். 5- வீட்டு வசதி வாரியத்தின் மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர்
அய்.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீடு
கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த அய்.பெரியசாமி, தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீ்ட்டில், அய்பிஎஸ் அதிகாரியான ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு சென்னை திருவான்மியூரில் வீட்டுமனைகளை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார்.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக, அமைச்சர் பெரியசாமி, அய்பிஎஸ் அதிகாரி ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2013இல் அதிமுக ஆட்சியின்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அமைச்சர் பெரியசாமி தவிர மற்றவர்கள் மீதான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியசாமி மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அமைச்சர் பெரியசாமி தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அமைச்சர் அய்.பெரியசாமி தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
அமைச்சராக பதவி வகித்தவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என்ற நிலையில், சட்டப்பேரவை தலைவரிடம் அனுமதி பெறப்பட்டது ஏற்புடையது அல்ல’’ என்று வாதிட்டார். இதையடுத்து, அமைச்சர் அய்.பெரியசாமி மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பண்ருட்டி பலாப்பழம் உள்பட
6 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு!
சென்னை, ஏப். 5- கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு சமீபத்தில் கிடைத்தது.
இந்நிலையில் பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி ஆகிய 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
பண்ருட்டி பலாப்பழம் சுவையில் எப்போதும் சோடை போகாது. மலைப் பிரதேசத்தில் கிடைக்கும் தேன் பலாக்களைப் போன்ற சுவை பண்ருட்டி பலாவில் இருக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். தமிழ்நாட்டின் ‘லெமன் சிட்டி’ என்று தென்காசி மாவட்டம், புளியங்குடி அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு எலுமிச்சை உற்பத்தி இங்கு மிகவும் பிரபலமாக உள்ளது. அதேபோல, புவிசார் குறியீடு பெற்றதன் மூலம் பண்ருட்டி முந்திரி வணிகம் மேம்படவும், அயல்நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கவும் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘சித்திரைக்கார் என்பது ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரிய நெல் ரகம். இப்பகுதியில் சிவப்பு மட்டை, நொருங்கன் என்றும் இதனை அழைப்பர். இந்த நெல் ரகத்தில் கிடைக்கும் அரிசி அதிக நேரம் பசியை தாங்கக்கூடியது, அதிக ஊட்டச்சத்து உடையது, நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளது’’ என்று கூறப்படுகிறது.