புதுடில்லி, ஏப்.4 கடந்த 2024-2025 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரித்து ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் விவரம் மாதந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலைவிட 9.9 விழுக்காடு அதிகம். ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூலில் ஒன்றிய ஜிஎஸ்டியாக ரூ.38,100 கோடி, மாநில ஜிஎஸ்டியாக ரூ.49,900 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 95,900 கோடி மற்றும் ஜிஎஸ்டி செஸ் ரூ.12,300 கோடி வசூலாகி உள்ளது.
இதன்மூலம் கடந்த 2024-2025 நிதியாண்டில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரித்து ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது.
இதில் ரீபண்ட் தொகை போக நிகர ஜிஎஸ்டியாக ரூ.19.56 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் வசூலைவிட 8.6 விழுக்காடு அதிகம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 9.1 விழுக்காடு உயர்ந்து ரூ.1,84 லட்சம் கோடியாகவும், ஜனவரியில் 12.3 விழக்காடு அதிகரித்து ரூ.1.96 லட்சம் கோடியாகவும் இருந்தது. இதன்மூலம் 2024-2025 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ஜிஎஸ்டி வசூல் 10.4 விழுக்காடு அதிகரித்து ரூ.5.8 லட்சம் கோடியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.