பீகாரில் பவுத்தர்கள் தீவிர போராட்டம்
புதுடில்லி, ஏப். 3 பீகார் மாநிலம் புத்த கயாவில் அமைந்துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்குள் உள்ளது. இக்கோயிலை நிர்வகிக்க, மகா போதி கோயில் சட்டம் 1949 (பிஜிடிஏ) அய் பீகார் மாநில அரசு இயற்றியது. இச்சட்டத்தின்படி, மகா போதி கோயிலின் நிர்வாகக் குழுவில் பவுத்தர்கள் மற்றும் இந்துக்கள் தலா 4 பேரை பீகார் அரசு நியமிக்கிறது.
இக்குழுவின் நிரந்தரத் தலைவராக புத்த கயா மாவட்ட ஆட்சியர் இருப்பார். இந்நிலையில், கோயில் நிர்வாகக் குழுவில் இந்துக்கள் இருக்கக் கூடாது. முழு அதிகாரமும் தங்க ளுக்கே அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக பவுத்தர்கள் கோரி வருகின்றனர்.
பவுத்தர்கள் போராட்டம்!
இந்த கோரிக்கையை வலியுறுத்தி 2 மாதங்களாக மீண்டும் பவுத்தர்கள் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மகா போதி கோயில் அகில இந்திய பவுத்தர்கள் சங்கத்தினர் (ஏஅய்பிஎப்) இப்போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். மகா போதி கோயிலில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு வழக்கம் போல் பவுத்தம் அல்லாத அன்றாட நிகழ்வுகள் தொடங்கின. இதை எதிர்த்து பவுத்த துறவிகள் சிலர் கோயில் உள்ளேயே பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கப்பட்டது.
இதையடுத்து ஏஅய்பிஎப் அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மகா போதி கோயிலின் நிர்வாகம் 13 ஆம் நூற்றாண்டு வரை பவுத்தர்களின் கைகளில் இருந்தது. இது துருக்கிய படையெடுப்பாளர்களின் வருகைக்குப் பிறகும், 1590 இல் கயாவில் மஹந்த் கமாண்டி கிரி என்ற துறவி வரும் வரையிலும், அதன் நிர்வாகத்தில் யார் இருந்தார்கள் என்பது தெரியவில்லை.
மஹந்த் கமாண்டி கிரி, மகாபோதி கோயிலில் புத்த கயா மடாலயத்தை நிறுவினார்.
இந்து மடமா?
அதன் பிறகு அந்த மடாலயம் ஒரு இந்து மடமாக மாறியது. கிரியின் சந்ததியினர் இன்னும் மகா போதி கோயிலின் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளனர். மகாபோதி கோயிலை ஒரு இந்து மதத் தலம் என்று இந்துக்கள் அழைக்கின்றனர்.
இதற்கு விஷ்ணுவின் 9 ஆவது அவதாரமாக கவுதம புத்தரை இந்துக்கள் கருதுவதுதான் காரணம். கடந்த 2002 ஆம் ஆண்டு மகா போதி கோயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தகுதியை வழங்கியது. மகா போதி கோயிலை பவுத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை 19 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. இந்த இயக்கம் இலங்கை துறவி அனகாரிக தர்மபாலரால் தொடங்கப்பட்டது. அப்போது, மகா போதி கோயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்து பூசாரிகளுக்கு எதிராக அவர் நீதிமன்றம் சென்றார்.
இதையடுத்து 1949 ஆம் ஆண்டு பீகார் பேரவை மகா போதி கோயில் சட்டம் 1949 அய் இயற்றியது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 இன் கீழ் மகா போதி கோயிலும் வருகிறது. இதன் காரணமாக கோயில் நிர்வாகத்திலும் எந்த மாற்றமும் செய்ய முடியாது. இதை எதிர்த்தும் 2 பவுத்த துறவிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.