ஒரு பெண் தனக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுத்தால், கூலிப்படையை ஏவி கொல்லுகிறார்கள்!
ஆணவக் கொலையை எதிர்த்து ஒரு பெரிய இயக்கம் நடத்தவேண்டும்!
தலைமுறையைக் காப்பாற்றுகின்ற இயக்கம் – மனிதநேயத்தைக் காப்பாற்றுகின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்!
சிட்னி, ஏப். 2 ஒரு பெண் வளர்ந்து, படித்து, ஆளாகி, தன்னுடைய உரிமைகளைப் பெறுகின்ற நேரத்தில், தனக்கு ஏற்ற துணையை, விரும்பிய துணையைத் தேடுகிறார்கள் என்று சொன்னால், அவர்களை எப்படி யாவது கூலிப்படையை வைத்தாவது அழிக்கவேண்டும்; ஆணவக் கொலை செய்யவேண்டும் என்கிற எண்ணம் – இன்னமும் அந்த சூழ்நிலை எங்களுடைய நாட்டில் இருக்கிறது. அதனை எதிர்த்து ஒரு பெரிய இயக்கம் நடத்தவேண்டும். எனவே, தலைமுறையைக் காப்பாற்றுகின்ற ஓர் இயக்கம் – மனிதநேயத்தைக் காப்பாற்றுகின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை!
கடந்த 15.3.2025 அன்று ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் உள்ள வென்ட்வொர்த்வில்லே அரங்கில், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
என் அருமை உறவுகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மண்ணின் மைந்தர்களுக்கு…
ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க உரிமை யாளர்களும், காப்பாளர்களுமான இம்மண்ணின் மைந்தர்களுக்கும், இதுவரையில் இருந்த, வாழ்ந்த, இப்போதும் வாழுகின்ற, எதிர்காலத்தில் வரவிருக்கின்ற பழங்குடி மக்களாக இருக்கின்ற மூத்தோர்களுக்கும் எங்களுடைய நன்றியையும், வணக்கத்தையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அருமையான நிகழ்ச்சியில், நீண்ட விருப்பங்கள் இன்றைக்கு எங்களுக்கு நிறைவேறுகின்றன.
உங்களையெல்லாம் சந்திக்கின்றபோது, ஒன்றை நான் எடுத்த எடுப்பிலேயே தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
உறவுகளாகப் பார்க்கின்ற உணர்ச்சிதான் ஏற்படுகின்றது!
எங்களுடைய உறவுகளைச் சந்திப்பதற்காக இங்கே வந்திருக்கின்றோம். நண்பர்களாகக்கூட அல்ல, உறவு களாகப் பார்க்கின்ற உணர்ச்சிதான் ஏற்படுகின்றது.
‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்பதற்கு என்ன பொருள்?
யாவரும் கேளிர் என்று சொல்லும்போது, நட்பு அல்ல; உறவு.
தலைதாழ்ந்த வணக்கம் – நன்றி!
ஆகவேதான், அந்த உறவுகளைச் சந்திக்கின்றபோது, ஒரு நீண்ட கால ஆசைக்குப் பின்னால், விருப்பத்திற்குப் பின்னால், அது நிறைவேறுகின்றபோது, நீங்கள் வேறு நாட்டவர்கள் அல்ல; நாட்டின் எல்லைகள் நம்மைப் பிரித்திருக்கலாம்; கண்டங்கள் பிரித்திருக்கலாம். ஆனால், நம்முடைய உணர்வுகள், நம்முடைய இலக்குகள், நம்முடைய உறவுகள் நம்மை எப்போதும் இணைத்திருக்கின்றன. இந்த வாய்ப்பைத் தந்திருக்கக் கூடிய பெரியார்- அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டத்தைச் சார்ந்த அத்துணை பேருக்கும், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்ற உங்களைப் போன்ற பெருமக்களுக்கும், இந்த அறிவார்ந்த அவையினருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தையும், மிகுந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே நான் வரும்போது ஒரு நண்பர் என்னி டம், “அய்யா, நான் உங்களை கொழும்புவில் சந்தித்தி ருக்கிறேன்’’ என்றார்.
நான் கொழும்புவிற்குச் சென்றது 47 ஆண்டுகளுக்கு முன்னால். அதற்குப் பிறகு அந்த எண்ணத்தோடு இன்றைக்கு வருகிறார் என்று சொன்னால், இதற்கு உறவு என்று சொன்னால், இதுதான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது.
எது நம்மைப் பிரித்தாலும், நம்முடைய பண்பாடு நம்மை இணைக்கிறது!
எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு, பல நாடுகளிலிருந்து வந்திருக்கக்கூடியவர்கள் இங்கே இருக்கிறீர்கள். மதங்கள் நம்மைப் பிரிக்கலாம்; நாட்டு எல்லைகள் பிரிக்கலாம்; கடவுள்கள் பிரிக்கலாம். ஆனால், நம்முடைய பண்பாடு நம்மை இணைக்கிறது; தமிழ் நம்மை இணைக்கிறது என்ற அடிப்படையில்தான், தன்மானம் நம்மை இணைக்கிறது என்ப தற்காகத்தான், மனிதநேயம் நம்மை இணைக்கிறது என்பதற்காகத்தான், நாம் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதற்கு உரிமை உடையவராகின்றோம்.
இன்றைக்கு உலக மகளிர் நாள். இங்கே நம்முடைய துர்கா அவர்கள் ஒரு போர் முழக்கம் செய்தார்கள். அதை வெறும் பேச்சென்று சொல்லமாட்டேன். ஒர் அறை கூவல்!
பெண்கள் எப்படி அடக்கப்பட்டார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு ஓர் உதாரணத்தைச் சொன்னார்கள்.
14 வயதில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்ப்பதற்காக எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை அவர் குறிப்பிட்டார்.
பரவாயில்லை, நீங்கள் அந்த வயதில், ஒரு எம்.பி.யைப் பார்ப்பதற்காகத்தான் சிரமப்பட்டீர்கள். ஆனால், எங்கள் இயக்கம் ஏன் தோன்றியது? ஏன் பெரியார் தோன்றினார் என்றால், அருகில் இருப்பவர்களைக்கூட பெண்கள் பார்க்க முடியாத அளவிற்குப் பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் நெருங்கக்கூடாது என்று சொன்னார்கள்.
பெரியார் – அம்பேத்கர் ஆகியோருடைய தனிச் சிறப்பு!
பெரியாருடைய இயக்கத்தைப்பற்றி சொன்னார்கள். நான் சற்று முன்னால்கூட அம்மையார் அவர்களிடத்தில் சொன்னேன். பெரியாருடைய தொண்டைப்பற்றி, இந்த இயக்கத்தைப்பற்றியும், சொன்னேன். பெரியார் – அம்பேத்கர் ஆகியோருடைய தனிச் சிறப்பு என்னவென்றால், மனிதநேயம்தான்.
மனிதர்கள் அனைவரும் உறவினர். அனை வரும் உறவினர் என்ற அந்த உணர்வை உரு வாக்கவேண்டும்.
மகிழ்நன் அண்ணாமலை!
தந்தை பெரியார் அவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது, முதல் கொள்கையாக இருந்தது எது? இங்கே பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டத்திற்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள்? ஏன் அது இந்த நாட்டிற்குப் பொருத்தம்? என்பதைப்பற்றி நம்முடைய தலைவர் மகிழ்நன் அண்ணாமலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கிச் சொன்னார்.
பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தின் முதல் கொள்கை என்னவென்றால், மானிடத்தில், மனித சமுதாயத்தில், மனித குலத்தில் ஒருபோதும் வேறுபாடு இருக்கக்கூடாது. பிறவி பேதம் இருக்கக்கூடாது.
சுயமரியாதை இயக்கம் எப்படி உருவானது?
நீங்களெல்லாம் நன்றி உணர்ச்சியோடு வந்திருக்கிறீர்கள்!
இங்கே பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள். அந்த இயக்கத்தினால் பயனடைந்தவர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். பயனடைந்தவர்கள் என்பதைவிட, உங்களைப் பாராட்ட வேண்டிய ஓர் அற்புதமான செய்தி என்னவென்று சொன்னால், நன்றி உணர்ச்சியோடு இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள்.
பெரியார் என்ற அந்த மாமனிதர் பிறக்கவில்லை யானால், நாமெல்லாம் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா?
அரசியல்வாதிகள் அல்ல நாங்கள். அடுத்தத் தலை முறையைப்பற்றிச் சிந்தித்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
ஒரு தலைமுறை அடிமைத் தலைமுறையாக இருக்கவேண்டுமா? என்றார்.
மனிதப் பற்று – வளர்ச்சிப் பற்று!
தனக்கு எந்தப் பற்றும் இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.
மதப் பற்று, கடவுள் பற்று போன்றவையெல்லாம் எனக்கு இல்லை; ஒரே ஒரு பற்றுதான் – அதுதான் மனிதப் பற்று – வளர்ச்சிப் பற்று என்றார்.
இதைத்தான் அம்பேத்கரும் சொன்னார்.
மானிடத்தில் பரப்பு எல்லை கிடையாது. நாடுகள் பிரிக்கக் கூடாது; பிரிக்கவும் முடியாது.
பிறவி பேதம் என்று சொல்லும்போது மிக முக்கிய மான ஒன்றைச் சுட்டிக்காட்டினார். ஆண் – பெண் பேதம்.
ஆண் – பெண் என்று சொல்லும்போது, பெண்ணை அவர்கள் எவ்வளவு கொச்சைப்படுத்தினார்கள்.
மனித உரிமை என்று சொல்வதுதான் சரியானது!
இன்னமும் இந்த சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயம்.
‘பெண்ணியம்’ என்று சொல்வதைக்கூட, தந்தை பெரியார் அவர்கள் ஏற்பதில்லை.
பெண்ணுரிமை என்பதைவிட, ஆண் உரிமை என்பதைவிட, மனித உரிமை என்று சொல்வதுதான் சரியானது.
பெண்கள் என்று சொல்லும்போது, இவ்வளவு வளர்ந்திருக்கின்ற நாட்டில், பெண்களுக்கு இன்னும் வாய்ப்பில்லை என்கிறபோது, எங்கள் நாட்டை அடிப்படையாகக் கொண்டு நான் சொல்கிறேன். அதற்குப் பல்வேறு காரணங்களைச் சொன்னார்கள். பெண்களைக் கொச்சைப்படுத்தினார்கள்?
நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, இந்த மேடையில் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு மகளிர் நாள். அவர்கள் பேசுவதுதான் நியாயமானதாகும். ஏதோ ஒரு ஆணுக்கு இருக்கட்டுமே வாய்ப்பு என்று என்னைப் பேச வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி!
பெண்கள் என்று சொன்னால், இன்னமும் சமையல் அறை பணியாளர்களாகத்தான் பார்க்கிறார்கள் என்று மிக அழகாகச் சொன்னார் துர்கா அவர்கள்.
பொதுவாக எங்களுடைய நாட்டில், துர்காக்கள் எங்களை நெருங்கமாட்டார்கள். அவர்களுக்கு எங்களைப் பிடிக்காது. ஆனால், எங்களுக்கு எல்லோரையும் பிடிக்கும்.
பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டத்தினுடைய வெற்றி!
ஆனால், துர்காவோ, கிருஷ்ணாவோ அங்கே வருவதில்லை. ஆனால், இங்கே கிருஷ்ணாவும் இருக்கிறார்; துர்காவும் இருக்கிறார். இதுதான் பெரியார் – அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டத்தி னுடைய வெற்றியாகும்.
நாடு, எல்லை எல்லாவற்றையும் தாண்டி, இது ஒரு பண்பாட்டு இயக்கம். பண்பாட்டுப் பாதுகாப்பு இயக்கம். மனித உரிமையை நிலைநாட்டுகின்ற இயக்கம்.
அருமைச் சகோதரி துர்கா!
இங்கே அழகாக ஒன்றைச் சொன்னார்கள். குறிப்பாக நம்முடைய அருமைச் சகோதரி துர்கா அவர்கள் சொன்னார்.
இந்த இயக்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது? ஏன், எல்லோரும் பெரியார், பெரியார் என்று சொல்லுகி றார்களே, பெரியாருக்கு என்ன அவசியம்? என்று சொன்னால், இன்னமும் இந்த இயக்கம் இருந்த மண்ணில் என்ன சூழ்நிலை என்று சொன்னால், மற்ற உரிமைகளுக்காகப் பெண்கள் போராடுவது என்பது பிறகு. பிறப்பதற்கே அவர்களுக்கு உரிமை இல்லை.
பிறப்பதற்கே அவர்கள் போராடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். கருவில் பார்த்துவிட்டு, பெண் குழந்தை என்றால், அழித்துவிடுகிறார்கள்.
வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இருந்த சூழல் வேறு. பெண் குழந்தை பிறந்தால், அதனுடைய கழுத்தைத் திருகி, கங்கையில் எறிந்தார்கள்.
வங்காளத்தில் பயிர்கள் நன்றாக வளரவேண்டும் என்று சொன்னால், பெண் குழந்தையை நரபலி கொடுத்தால்தான் பயிர்கள் நன்றாக வளரும் என்ற நிலை இருந்தது.
தனியே ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள்!
நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை; சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலை இதுதான். வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு இதற்காக தனியே ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள்.
இது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை எண்ணிப் பாருங்கள்.
இன்னமும்கூட, பெண் குழந்தை பிறக்கிறதா, அதற்கு வரவேற்பு கிடையாது. இரண்டாந்தர குடிமக்கள் மட்டுமல்ல, நாலாந்தர குடிமக்களும்கூட, அவர்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடக்கிறார்கள்.
மனிதநேயத்தைக் காப்பாற்றுகின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்!
நாயைக் கொஞ்சுகிறார்கள்; பூனையைக் கொஞ்சுகிறார்கள்; பெண் பிள்ளையான மகளைக் கொஞ்சுவதில்லை அவர்கள்.
அந்தப் பெண் வளர்ந்து, படித்து, ஆளாகி, தன்னுடைய உரிமைகளைப் பெறுகின்ற நேரத்தில், தனக்கு ஏற்ற துணையை, விரும்பிய துணையைத் தேடுகிறார்கள் என்று சொன்னால், அவர்களை எப்படியாவது கூலிப் படையை வைத்தாவது அழிக்கவேண்டும்; ஆணவக் கொலை செய்யவேண்டும் என்கிற எண்ணம் – இன்னமும் அந்த சூழ்நிலை எங்களுடைய நாட்டில் இருக்கிறது. அதனை எதிர்த்து ஒரு பெரிய இயக்கம் நடத்தவேண்டும்.
எனவே, தலைமுறையைக் காப்பாற்றுகின்ற ஓர் இயக்கம் – மனிதநேயத்தைக் காப்பாற்றுகின்ற இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.
(தொடரும்)