செல்வப் பெருந்தகை அறிவிப்பு
சென்னை, ஏப்.2- வருகிற 6ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொறுப்பேற்றதிலி ருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது. ஹிந்தி திணிப்பு, மும் மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்க ளுக்கு பேரிடர் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது போன் றவற்றை செய்து வருகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.
இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு 6-ஆம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்குக் கன்னித் தன்மை சோதனை கட்டாயப்படுத்தக்கூடாது
சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் உத்தரவு
பிலாஸ்பூா், ஏப்.2 கன்னித்தன்மை பரிசோதனை மேற் கொள்ள பெண் களைக் கட்டாயப் படுத்துவது அரச மைப்புச் சட்டப் பிரிவு 21-அய் மீறுவ தாகும் என்று சத் தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கன்னித்தன்மை
இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில் மனுதாரா் ஒருவா் தாக்கல் செய்த மனுவில், ‘திருமணத்துக்குப் பிறகு நானும் எனது மனைவியும் பாலுறவு கொள்ளவில்லை. எனது மனைவிக்கு அவரின் உறவினருடன் முறையற்ற உறவு இருந்தது. எனவே, எனது மனைவியிடம் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமாா் வா்மா கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு வாழ்வுரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமின்றி கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையையும் வழங்குகிறது. இந்த உரிமை பெண்களுக்கு மிகவும் முக்கியம்.
கன்னித்தன்மையைப் பரிசோதிக்க எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். அடிப்படை உரிமைகளின் மிக முக்கிய அங்கமாக அந்தச் சட்டப் பிரிவு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தீா்ப்பளித்தார்.
தொழில் நுட்பத்தால்
உயிர் பிழைக்கும் பேருயிர்கள்
கோவை – பாலக்காடு ரயில் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக யானைகள் ஏதும் உயிரிழக்கவில்லை என்று ரயில்வே நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அடர்ந்த காடுகளைக் கொண்ட இந்த வழித்தடத்தில் அவ்வப்போது யானைகள் ரயிலில் அடிபடுவதுண்டு. அதனை தடுக்கும் வகையில், அதிநவீன கேமரா கோபுரங்கள் உள்ளிட்டவற்றுடன் எடுக்கப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கைகள் பலனளித்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.
காற்று மாசாலும் மாரடைப்பு வரும்
காற்று மாசுபாட்டால் மாரடைப்பு வரும் ஆபத்து உள்ளதாக சீனாவின் ஃபூடான் பல்கலை., ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்றுமாசை ஏற்படுத்தும் துகள்களை சுவாசிக்க நேரிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே மாரடைப்பு ஏற்படலாம். அந்த அளவுக்கு காற்றுமாசு ஆபத்தானது என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நுண்ணிய துகள்கள் தான் இதற்கு காரணமாம்.