சென்னை, ஏப்.2 உச்ச நீதிமன்றம் மற்றும் 22 உயர்நீதிமன்றங்களில் 1½ லட்சம் அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவமதிப்பு வழக்கு
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படுதல், நீதிமன்றத்தில் அவமரியாதையாக நடந்துகொள்ளுதல், நீதிமன்றத்தின் செயல்பாட்டில் இடையூறு செய்தல், அதன் அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல் அல்லது எழுதுதல், செயல்பாட்டை தடுக்கும் வகையில் செயல்படுதல் போன்றவை நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பொறுத்தமட்டில் சிவில் மற்றும் கிரிமினல் என 2 வகைகள் உள்ளன. இதில் சிவில் அவமதிப்பு என்பது நீதிமன்றம் உத்தரவுகளை மீறும் செயல்களாகும். கிரிமினல் அவமதிப்பு என்பது நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவமதிக்கும் அல்லது குறைக்கும் செயல்களாகவும் இருக்கின்றன.
உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்புக்குரிய செயல்களை செய்தவர்க ளுக்கு, அந்த வழக்கின் தன்மைக்கேற்ப அபராதம், சிறைத்தண்டனை அல்லது அந்த இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதம் 20ஆம் தேதி வரையி லான நிலவரப்படி உச்ச நீதிமன்றத் தில் 1,852 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல சென்னை, குஜராத் மற்றும் பாட்னா உயர்நீதிமன்றங்கள் நீங்கலாக சுத்தா, தெலங்கானா, கவுகாத்தி, ஆந்திரா, சத்தீஷ்கார். டில்லி, இமாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக், ஜார்கண்ட், கருநாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா. பஞ்சாப் மற்றும் அரியானா, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் ஒடிசா ஆகிய 22 நீதிமன்றங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 573 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் கடந்த மாதம் 24-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நிலுவையில் இருக்கின்றன.’
அவமதிப்பு வழக்குகளை எங்கு அதிகம்?
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 24 ஆயிரத்து 886 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதற்கு அடுத்தபடி யாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 24 ஆயிரத்து 376 வழக்குகளும் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் 15 ஆயிரத்து 679 வழக்குகளும், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் 13 ஆயிரத்து 957 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.
குஜராத் சென்னை மற்றும் பாட்னா உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பான விவரங்கள் தேசிய நீதித்துறை தரவுதளத்தில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் மற்றும் 22 உயர்நீதிமன்றங்களில் ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 425 அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.