சென்னை, ஏப். 1 விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
விகடன் இணையதளம்
அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்புக்கு அருகில் பிரதமா் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமா்ந்திருப்பதைப் போன்று காா்ட்டூன் விகடனின் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’-இல் வெளியிடப்பட்டது.
இந்த காா்ட்டூன் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் ஜன.15-ஆம் தேதி முடக்கப்பட்டது. இந்த நிலையில், தொலைத் தொடா்புத் துறைக்கு ஒன்றிய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியா வில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத் தில் விகடன் நிறுவனம் சாா்பில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவா்த்தி முன்பு நடைபெற்றது. அப்போது, விகடன் இணையதளம் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா், பத்திரிகை சுதந்திரத்தை யாரும் தடுக்க கூடாது. இந்தப் படத்தால் இந்தியா அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உள் நோக்கத்துடன் இந்தப் படம் வெளியிடப் படவில்லை. வேண்டு மென்றே இணையதளம் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், விகடன் நிறுவனம் தாமாக முன்வந்து அந்த படத்தை நீக்க தயாராக இருந்தால் முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விகடன் இணையதளம் பிரதமரின் ஆட்சேபனைக்குரிய படத்தை நீக்கிய பின் அதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதை ஏற்று முடக்கப்பட்ட விகடன் இணையதளத்தை விடுவிக்க வேண்டும் என கூறி வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தாா்.