புதுடில்லி, ஏப்.1- தங்கத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு, புதுப்புது உயரங்களை எட்டி வருகிறது.
உலகிலேயே அதிக தங்கம் இருப்புகளை கொண்ட ‘டாப் 10′ மத்திய வங்கிகளை காட்டிலும், இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கம் இருப்பு அதிகம் என, எச்.எஸ்.பி.சி., நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய குடும்பங்களின் தங்கம் இருப்பு
இந்திய குடும்பங்களின் தங்கம் இருப்பு 25,000 டன். இது அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு, ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, இந்தியா, ஜப்பான், துருக்கி ஆகிய 10 நாடுகளுடைய மத்திய வங்கிகளின் இருப்பை காட்டிலும் அதிகமாகும்.
இவற்றில் அதிக பட்சமாக அமெரிக்க மத்திய வங்கியிடம் 8,133 டன் தங்கம் இருப்பு உள்ளது. இதற்கு அடுத்த படியாக ஜெர்மனி மத்திய வங்கியிடம் 3,300 டன் இருப்பு உள்ளது. கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் தங்கம் இருப்பு 876.18 டன்னாக உள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.
கடந்த 2022 முதல், தொடர்ந்து மூன்று ஆண்டு களாக, உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் இருப்பு 1,000 டன்னுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
நிச்சயமற்ற சூழலில் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுவதால், தங்கம்த்தின் மீதான வங்கிகளின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த 1990களுக்குப் பின், ரிசர்வ் வங்கி கடந்தாண்டு முதல் முறையாக இங்கிலாந்தில் இருந்து 100 டன்னுக்கும் கூடுதலான தங்கம்த்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
2024 டிசம்பர்
நிலவரம்
மத்திய வங்கிகளில் தங்கம் இருப்பு (டன்களில்). அமெரிக்கா 8,133, ஜெர்மனி 3,300, இத்தாலி 2,452, பிரான்சு 2,437, ரஷ்யா 2,332, சீனா 2,280, சுவிட்சர்லாந்து 1,040, இந்தியா 876, ஜப்பான் 846, துருக்கி 615, மொத்தம் 24,311.