நீலகிரி – கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் ‘இ–பாஸ்’ சோதனை

viduthalai
2 Min Read

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

ஊட்டி, ஏப்.1 நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களூக்கு இன்று (1.4.2025) முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கட்டுப்பாடு

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கபட்டு உள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி (அதாவது இன்று) முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாடு விதித்தது.

அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்பட 14 சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. நீலகிரி வர விரும்புபவர்கள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

கொடைக்கானலிலும்..

இதேபோல் கொடைக்கானலிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உள்ளூர் வாகனங்களை தவிர தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.
எனவே கொடைக்கானல் நுழைவுவாயில் காமக்காபட்டி காவல்துறை சோதனைச்சாவடி, பழனி வழியாக அய்யும்புள்ளி சோதனைச்சாவடி ஆகிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் இ-பாஸ் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே வாகன நெரிசலை தவிர்க்க கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதனால் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தடுக்கப்படும்.

இதுதவிர அப்சர்வேட்டரி, ரோஸ் கார்டன், பிரையண்ட் பூங்கா சாலை ஆகிய பகுதிகளிலும் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்களும், காலி இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தமும் அமைக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் கியூ.ஆர்.கோடு வசதி செய்யப்பட்டுள்ளது என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *