மதுரை, ஜூலை 7- மதுரை மாநகர், புற நகர் மாவட்ட கருஞ்சட்டைக் குடும்பங்களின் சங்கமம் 24.06.2023 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெற்றது.
குடும்ப விழா என்றால் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவே வேண்டுமே..மதுரை கல்வி வள்ளல், உலகப் பெரியார் தொண்டர் எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அழைக்கப்பட்ட பே. தேவ சகாயம் அவர்களால் உருவாக்கப்பட்ட ,அவரின் பெயரில் அமைந்த தேவசகாயம் மேல் நிலைப்பள்ளியில்தான் குடும்ப விழா நடைபெற்றது.அந்தப் பள்ளியின் இன்றைய தாளாளர் கல்வியாளர் தே.எடிசன்ராஜா இடத்தைக் கொடுத்து நிகழ்ச்சி நன்றாக அமைய அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
காலை 10 மணிக்கு முன் குடும்ப விழா விற்கு வந்த ஒவ்வொரு கருஞ்சட்டைக் குடும் பத்தினரும் மற்ற கருஞ்சட்டைக் குடும்பத் தோழர்,தோழியர்களைப் பார்த்து நலம் விசாரித்து கலகலவெனப் பேசிக்கொண்டிருந் தனர்.காலை 10 மணிக்கு முதல் நிகழ்வாக பாடவரலாம் எனும் நிகழ்ச்சி தொடங்கியது.பாட வரலாம் நிகழ்ச்சியைத் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் கழகக் கொள்கைப் பாடலைப் பாடி துவக்கி வைத்தார். பேக்கரிகண்ணன் நாகராணி செல்வங்கள் நா.க.அமுதசிறீ, நா.க. சீர்த்தி ஆகியோர் ‘உலகாளும் கொள்கை தானுங்க’ பாடலை இசையுடன் இணைந்து பாடி னார் ,அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவி ஆஷாபாலா பெரியாரின் தொண் டறத்தை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
மகிழ்வுடன் வாழ
கலந்து உரையாடல் நிகழ்ச்சியில் ‘மகிழ் வுடன் வாழ’ என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா மகேந்திரன் உரையாற்றினார். ஏறத்தாழ 75 நிமிடங்கள் மிகச்சிறப்பான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்தது.
மதுரை மருத்துவக்கல்லூரியில் பேராசிரி யராகப் பணியாற்றும் மருத்துவர் கி.பாரதி ‘நலமுடன் வாழ’ என்னும் தலைப்பில் உரை யாற்றினார். உடல், உணவு, நோய்கள் குறித்து பல கருத்துகளை கூறிப் பின்பு பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதி லும் விளக்கங்களும் அளித்தார்.
துணிவுடன் வாழ
திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் ,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சே.மெ.மதிவதினி ‘துணிவுடன் வாழ ‘ என்னும் தலைப்பில் உரையாற்றினார்.அவர் தனது உரையில் தந்தை பெரியார் அவர்களின் துணிச்சலை,திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் துணிச்சலை எல்லாம் எடுத்துக்காட்டுக ளோடு பெரியாரியல் நம்மை துணிச்சல் மிக்கவர்களாக ஆக்குகிறது எனக் குறிப் பிட்டார். பொதுவாழ்விற்கு வருவதால் படிப்பு ஒன்றும் கெட்டுவிடாது என்பதனை மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார். அய்யா ஆசிரியர் அவர்கள் இளம் வயதில் எத்தனை மேடைப்பேச்சுகள், பொது வாழ்க்கை. அப்படி இருந்தாலும் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர் என்பதைக் குறிப்பிட்டார். எனது வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையால் எனது படிப்புக் கெடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிட்டார். இந்தப் பாதை சறுக்கலானனது, ஆனால் காலை அழுத்தி நடப்பேன் என்பன போன்ற மிக ஆழமான கருத்துகளாலும் ,அவ்வப் போது உரையின் இடையில் மெல்லிய நகைச்சுவையையும் இணைத்து கருஞ்சட்டைக் குடும்பத்தினரைத் தன் பேச்சால் கவர்ந்து பெரியாரியல் கருத்துகளை விளக்கினார்.
மதிய உணவு வேலைக்குப் பின் அறிஞர் அண்ணா அவர்களின் ‘நீதி தேவன் மயக்கம் ‘ நாடகப் பதிவு திரையிடப்பட்டது.நெல்லை ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் நடித்திருந்த,பகுத்தறிவாளர்-கல்வியாளர் ஆலடி எழில்வாணனின் வழிகாட்டலில் நடிக்கப்பட்ட நாடகம். மிகச்சிறப்பாக இருந்தது.
மடமை நீங்கி வாழ
‘மடமை நீங்கி வாழ’ என்னும் தலைப்பில் நம்மைப் பாதிக்கும் கடவுள், ஜாதகம், ஜோதிடம், ஜாதி போன்ற மடமைகளிலிருந்து நீங்கி வாழ தந்தை பெரியாரின் கொள்கை எப்படிப் பயன்படுகிறது,சிறப்பாக மனிதர் கள் வாழ தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனை கள் எப்படி உதவுகிறது என்பதை விளக்கி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.
மதியம் 3.30 மணிக்கு ‘புத்துணர்வுடன் வாழ்’ என்னும் தலைப்பில் விளையாட்டு களுடன் கூடிய வகுப்பினை உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா நிகழ்த்தினார். விளையாட்டுகளின் ஒருங்கிணைப்பில் சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் சி.மனோகரனின் தங்கை பேரா.மனோரஞ்சிதம் இணையர் மருத்துவர் திருநாவுக்கரசு ஒத்துழைத்து நிகழ்வைச் சிறப்பாக்கினர்.
மாலை 4.30 மணிக்கு தேநீரோடு நிகழ்வு நிறைவுற்றபோது,ஒவ்வொரு கருஞ்சட்டை குடும்ப உறுப்பினருக்கும் கிடைத்த புத்து ணர்ச்சியும் நிறைவும் அளப்பரியது.மறு நாள் தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம் அவர்களுக்கு சுதா என்பவர் அனுப்பி இருந்த வாட்செட் செய் தியே இதற்கு சான்று.
அன்புள்ள செல்வம் மாமா அவர்களுக்கு, நான் சுபா.தொடக்கமாக நான் சொல்வது ,இது உண்மையிலேயே மிக நல்ல முயற்சி.இவ்வளவு பேர் அதிலும் இத்தனை பெண் கள் நம் கொள்கையோடும் நம் மனப்பான் மையோடும் மதுரையில் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்மணியையும் குழந்தையையும் பார்த்தபோது மிகப்பெரும் மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் இது பெரியார் கொள்கை பேசும் கூட்டம் எனத்தெரிந்து வைத்திருந் தனர். சிலருக்கு கருத்து மாறுபாடு இருந் திருக்கலாம் இருந்தாலும் மிக ஆர்வத்தோடு நிகழ்வுகளில் கலந்து கொண்டார் கள், மிகப்பொறுமையாக எல்லா உரைகளையும் கேட்டார்கள். எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி எதில் என்றால் என் வயதில் உள்ள பலர் கலந்து கொண்டதைப் பார்த்ததுதான், அதிலும் வெவ்வேறு சூழல்களிலிருந்து அவர்கள் வந்திருந்தனர்.
வரும் காலங்களிலும் இது போன்ற கூட்டங்களை நீங்கள் நடத்துவீர்கள் என்று நம்புகிறேன். தாத்தா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் உங்களைப் போன்றவர் களின் உழைப்பினால் அந்தக் கூட்டத்தில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொள்ள முடிந்தது. மிக நல்ல வேலை தொடர்ந்து செல்லுங்கள்.
இந்த நிகழ்வின் வெற்றிக்குப் பலரும் காரணமாக அமைந்தனர். போட்டோ இராதா காணொலி திரை, புரொஜெக்டர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். திராவிடர் கழக மாவட்டசெயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் நிகழ்வினைத் தொகுத்து வழங்கியதோடு உணவுக்கான ஏற்பாட் டையும், நாடகத் திரையிடல் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார். மூத்த பெரியார் தொண்டர்களை எல்லாம் நிகழ்விற்கு பெருந்திரளாக வரவைப்பதற்கு தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வமும், நா. முருகேசனும், புறநகர் மாவட்ட பொறுப் பாளர்களும் பெருமுயற்சி எடுத்தனர். ஒரு நாள் முழுவதும் அமர்ந் திருந்து புது உற்சாகம் பெற்றோம் என்று பெரியார் பெருந்தொண்டர்கள் காசி விசுவநாதன், அம்மா இராஜம், அங்கமுத்து ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு சிறப்புற அமைய மாநில வழக்குரைஞரணி செயலாளர் வழக்கறிஞர் மு.சித்தார்த்தன், வழக்குரைஞர் நா.கணேசன், மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், காப்பளர் சே.முனியசாமி, களப்பணியில் பொ.பவுன்ராசு, பேக்கரி கண்ணன், மகளிர் பாசறை க.நாகராணி, மகளிர் அணி அல்லி ராணி, புற நகர் மகளிரணி பாக்யலட்சுமி, த.ம.எரிமலை,பா.முத்துக்கருப்பன்,பெ.காசி, ஜெ.பாலா,திராவிடர் தமிழர் பேரவை ஸ்டுடியொ சரவணன்,பீபிகுளம் சுரேசு எனப்பலரும் ஒத்துழைப்பு அளித்தனர். நிகழ்வில் கலந்து கொண்டகருஞ்சட்டைத் தோழர்கள் அனைவரும்தம் இல்லத்தில் நடைபெறும் விழாவாகக் கருதி நன்கொடை களை நிகழ்ச்சி சிறக்க மகிழ்வுடன் வழங் கினார்கள். தலைமைக் கழக அமைப்பாளர் செல்வம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற கருஞ்சட்டைக் குடும்பங்களின் சங்கமம் ஒரு புதிய நம்பிக்கையை,உற்சாகத்தை மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தோழர்களுக்கு அளித்துள்ளது.