கொளத்தூர், மார்ச் 31- சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைத் திட்டங்களை எடுத்துக்கூறியும், கொளத்தூர் தொகுதி – பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குப் பெரியார் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு – நன்றி தெரிவித்தும் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் வடசென்னை திராவிடர் கழகம் சார்பில் 26.3.2025 அன்று மாலை 6.30 மணியளவில் கொளத்தூர் குமரன் நகர் மெயின் ரோடு கங்கா ஓட்டல் அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இத்தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத் திற்கு வடசென்னை மாவட்ட கழக துணைத் தலைவர் நா.பார்த்திபன் தலைமை வகித்தார். திராவிட மகளிர் பாசறை த.மரகதமணி வரவேற்புரையாற்றினார். மாநில கழக இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தொடக்கவுரையாற்றினார்.
கழக தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.செ.கணேசன், தங்க.தனலட்சுமி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், அமைப்பாளர் சி.பாசுகர் முன்னிலை வகித்தனர்
வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கொளத்தூர் பகுதி கழக அமைப்பாளர் ச.இராசேந்திரன், பெரம்பூர் – செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், அருட்பணி த.இராஜன் இம்மானுவேல், பேச்சாளர் மழவை சு.பெ.தமிழமுதன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றுகையில், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்று தொடாந்து அதன் நீட்சியாக இன்று தி.மு.க. செயல்பட்டு வருகின்றது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறை வுற்ற பிறகு தி.மு.க. இருக்காது என்று சொன்னார்கள். மு.க.ஸ்டாலின் முதலமைச் சராக ஆகவே முடியாது என்று ஜோதிடக் கூட்டம் ஆரியத்தின் தூண்டுதலின் பேரில் பொய்யைப் பரப்பி வந்தது. ஆனால் இன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தந்தை பெரியாரின் கொள்கை வழி நடந்து ‘திராவிட மாடல’ ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றார். ஏராளமான சாதனைகள் இந்த ஆட்சியில் செய்யப்பட்டு வருகின்றது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
நீதிக்கட்சி ஆட்சியில், சர்.பிட்டி.தியாகராயர் முதன்முதலில் பள்ளிப் பிள்ளைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். கல்வி வள்ளல் காமராசர் அதனைத் தொடர்ந்தார். ஆனால் இப்போது காலை உணவும் பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டு இந்தத் திராவிட மாடல் ஆட்சியில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரால் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது.
பள்ளிப் படிப்போடு மாணவர்களின் கற்றல் முடிவு பெற்று விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து உயர் கல்வியில் சேருகின்ற மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் கல்லூரியில் ஆர்வத்தோடு சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
தோழி விடுதிகள்
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக நீதிக் கட்சித் தலைவர் சி.நடேசனார் அன்றைக்கு ஆரம்பித்த ‘திராவிடர் இல்லம்’ போன்று இன்று வெளியூரிலிருந்து வந்து தங்கி பணி செய்கின்ற பெண்களுக்கு ‘தோழி விடுதி’ எனத் தங்கும் விடுதிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்படுகின்றது. “மகளிர் உரிமைத் தொகை” என்று ரூ.1000 மாதந்தோறும் பெண்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது.
கொளத்தூரில் அரசு மருத்துவமனைக்குப் பெரியார் பெயர் வைத்துள்ளது சிறப்பானது என்று சொன்னால் – அம்மருத்துவமனைக்குச் சார்பாக மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்படுவதற்கு அற்புதத் திட்டம் தயாராக உள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் – உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பயன் தருகின்ற வகையில் சிறந்த கட்டமைப்புடன் பன்னாட்டுத் தரத்தோடு அமைக்கப்படுகின்ற நூலகங்கள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழர் தலைவரின் அயராத பணி
இப்படி திராவிட இனத்தின் நலம் நாடுகின்ற ஆட்சிக்கும் சிறந்த பாதுகாவலராகத் திகழுகின்ற காரணத் தினால்தான் – “பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்” என்கின்ற உன்னத நோக்கத்தோடு, அயராது பாடுபட்டு வருகின்ற தமிழர் தலைவர் – இன்றைக்கும் ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் நடத்தப்படக்கூடிய நிகழ்ச்சிகளில் பிரச்சாரப் பணியை செய்து வருகின்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீது பார்ப்பனர்களுக்கு, சங்பரிவார் கூட்டத்தினை ஆதிக்கம் பொங்கி வருகிறது.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் சதிச் செயல்களை முறியடித்து மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி நிலைப்பதற்கு அயராது உழைப்போம் – உறுதி மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜெய்பீம் அறிவுமானன் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோ ரைப் பற்றியும், இயக்கப் பாடல்களையும் இசையோடு பாடி மகிழ்வித்தார்.
மனோஜ் – கராத்தே ஹுசைனி மறைவுக்கு வீரவணக்கம்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகரும், இயக்குநருமான மனோஜ், மனிதநேயர் கராத்தே ஹுசைனி ஆகியோரின் மறைவுக்கு இந்நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்து வீரவணக்கம் செலுத்தினர்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாருக்கு பெரம்பூர் – செம்பியம் கழகம் சார்பாக கி.இராமலிங்கம் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். கழகப் பொறுப்பாளர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்புற அமைய பணி செய்த கழகத் தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
வடசென்னை மாவட்ட கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் இணைப்புரை வழங்கினார்.
குமரன் நகர் 80 அடி சாலையில் கழகக் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு – ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
கலந்து கொண்டோர்
கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு, செம்பியம் கழக செயலாளர் பி.ஜி.அரசு, வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் வ.கலைச்செல்வன், துணைச் செயலாளர் த.பரிதின், அரும்பாக்கம் சா.தாமோதரன், உடுமலை வடிவேல், ஆவடி மாவட்ட கழகத் துணைத் தலைவர் வை.கலையரசன், அட்சயா, ஆவடி இரா.முருகேசன், பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந.கார்த்திக் நன்றி கூறினார்.