23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: நேற்றைய தொடர்ச்சி…
அறிஞர் அண்ணா
அந்த நாட்டில் க்வெபெக் பகுதியில் உள்ளவர்கள் மட்டும் தான் பிரஞ்சுமொழி பேசுகின்றார்கள். மற்ற எல்லா இடங்களிலும் ஆங்கில மொழி பேசுகின்ற மக்கள் தான் இருக்கிறார்கள். 150 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நிர்வாகத்தின் கீழ் பிரஞ்சுமொழி பேசுகின்றவர்களும் ஆங்கில மொழி பேசுகின்றவர்களும் இருந்து வந்திருக்கிற போது இன்றைக்கு ஆங்கிலமொழி பேசுகின்றவர்கள், பிரஞ்சுமொழி பேசுகின்றவர்களைப் புறக்கணிக்கிறார்கள் – ஆதிக்கம் செலுத்த முன்வருகிறார்கள் என்கிறபோது அங்கே மொழிக்கிளர்ச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக அந்தச் சர்க்கார் என்ன செய்தது? உடனே ஒரு ராயல் கமிஷனை நிறுவியது. அந்த ராயல் கமிஷனும், பிரஞ்சு மொழி, ஆங்கிலமொழி இரண்டுக்குமே சம உரிமை தரப்பட வேண்டும், சம அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. என் யதை நாம் அறிந்துகொள்வோமானால், நீங்களும் தெரிந்து கொள்வீர்களானால், தேச ஒருமைப்பாடுதான் தேவை என்பதை நீங்கள் மனப்பூர்வமாக நம்பினால், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வரவேண்டாமா? அதைத்தான் நானும் சொல்கிறேன் என்று நண்பர்
திரு. கருத்திருமன் அவர்கள் சொல்வார்கள்.
யோசித்துப் பாருங்கள்
கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம். விட்டுக்கொடுப்பது நாமேதானா? தியாகம் செய்யவேண்டுமென்பது நமக்கு மட்டும்தானா? எல்லாக் காலத்தும் நாம் விட்டுக்கொடுத்து வந்திருக்கிறோமே, மற்றவர்கள் எதையாவது விட்டுக்கொடுத் திருக்கிறார்களா? நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் ! “தேச ஒருமைப்பாட்டுக்காக நாம் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும், கொஞ்சம் விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை யுடன்” என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லலாம்.
சரி நாம் விட்டுக்கொடுக்கலாம்; அவர்கள் விட்டுக் கொடுப்பது என்ன? தேச ஒருமைப்பாட்டுக்காக அந்த மக்கள் செய்கிற தியாகம் என்ன? ஏற்கிற கஷ்டம் என்ன? இழந்துவிட்ட நன்மை என்ன? தேச ஒருமைப்பாட்டுக்காக நாம் பெருமையுடன் விட்டுக்கொடுக்க விட்டுக்கொடுக்க அவர்கள் செய்துகொண்டு போகிற காரியங்கள் என்ன?
நம்மீது இந்தியைத் திணிக்கிற துணிவைத்தான் பெற் றார்கள். நாம் எந்த அளவுக்குத் தொடர்ந்து விட்டுக்கொடுத் துக்கொண்டு வந்திருக்கிறோம் என்பதை காங்கிரஸ் வரலாற் றைப் பார்த்தாலும் சரி, மற்ற மற்ற வரலாறுகளை எடுத்துப் பார்த்தாலும் சரி, நன்றாகத் தெரியும்.
நாம் எவ்வளவோ தியாகங்களைச் செய்து வந்திருக்கி றோம். நம்முடைய சுகதுக்கங்களை எல்லாம், வாழ்வு தாழ்வு களை எல்லாம் இழக்கத் தயாராய் இருந்து வந்திருக்கிறோம்.
இரும்பாலைகளை வடநாட்டிலேயே பிலாயிலும், துர்க்கா பூரிலும், ரூர்க்கேலாவிலும் ஆரம்பித்தார்கள்; அதுவும் நம் முடையதுதானே என்று இங்கு நம்மை நாமே சமாதானம் செய்துகொண்டோம்.
நம்முடைய சேலம் இரும்பாலைத் திட்டம் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் உணராதவர்கள் அல்ல. பெரும் பெரும் தொழிற்சாலைகளை திடீர் திடீர் என்று அந்தப் பகுதிகளிலேயே ஆரம்பித்துக்கொண்டார்கள். இருந்தும் அந்தப் பகுதியும் நம்முடைய தேசத்தைச் சேர்ந்ததுதானே என்று நம்மையே நாம் ஆறுதல் செய்துகொண்டோம். காண்ட்லா துறை முகத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதை சுங்கத் தீர்வை இல்லாத துறைமுகம் என்று அறிவித்துக்கொண்டார்கள்.
நம்முடைய தூத்துக்குடி துறைமுகம், ஆழ்கடல் ஆக்கப்படும். சேதுசமுத்திரத் திட்டம் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாமும் 15 வருடங்களாகக் கோரிவருகிறோம்.
எதற்கும் ஓர் எல்லை உண்டு
இருந்தும் அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதைச் செயலாற்ற முடியாத பொறுமையோடு நாம் இருந்து கொண்டிருக்கிறோம். எதற்கும் ஓர் எல்லை உண்டு!
வறுமைக்குத்தான் எல்லை இல்லை என்று சொல்லியிருக் கிறார்கள். மற்ற எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. எல்லை கடவாமல் நாமும் பொறுமையோடுதான் இருந்துகொண்டு வருகிறோம். பொறுமையின் கடைசி எல்லைக்கே -அந்த எல்லையின் விளிம்புக்கே நாம் வந்துவிட்டோம் என்பதை எப்படித் தெரிவிப்பது? இதுவரை நம்முடைய துயரத்தையும் துன்பத்தையும், மனக்கொதிப்பையும் உணராமல் இருந்து கொண்டிருக்கிற அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் உணர்த்தவேண்டும் என்பதற்காகத்தான் மும்மொழித் திட்டத்தை இருமொழித் திட்டம் என்று மாற்றுகிற முறையில் இந்தி அகற்றப்படும்என்ற முறையில் தீர்மானத் தைக் கொடுத்திருக்கிறோம்.
காலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பேசியவர்கள் குறிப்பாக முன்னாள் அமைச்சர் திரு. பூவராகன் அவர்கள் நீ வேளைக்கு ஒரு பேச்சுப் பேசுகிறாய்! முன்னாலே மும் மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டாய், இப்போது மும் மொழித் திட்டத்தை எதிர்க்கிறாய் – என்பதாகச் சொன்னார்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர்களுக்கு இருக்கிற நோக் கம் எல்லாம் “நான் ஒரு நிலையான கொள்கையைக் கொண்ட வன் அல்ல. திடமான உறுதி படைத்தவன் அல்ல. எந்த எந்த நேரத்தில் எதை எதைப் பேசினால் சாதகமோ அதை அதைப் பேசுகின்றவன்” என்பதாகப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்பதுதான். நான் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக பொதுமக்களிடத்தில் பழகி வருகிறேன். இனிமேல் இவர்களுடைய நற்சாட்சிப் பத்தி ரத்தை – இவன் உறுதியாக இருப்பவன்தான்-என்பதான நற்சாட்சியைப் பெற்றுப் போகவேண்டும் என்பதில்லை. மும் மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக நீ சம்மதித்ததோடு அல்ல, அதற்குச் சம்மதித்து கையொப்பமும் போட்டுள்ளாய், என்பதாக இந்த மாமன்றத்திலேயே முன்பு என்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
திரு. பூவராகன் அவர்கள் மும்மொழித் திட்டத்தை நீங்கள்தான் ஏற்றுக் கொண்டீர்களே’ என்று கேட்டபோது திரு. கருத்திருமன் அவர்களும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கும் கூட விந்தையாக இருந்திருக்கும். இந்த அவை யில் 1958ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி உரை யாற்றிய திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் ‘மும் மொழித் திட்டத்தை ஒத்துக்கொண்டுவிட்டு, கையெழுத்தும் போட்டுவிட்டு வெளியே வந்து வேறுவிதமாகச் சொல்கிறீர் களே?” என்று குற்றம் சாட்டினார்கள்.
ஆதாரம் இல்லை
அதற்கு நான் “அதிலே கையெழுத்து போடப்பட்டது என்று சொல்வது தவறு என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்” என்று அப்போதே குறிப்பிட்டேன்.
மீண்டும் திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் “அந்தக் கூட்டத்திற்கு யார் யாரெல்லாம் வந்திருந்தனர் என்று தெரிந்து கொள்வதற்காகக் கையெழுத்து வாங்கியிருப் பார்கள் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.
நான் உடனே “அவ்விதமும் கையெழுத்து வாங்கவில்லை என்பதை அம்மையார் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள் கிறேன்” என்று குறிப்பிட்டுச் சொன்னேன்.
என்னுடைய நண்பர்திரு. சுப்பிரமணியம் அவர்கள் நான் எந்தக் கூட்டத்திலும் கையெழுத்துப் போட்டதாகச் சொல்ல வில்லை” என்று விளக்கம் தந்தார்கள்.
உடனே நான் எழுந்திருந்து “நிதி அமைச்சர் சொன்ன தாகப் பத்திரிகையிலே வந்தது. பத்திரிகையிலே வந்தது மட்டுமல்ல. நேற்றைய தினம் பேசிய கனம் அங்கத்தினர் அனந்தநாயகி அவர்கள் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது இல்லை என்று சொல்கிறாரே என்று ஆழ்ந்த வருத் தத்தோடு கேட்டார்” என்பதை அவர் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.
உடனே திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் இந்த மாமன்றத்திலேயே எழுந்திருந்து, “திருத்திக் கொண் டேன் என்பதை கனம் அங்கத்தினர் அவர்கள் தெரிந்து கொள் வார்கள் என்று நினைக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்படித் தான் செய்த தவறை காங்கிரஸ் திருத்திக் கொண் டதற்கு ரெக்கார்டு இருக்கிறதே தவிர மும்மொழித் திட்டத்தை நான் ஆதரித்ததற்கு ரெக்கார்டு இல்லை. ஆலமரத்தடியில் உள்ள ஜோஷியன் வெள்ளிக்கிழமை போய் வியாழக்கிழமை எல்லாம் சரியாக இருக்கும் என்று சொல்வதைப்போல வந்தால் திரு பூவராகன் அவர்கள் சொல்கிறார்; அது சரியல்ல. (சிரிப்பு)
திரு.கோ.பூவராகன்: நான் படித்தது 121ஆம் பக்கத் தில் இருக்கிறது. அதை வேண்டுமானால் படித்துக் காட்டு கிறேன், அதற்குத் தக்க விளக்கம் கொடுக்க வேண்டும்.
காலவரம்பின்றி ஆங்கிலம்
முதலமைச்சர் அறிஞர் அண்ணா: கையெழுத்துப் போடாதது மட்டுமல்ல, மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்குத் தீர்மானம் கொடுத்தோம். இந்திய அரசியல் சட்டத்தினுடைய 17-வது பிரிவை நீக்க வேண்டுமென்று பேசுவது புரட்சிகரம் என்று இங்கு கருதப்படுகிறது. 1958ஆம் ஆண்டிலே மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று.
“ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சிமொழியாக காலவரம் பின்றி நீடிக்கும் வகையில் அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவு தகுந்த முறையில் திருத்தப்பட வேண்டும் என்று இம் மன்றம் தனது உறுதியான கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.’
– என்ற தீர்மானத்தை எங்கள் கட்சித் தோழர் திரு. அன்பழகன் கொடுத்து, அது வாக்குக்கு விடப்பட்டு 14பேர்கள் அதை ஆதரித்தும், 121 பேர்கள் எதிர்த்தும் வாக்களித்தார் கள். அந்த 121 பேர்களிலே திரு.வினாயகம் அவர்களும் ஒருவர். அவர்கள் இப்பொழுது திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்கு வேண்டாமா என்று சொல்கிறார்கள். ஆனால் 1958 ஆம் ஆண்டிலே அந்த வாக்கு அளவு இருந்தது. 1958-இல் இந்தியப் பேரரசு அரசியல் சட்டத்தைத் திருத்தி, மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென்று விரும்பி யிருந்தால் அப்பொழுது மெஜாரிட்டி இருந்தது. நாங்கள் அப்பொழுது சிபாரிசு செய்த தீர்மானத்தை 14 பேர்கள் ஆதரித்தும் 121 பேர்கள் எதிர்த்தும் வாக்களித்ததால் அது தோற்கடிக்கப்பட்டது. மும்மொழியை இரு மொழியாக்கு கிறோம். இது திடீரென்று ஏற்பட்ட முடிவு என்று எல்லாம் பேசுகிறார்கள். 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி மற்றொரு தீர்மானமும் போடப்பட்டது,
மூன்று மொழி ஏன்?
“இந்தி பேசும் பகுதியிலிருக்கிற மாணவர்கள் இரு மொழிகள் மட்டுமே கற்க வேண்டியவர்களாயிருக்கும்பொழுது, இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்றுமொழி கற்க வேண்டி யிருப்பது வேறுபாடானதாகும். எனவே இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி படிக்குமாறு கட்டாயப்படுத்தப் படக் கூடாது என்று இந்த மன்றம் பரிந்துரைக்கிறது” இந்தத் தீர்மானத்தைக் கொடுத்தவர் என்னுடைய மதிப்பிற்குரிய நண்பரும் இப்பொழுது அவர்களோடு உள்ளவருமான நம் முடைய நண்பர் எம். பி. சுப்பிரமணியம் அவர்கள். அதுமட்டு மல்ல; “மத்திய சர்க்கார் பரீட்சையிலே தமிழ், ஒரு மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டு”மென்று தீர்மானம் நாங்கள் தான் முதலில் கொடுத்தோம். யாரோ பேசும்பொழுது குறிப் பிட்டார்கள் – திரு சங்கரய்யா என்று நினைக்கிறேன்- பொது மக்கள் போராட்டத்திற்குப் பிறகுதான் இந்த நிலை வந்தது என்று குறிப்பிட்டார்கள். 1965-ல் ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி – (நான் அப்பொழுது இல்லை) என்னுடைய நண்பர்கள் எதிர்க் கட்சியிலே இருந்த நேரத்திலே இப்படியொரு தீர் மானம் தரப்பட்டது-
‘யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை எழுது வதற்கான மொழிகளில் ஒன்றாக தமிழையும் ஆக்கவேண்டியது பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுமென்று மாநில அரசிடம் இந்த மன்றம் பரிந்துரைக்கிறது.
அதற்கு ஆதரவு – 34, எதிர்ப்பு 77. ஆகவே 17-வது பிரிவு திருத்தப்பட வேண்டுமென்பதையும், தமிழ், பரீட்சை மொழியாக ஆகவேண்டும் என்பதையும், மும்மொழித் திட்டம் தங்களுடைய மாணவர்களுக்கு கேடுசெய்யும் என்பதையும் இன்றல்ல நேற்றல்ல 1958-லிருந்து வலியுறுத்தி எடுத்துக்காட்டி யிருக்கிறோம். இங்கே யார் யார் எல்லாம் எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள் என்றெல்லாம் இருக்கிறது. அதிலே பலர் இப்போது இங்கே இல்லை. அதிலே இருக்கிற சிலர் இங்கே இருக்கிறார்கள். திரு. சிதம்பரநாத நாடார்-அவர் இங்கு இப்போது இல்லை என்று நினைக்கிறேன். என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் வினாயகம் அவர்கள்…
திரு. கே. வினாயகம்: நானும் இல்லை, அவர்களும் இல்லை.
ஆங்கிலம் போதும்
முதலமைச்சர் அறிஞர் அண்ணா : 1958லே இருந்தார்கள். இருந்தும்கூட அவரே இல்லையென்று மறுத்தால் அதை மறைத்துவிட முடியாது. இதையெல்லாம் நாம் சொல்வதற்குக் காரணம் அவ்வப்பொழுது நாங்கள் மொழிப் பிரச்சினையைப் பற்றி தெளிவாகப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான். காங்கிரஸ் நண்பர்கள் சொல்கிறார். கள் – அவர்கள் சொல்வதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன். கொள்கையைத் திட்டவட்டமாகச் சொல்லுங்கள் என்று கேட்ட தாகப் பார்த்தேன். அவர்களுடைய கொள்கை திட்ட வட்டமாக என்ன என்று பார்த்தேன், ஒன்றும் காணோம்! இந்தி வேண்டாம், ஆங்கிலம் போதும் என்று நாம் சொல் கிறோம். அவர்களுடைய அபிப்பிராயம் என்ன?
என்.சி.சி.யில் இந்தி ஆணைச் சொற்கள் பயன்படுத்தப் படுவதால் மேலும் இந்தி மறைமுகமாகவும் திணிக்கப்படு வதால் இந்திச் சொற்களை நீக்க வேண்டுமென்றும், அப்படி நீக்காவிட்டால் என். சி. சி. அணிகளை கலைத்து விட வேண்டுமென்றும் சொல்கிறோம். உங்களுடைய அபிப் பிராயம் என்ன?
அதைக் கேட்கிற நேரத்திலே காங்கிரஸ்காரர்கள் பொது மக்களிடம் கேளுங்கள் என்றுதான் சொல்கிறார்களே தவிர, இல்லை இல்லை இந்தி படிக்கத்தான் வேண்டும் என்று சொல்ல வில்லை.
தமிழ் உணர்ச்சி
அப்படிச் சொல்வதற்கு அவர்களுக்குத் துணிவு இல்லை என்று சொல்லமாட்டேன். எனக்கே இவ்வளவு துணிவிருக் கிறது என்றால் அவர்களுக்கு இல்லை யென்று சொல்லமாட் டேன். எவ்வளவு கதரைப் போட்டாலும் தமிழ் உணர்ச்சி கதறிக்கொண்டு வருகிறது.
நாம் செய்யவில்லையென்றாலும் அந்தப் பயலாவது செய் கிறானே என்ற திருப்தியோடுதான் அவர்கள் இருக்கிறார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. அவர்களில் யாருக்கு இந்தி தெரியும்? நாங்கள் இரண்டு மூன்று ஆண்டுகள் டில்லியில் இருந்த பொழுது எத்தனை பேர்கள் இந்தி படித்தோம். தமிழ் வார்த்தையுடன் ‘ஹை’ போட்டு விட்டால் அதுதான் இந்தி என்று சொன்னோம்.
தொடர்பு மொழி வேண்டாமா என்று கேட்டார்கள்.
பரந்த இந்தியாவிலே ஒரு பகுதி மக்களுக்கும் இன்னொரு பகுதி மக்களுக்கும் எந்த எந்த,அளவில், எந்த எந்த முறையில், எந்த எந்த இடத்தில் தொடர்பு இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
ஒரு வீட்டிலே இருக்கிறவர்கள் தொடர்பு இல்லாமல் இருக்கக்கூடாது. மாதக் கணக்கில் மாமியாரும் மருமகளும் பேசவில்லையென்றால் அதனாலே கணவனுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. கன்னிய யாகுமரி யிலிரு ருந்து 20 பேர்கள் கிளம்பி கான் பூருக்குப் போய் அங்கே பாஷை தெரியாமல் கதறுகிறார்கள் என்று கருதுகிறீர்களா?
திருநெல்வேலிச் சீமையில் உள்ள கிராமத்தி லிருப்பவர் கள் சென்னைப் பட்டணத்தைப் பார்த்ததே யில்லை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? சென்னை கடற்கரையைப் பார்க்க முடியாமல் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததா? தொடர்பு, தொடர்பு என்று சொல்லுகிறீர்கள். திரு. ஹ்ாண்டே அவர்கள் சொல்கிற தொடர்பு புரிகிறது. படித்தவர்களிடையே உள்ள தொடர்பு அது – புரிகிறது. நிர்வாகம் நடத்துகிறவர்களிடையே தொடர்பு, அதுவும் புரிகிறது. அரசியல்வாதிகளிடையே தொடர்பு, அது வும் புரிகிறது. வியாபாரிகளிடையே தொடர்பு. அதுவும் புரி கிறது. யாத்திரிகர்களிடையே தொடர்பு, அதுவும் புரிகிறது. 100க்கு எத்தனை பேர் இங்கே திண்டாடுகிறீர்கள்? எந்தத் தவிப்பு ஏற்பட்டு அவர்கள் யாரிடத்திலே மனுப்போட்டார்கள்.
இதோ இங்கிருந்து அணி அணியாக அங்கே செல்வதைப் போலவும், அங்கிருந்து அணி அணியாக இங்கு வருவதைப் போலவும் அவர்கள் எல்லாம் மொழி இல்லாத காரணத்தால் பகைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற முறையிலே கற்பனை செய்து கொள்கிறார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்தி கட்டாயமா?
தொடர்பு மொழி என்று பேசுகிறீர்களே வாருங்கள் 37க்கு! அப்பொழுது இந்திக்கு தொடர்பு மொழி என்று பெயர். மதிப்பிற்குரியவர், எங்களுடைய நண்பர் எல்லாத் தகுதிகளும் உடையவர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டவர் பட அளவிலே இங்கே பார்த்துக்கொண்டிருக்கிறோமே அவர் – ராஜாஜி அவர்கள், அன்று இந்தியை தேசீய மொழி என்று சொன்னார்கள். கட்டாயமாகப் படிக்க வேண்டுமென்றார்கள். அதைப் படிக்காவிட்டால் இந்தியனாக முடியாது என்றார்கள். அதைப் படித்தால்தான் இந்தியா லே வாழலாம் என்றார்கள். அதைப் படிக்காதவன் தேசத் துரோகி என்றார்கள். அப்போதுதான் மதிப்புமிக்க ம.பொ.சி. அவர்கள் சொன்னபடி நாங்கள் எதிர்த்தோம். என்னை முதல் முதலாகச் சிறைச்சாலைக்கு அனுப்பியவரும் ராஜாஜி தான் ! முதல்முதலாக மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளும் படியான நிலையை உண்டாக்கியவரும் ராஜாஜிதான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
– தொடரும்