சமீப காலமாக உத்தரப்பிரதேசத்தின் முதல மைச்சர் சாமியார் ஆதித்யநாத் தென் இந்தியா குறித்து அதிகம் அக்கறை கொண்டு வருகிறார் போலிருக்கிறது.
அவர் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டன, கடந்த ஆண்டுவரை கூட தென் இந்தியா பக்கமே வராதவர் தற்போது ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று தென் இந்தியர் களுக்கு வகுப்பு எடுக்கத் துவங்கிவிட்டார்.
கடந்த 24.3.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஹிந்தி எதிர்ப்பு எதற்கு என்று பாடம் எடுத்தவர் தற்போது கருநாடகாவிற்கும் பாடம் எடுக்கத் துவங்கி விட்டார்.
‘This isn’t riot-for-votes politics, spare us’: Stalin responds as Yogi Adityanath backs Hindi, NEP
Stalin vs Yogi: UP CM Adityanath said that Tamil Nadu CM was trying to create divisions based on region and language as his vote bank was at…
சமீபத்தில் அவர் ஹிந்திமொழியில் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில்
‘‘தமிழர்களோ, கன்னடர்களோ ஹிந்தி கற்பதில் என்ன தவறு?’’ ஏன் ஹிந்தி மொழி மீது வெறுப்பை உமிழ்கிறீர்கள்? ஹிந்தி மொழி மீது வெறுப்பு தேவையில்லை. மொழி எப்போதும் மக்களைப் பிரிக்காது, மாறாக அவர்களை ஒன்றிணைக்கிறது’’ என்றார்.
‘‘பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தமிழ் மற்றும் சமஸ்கிருத சங்கமத்தை நடத்தியுள்ளார். மொழி விவகாரம் அரசியல் பிரச்சினையாகக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மும்மொழிக் கல்விக் கொள்கை குறித்து தென் னிந்திய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன – ஆனால் ஒரு மொழி தாய்மொழியாகவும் மற்ெறாரு மொழி இந்திய மொழியாகவும் தானே கற்கச் சொல்கிறோம். அதை ஏன் தமிழ்நாடு ஏற்க மறுக்கிறது?
கருநாடகத்திலும் ஹிந்திக்கு எதிரான குரல் எழும்பி உள்ளது. இது எல்லாம் அவசியம் இல்லாத ஒன்று; ஹிந்தியைக் கற்பித்த இடங்களில் எல்லாம் உள்ளூர் மொழிகளை அழித்து வருகிறது என்பது எல்லாம் அரசியலுக்காக சொல்லும் வாதம் ஆகும். ஆகவே தமிழ்நாடு மற்றும் கருநாடகமக்கள் ஹிந்தி மொழியைக் கற்க முன்வரவேண்டும்’’ என்று சமூகவலைதளப் பதிவில் கூறியுள்ளார்.
இவரது இந்தப் பதிவிற்கு கன்னட மொழி பேசும் மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் கன்னடம் கற்றுத்தர முடியுமா?
அப்படி அங்கு கன்னட மொழிப்பாடத்தை அறிமுகப்படுத்திவிட்டு, எங்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
‘கிடந்தது எல்லாம் கிடக்கட்டும் – கிழவியைத் தூக்கி மணையில் வை!’ என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு.
ஒன்றிய பிஜேபி அரசு கொடுத்து வந்த எந்த முக்கியமான அறிவிப்பையும் செயல்படுத்த வில்லை.
ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றார் மோடி! நடந்தது என்ன? நாளும் வேலையின்மை தலை விரித்தாடுகிறது. பொதுத் துறைகளையும் தனியார்த் துறைக்குத் தாரை வார்ப்பதுதான் மிச்சம்.
ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்றார். மக்களிடத்தில் இந்தப் பிரச்சினை பரவலாக விமர்சனம் ஆன நிலையில், அதெல்லாம் வெறும் ‘ஜும்லா’ (வேடிக்கைப் பேச்சு) என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லவில்லையா?
மக்கள் நலன் சார்ந்து எதையும் சாதிக்க முடியாத கையறு நிலையில், இப்பொழுது மூன்றாவது மொழியை – அதிலும் குறிப்பாக ஹிந்தியை மாநில அரசுகள் கற்பிக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கரடியைக் கட்டவிழ்த்து உள்ளது. எங்கு பலித்தாலும், அது தந்தை பெரியார் பிறந்த திராவிட மண்ணில் மட்டும் பலிக்கவே பலிக்காது.
உ.பி. சாமியார் முதலமைச்சர் – மடத்துக்கே திரும்பிப் போவது நல்லது!