மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு
புதுல்லி, மார்ச் 31 வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ‘எக்ஸ்‘ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் மனித உரிமை போராட்டத்தின் தொடக்க புள்ளிகளில் ஒன்றுதான் வைக்கம் போராட்டம். ‘தொட்டால் தீட்டு‘ என்பார்கள், தொடாமலேயே, சிலரை பார்த்தாலே தீட்டு என்ற வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது. அதையெல்லாம் விட கேரள மாநிலம் வைக்கம் நகரில் உள்ள மகாதேவர் கோயில் இருக்கும் தெருவில் நடந்தாலே தீட்டாகிவிடும். ஆதலால், கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோயிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடந்து செல்லவே கூடாது என்ற கொடிய தடை இருந்தது.
இதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் நெருக்கடி நிலையில் இருந்தபோது, கடந்த 1924 ஆண்டு ஏப்.13 ஆம் தேதி தந்தை பெரியாரின் தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிக்கு வழிநடத்திச் சென்றார். இறுதியாக திருவாங்கூர் சமஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய இச்சாலையில் அனைவரும் செல்லலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்துள்ளது. பெரியார் சமூகநீதி காக்க போராடி பெற்ற வெற்றியை நினைவு கூரும் வகையில், அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு, கடந்த 1994 ஆம் ஆண்டு நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் ‘எக்ஸ்‘ தளத்தில் தெரிவித்திருப்பதாவது; “ஜாதிய பாகுபாடு, தீண்டாமைக்கு எதிராக வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் வலிமையாக போராடிய பெருமகன் காந்தியார், பெரியார், சிறீ நாராயண குரு உள்ளிட்ட தலைவர்களுக்கு எனது இதயப்பூர்வமான மரியாதையுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் வகுத்துத் தந்த கொள்கை வழியில் சமத்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம்” என வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.