அறிஞர் அண்ணா
பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய திருத்தத் தீர்மானத்தில் கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்துகொள்ள பேரவையின் அனுமதியை நான் கோருகிறேன்.
சங்கடம் ஏற்படாமல்…
“மொழித் திருத்தச் சட்டத்துடன் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானம் இந்தி பேசாத பகுதி மக்களுக்கு அநீதியையும், சங்கடத்தையும், புதிய பளுவையும் உண்டாக்குகிறபடியால், அந்தத் தீர்மானம் அமுலாக்கப்படக் கூடாது என்பதில் பல அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்து தெரிவித்திருப்பதைக் கவனத்திற் கொண்டு, மத்திய அரசு உடனடியாக அந்தத் தீர்மானத்தை நீக்கி வைத்து, இந்தி பேசாத மக்களுக்குச் சங்கடமும், பளுவும் ஏற்படாத ஒரு முறையை வகுக்க வேண்டு மென்று இந்த மன்றம் வலியுறுத்துகிறது.”
என்ற பகுதியுடன் கீழ்க்கண்டவற்றை இணைக்க வேண்டும்-
“மொழிப் பிரச்சினை பற்றி ஆய்ந்தறியவும், சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தால் விளையும் தீங்கை அகற்றும்வழி காணவும், எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் கொண்ட ஒரு மேல்மட்ட மாநாட்டை இந்தியப் பேரரசு கூட்ட வேண்டும் என்று இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.”
பேரவைத் தலைவர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய திருத்தத் தீர்மானத்துடன் இந்தத் இந்தத் திருத்தத்தையும் இணைத்துக் கொள்ளலாம் என்பதைக் குறித்து பேரவை அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரப்படுகிறது.
(பேரவையின் முழு அனுமதி அளிக்கப்பட்டது.)
தமிழ் பயிற்சி மொழி
முதலமைச்சர் அண்ணா (தொடர்ந்து); மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய திருத்தத் தீர் மானத்தோடு புதிதாக இன்று பின்வரும் தீர்மானத் திருத்தத் தையும் இணைத்துக்கொள்ள பேரவையின் அனுமதியைக் கோருகிறேன்.
“தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாடமொழி யாகவும் எல்லாக் கல்லூரிகளிலும் நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் அய்ந்தாண்டுக் காலத்துக்குள் நடை முறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ளுவது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது.”
மாண்புமிகு பேரவைத் தலைவர்: இத் திருத்தத் தீர்மானத் திற்கு பேரவை அனுமதி அளிக்கிறது.
முதலமைச்சர் அறிஞர் அண்ணா (தொடர்ந்து) : இன்றைய தினம் இதுவரையில் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை மிகத் தெளிவான முறையில் விளக்கியிருப்பதைக் கேட்டு நான் மிகுந்த பலன் அடைந்திருக்கிறேன் என்பதை முதலிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிலும் மொழிப் பிரச்சினையிலே தொடங்கிய விவாதம் வேறு பல பிரச்சினைகளை யெல்லாம் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
தங்கு தடையற்ற நட்பு
நமது நண்பர் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும் போது, ” எல்லையற்ற பொறுமை நமக்கு வேண்டும்” என்ற முறையில் கூறினார்கள். எல்லையற்ற பொறுமை மட்டுமல்ல என்னைப் பொறுத்தவரையில் தங்கு தடையற்ற நட்பையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். இந்தத் திருத்தத் தீர் மானத்தின் மூலம் நாங்கள் முன்னாலேயே கொண்டிருந்த பிரிவினைத் திட்டத்தை மீண்டும் மறைமுகமாகப் புகுத்தி இருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து சொன்னார்.
இதை விவாதத்திற்காகப் பயன்படுத்தியிருப்பார்களே யானால், அவருடைய சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறேன். உண்மையில் அவர் நம்புவதாக இருந்தால் அவருடைய தவறான கருத்தைத் திருத்த விரும்புகிறேன்.
காரணம், எங்களுக்கு உள்ளபடியே பிரிவினை யிலே நாட்டம் இருக்குமானால், இந்தக் குழப்பம் வளர்வ தற்குத்தான் ஆக்கம் கொடுத்துக் கொண்டிருப்போம். இந்தக் குழப்பத்தைத் தீர்ப் பதற்கு முன்வந்திருக்க மாட்டோம்.
நண்பர் மூக்கையாத் தேவர் அவர்கள் எடுத்துச் சொன்ன படி, “நாம் பிரிவினை கேட்க வேண்டிய தில்லை ; அவர்களே பிரித்து விடுவார்கள்’ என்ற நிலை வடநாட்டில் இருந்து வருகிறது. அவர் வடநாட்டிற்குச் சென்று பார்த்து வந்த தாகக் கூறினார்.
இப்படிப்பட்ட நேரத்தில் நாடு பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நான் இந்தக் காரியத்தைச் செய்கிறேன் என்று கருதுவார்களானால், உள்ளபடி நாடு பிரிவினையாவதற் காக, இந்தக் குழப்பத்தை வளரச் செய்வதில்தான் அக்கறை காட்டியிருப்பேனேயன்றி, குழப்பங்களைத் தீர்ப்பதில் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் ஒன்று-அவர்கள் பேசும்போது, ‘நாடு பிரிவினை யாவதை காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் விடமாட்டோம். காங்கிரஸ்காரர்கள் இதைத் தடுத்தே தீருவார்கள்’ என்று கூறினார்கள்.
நானே அந்த நிலைக்கு வராதபோது, ‘வந்தால் தடுத்து நிறுத்துவோம்” என்று கூறுவது சரியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த எண்ணம் இல்லை
ஒன்று நினைவிற்கு வருகிறது ஓர் ஊரிலே கால் இழந்த ஒருவன் ‘டோல்கேட்’டிலே இருந்த இடத்திலே உட்கார்ந்து கொண்டு, ‘வந்தால் விடமாட்டேன், வந்தால் விடமாட்டேன்’ என்று அவ்வழியே செல்லும் வண்டிக்காரர்களைப் பார்த்துக் கூறிக்கொண்டு இருந்தான் என்று சொல்லுவார்கள். அதைப் போல், ‘வந்தால் விடமாட்டோம்’ என்பது நகைப்பிற்குத் தான் இடமாக இருக்கிறது.
எங்களுக்குப் பிரிவினைக் கிளர்ச்சியை ஆரம்பிக்க வேண்டு மென்ற எண்ணம் இல்லை; எந்த இடத்திலேயும் அந்த எண்ணம் எனக்கு இல்லை. இந்திய அரசு மேற்கொள்ளுகிற மொழிக் கொள்கை நாட்டுப் பிரிவினைக்கு வழிகோலும் என்பதை எடுத் துக்காட்டிக் கொண்டிருக்கிறேனே தவிர, நான் இந்தப் பிரிவினையை ஆதரிப்பதாக இருந்தால், அது வரலாற்றுப் புத்தகத்தில் அச்சேறும்படி ஒரே வழியில் செய்யலாம்.
நான் இந்த மாமன்றத்தைக் கூட்டி, “இன்று முதல் தமிழகம் தனிநாடாக ஆகிறது; தமிழ் வாழ்க” என்று சொல்லி விட்டு வெளியேறலாம். (பலத்த கைதட்டல்) அதிலிருந்து நான் அரசியல் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தப் படலாம்; பொது வாழ்க்கையிலிருந்தும் வெளியேற்றப் படலாம்.
ஆனால் சரித்திரத்தில் என் பெயர் இடம் பெற்றுவிடும். ஆனால், அப்படிப்பட்ட கட்டத்தில் நாம் இல்லை. நாம் என்கிற போது என்னையும் இணைத்துக் கொண்டுதான் இதைச் சொல் கின்றேன்.
பிரிவினை வாதமல்ல
ஆகவே இது பிரிவினைக்காகப் பேசப்படுவது என்று அவர்கள் குற்றம்சாட்டத் தேவையில்லை யென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். பிரிவினையைத் தடுக்க ஆயிரக் கணக்கான – லட்சக் கணக்கான தோழர்கள் எல்லாம் இருக் கிறார்கள் என்று நீங்கள் சொல்லுகிறபோதுதான் சில காரணங் களைக் காட்டவேண்டியிருக்கிறது.
நான் பிரிவினைப் பிரச்சாரம் செய்த நேரத்தில், அது மக்கள் செவியில் விழக்கூடாது என்று நீங்கள் பலமான எதிர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தீர்கள். அதில் நீங்கள் வெற்றி காணவில்லை. நான் பிரிவினையைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்த நேரத்தில் நாளுக்குநாள் எங்களுக்கு ஆதரவு பெருகிவந்தது. அதன் காரணமாக, இந்தியப் பேரரசு இந்திய அரசியல் சட்டத்தையே திருத்தம் செய்தது. லோக் சபையில் பாராளு மன்ற உறுப்பினர் திரு. பி. என். சாப்ரூ அவர்களும், நாகபுரியி லிருந்து வந்த திரு.ஏ.டி.மணி அவர்களும் ராஜ்ய சபையில் பேசிய பேச்சு கனம் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியும். ‘ஒருவருடைய பேச்சுக்காக இந்திய அரசியல்சட்டம் திருத்தப் பட்டது இதுதான் முதல்முறை’ என்று கூறியுள்ளார். இது எங்கள் சாமர்த்தியத்திற்கு அடையாளம் என்றோ, அவர்களது திறமைக் குறைவுக்கு அடையாளம் என்றோ சொல்ல வர வில்லை. பிரிவினைப் பேச்சு மக்களுடைய செவியில் விழக் கூடாது என்று அரசியல் சட்டத்தைத் திருத்தி விட்டீர்கள்; ஆனால் அறிவு பூர்வமான முறையில் மக்களை உங்கள் பக்கம் இழுக்கத் தவறிவிட்டீர்கள். (சிரிப்பு)
நியாயம்
அது என்னுடைய சாமர்த்தியத்திற்கு அடையாளம் என்று நான் சொல்லவில்லை. நாம் எல்லாம் ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்கள் – நாங்கள் பிரிவினையைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில் ‘நாங்கள் கூறுவது நியாயம்’ என்று நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் உணர்ந்தனர்.
நீங்கள் எதிர்த்த நேரத்தில், இது நியாயம் அல்ல என்று கண்டார்கள். ஆகையால் எங்கள் பிரச்சாரத்திற்கு வலிவும், உங்களுக்கு வலிவற்ற தன்மையையும் அது கொடுத்தது. அது உங்கள் திறமைக் குறைவு என்று எடுத்துக்கொள்ளத் தேவை யில்லை.
ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் அவரவரைப் பற்றி ஒரு மனமயக்கம் வரும். நம்முடைய சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், மனமாச்சரியம் எதுவுமின்றி, மிகக் கண்ணியமான முறையில் நாம் நடத்திக்கொண்டு வருகிறோம்.
கொஞ்சம் கேலியாகப் பேசினாலுங்கூட, ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ்வோமே தவிர, ஆத்திரப்பட்டுக் கொள்வதில்லை.
நண்பர் பாலசுப்பிரமணியம் (ச.சோ.) அவர்கள் பேசியதைக் கேட்டேன். அவர்கள் பேசும்போது, ‘பெர்னாட்ஷாவே பின்னால் ஆங்கில மொழியைப் படிக்கவில்லை’ என்று கூறினார்.
பெர்னாட்ஷா ஆங்கிலேயர் அல்ல ; அவர் அய்ரிஷ்காரர். அவர் தமது நாடகத்தில் ஆங்கிலேயர் களைக் கேலி செய்வதையே பொழுது போக்காக வைத்திருந்தார்.
‘அவரே வெறுத்துவிட்ட ஆங்கிலத்தை’ என்று சொல்லாமல் ‘எங்களுடைய கட்சி வெறுக் கிறது’ என்று நண்பர் பாலசுப்பிரமணியம் சொல்லி யிருக்கலாம். எப்படியும் அவர் தங்களுடைய நிலையை திட்டவட்டமான வகையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
உணர முடிகிறது
ஆனால் நண்பர் திரு. கருத்திருமன் அப்படிச் சொல்ல முடியாமல் இருப்பது, அவருக்கே உள்ள சங்கடம் என்ன என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
நண்பர் திரு. கருத்திருமன் சொல்லிக்கொண்ட தெல்லாம், அவர் சொன்ன வாசகத்தையே எழுதி வைத்துக்கொண்டிருக்கிறேன்,
“ஏன் சட்டப் பேரவையை மிக அவசரமாகக் கூட்டினீர்கள்? கற்றவர்களும் பொதுமக்களும் என்ன என்று கருதுகிறார்கள் என்று அறிவோம்” என்றார்.
நீங்கள் எல்லாம் பொதுமக்களுடைய பிரதிநிதிகள் மக்களின் கருத்தை எடுத்துத் தெரிவிப்பவர்கள் உங்களை அழைத்திருக்கிறேன். நண்பர் திரு. கருத்திருமன் அவர்களிடத்தில் நான் கேட்டுவிட்டு, “உங்கள் கருத்து இருக் கட்டும்; கற்றவர்களிடம் கொஞ்சம் கேட்டு வருகிறேன்” என்றால் அது அவருக்கே இழிவைத் தரும்.
நீங்கள் எல்லாம் கற்றவர்கள் இல்லையா? தனியாகப் பொதுமக்களுடைய அபிப்பிராயத்திற்கு அனுப்பவேண்டுமென்ற நிலைமை இதில் ஒன்றும் இல்லை.
மொழிப் பிரச்சினை 1937லிருந்து 1967ஆம் ஆண்டு வரையில், ஒவ்வொரு வடிவிலேயும், ஒவ்வொரு கோணத்திலேயும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இதைப் பற்றிய எல்லா முறைகளும் எல்லோருக்கும் தெரியும். எல்லா நிலைமைகளை யும் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.
புதிதாக யாரும் புதிய நிலைமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு இந்தப் பிரச்சினை புரிந்திருக்கிறது. ஆகையால் பொதுமக்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தத் தீர்மானத்தை விடவேண்டும் என்ற கருத்துக்கு இணங்க முடியாத நிலைமையில் நான் இருப்பதற்கு வருந்துகிறேன்.
தயக்கம் காட்டவில்லை
அவர் கேட்டு ஒத்துக்கொள்ள முடியாத நிலைமை வந்ததே என்று வருந்துகிறேன். அவரது கருத்தை நான் ஒத்துக் கொள்ள மறுக்கிறேன் என்று சொல்ல முடியாது. அவரது தீர்மானத்திலுள்ள மிக முக்கியமான கருத்தை நான் என்னுடைய திருத்தத் தீர்மானத்திலேயே இணைத்துக் கொண்டிருப்பதில் இருந்து அவருக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதில் நான் தயக்கம் காட்டவில்லை என்பது தெரியும்.
ஆனால் பிரச்சினையை ஒத்திப்போடவேண்டும் என்பதற்கு நான் இணங்குவதற்கு இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்கள் இன்னொன்றும் சொன்னார்கள். மற்றும் பல உறுப்பினர்களும் குறிப்பிட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மெம்பர்கள், “ஒருமைப்பாடு முக்கியமா என்று கேட்டார்கள். மொழிப் பிரச்சினை முக்கியமா?” அதைத்தான் நானும் திருப்பித் திருப்பிக் கேட்கிறேன். பார்க்கிற உங்களை எல்லாம் கேட்கிறேன் வருகிற மக்களை எல்லாம் கேட்கிறேன். என்னுடைய குரல் நெடுந்தூரம் வரைக்கும் எட்டும் என்றால், டெல்லியில் உள்ளவர்களை எல்லாம் கேட்கிறேன்.
எது ஒருமைப்பாடு
“தேச ஒருமைப்பாடு முக்கியமா? மொழி முக்கியமா? தேச ஒருமைப்பாடுதான் முக்கியம் என்றால் இவ்வளவு மனக் கிலேசத்தை உண்டாக்குகின்ற மொழிப் பிரச்சினையை ஏன் கிளப்பினீர்கள்? அந்த மொழிப் பிரச்சினையைக் கிடங்கில் போட்டு வையுங்கள். பின்னால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு அமைதியான சூழ்நிலையில் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித் துக்கொள்ளலாம்” என்று கனம் ராஜாஜி அவர்கள் சொல்கிறார்களே, ஏன் நீங்கள் அதைக் கேட்கவில்லை? உண்மையிலேயே ஒருமைப்பாடு முக்கியம் என்று நீங்கள் கருதுவீர்களானால் கனடா நாட்டில் உள்ளவர்களைப் பார்க்க வேண்டும்.
பிரஞ்சு மொழி பேசுகின்ற மக்களும் ஆங்கில மொழி பேசுகின்ற மக்களும் இன்று அல்ல நேற்று அல்ல, கடந்த 300 ஆண்டுகளாக அங்கே சேர்ந்து வாழ்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிர்வாகத்தின் கீழ் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
– தொடரும்