அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை, மார்ச் 30 ‘கோயில் திருவிழாக்களில், ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள் என ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்’ என, ஹிந்து சமய அறநிலைய துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதுப்பட்டி கிராமத்தில், சிறீ துலுக்க சூடாமணி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஏப்., 6ஆம் தேதி தேர்த் திருவிழா நடக்க இருக்கிறது.
விழாவை நடத்துவதற்கு, ஆதிதிரா விடர் சமுதாய மக்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரியசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் செந்தில் முருகன், அரசு பிளீடர் மூர்த்தி ஆகி யோர் வாதிட்டனர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
நிவாரணம் கோரி, மனுதாரர் அணுகியிருக்கும் விடயம் என்பது வாய்ப்புக் கேடானது. அவரின் இன்றைய அவல நிலைக்கு காரணம், ‘ஜாதி’ என்ற சொல். ஜாதியை தன்னுடன் சுமந்து செல்லும் அவர், தங்கள் ஜாதிக்கு என, விழா நடத்த ஒரு நாளை கோருகிறார்.
விழா அழைப்பிதழ்களில் கூட, ஜாதி பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், விழா அழைப்பிதழ்களில் ஜாதிப் பெயரை தவிர்க்க வேண்டும் என, அறநிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டாக நடத்த வேண்டும்
கோயில் விழா அழைப்பிதழில், ஜாதி அடையாளங்கள் குறித்து, எந்த சிறப்பு குறிப்பும் இல்லாமல், மக்கள் அனைவரும் கூட்டாக நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்து, விழாவை நடத்து வதாக குறிப்பிட வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 1961ஆம் ஆண்டுக்கு முன்பி ருந்து, ஒவ்வொரு ஜாதியினருக்கும் திருவிழா நடத்த ஒதுக்கும் திட்டம் வகுக்கப்பட்டதாக, அறநிலையத் துறை தரப்பு வாதம் ஏற்று கொள்ள முடியாதது.
ஏனெனில், ஜாதியின் அடிப்படை யில், கோயில் சார்ந்த எந்தவொரு கோரிக்கையையும் ஏற்க முடியாது என, இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு செய்தால், அது, அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.
எனவே, கோயில் திருவிழாக்களில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு நாள் என, ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை தவிர்க்க வேண்டும். பக்தர்கள், உபயதாரர்கள் அல்லது ஊர்ப் பொது மக்கள் என்ற அடிப்படையில், அடுத்த ஆண்டு முதல் விழா நடத்த அனுமதிக்க வேண்டும். ஜாதிப் பெயருடன் விழா நடத்த அனுமதிக்கக் கூடாது. மனு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.