சமா. இளவரசன்
மார்ச் 27 அன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்கத்தில் இரண்டு செய்திகள்.
ஒன்று: அமெரிக்காவின் பன்னாட்டு மதச் சுதந்திர ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பானது.
‘‘இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன, ஒன்றிய மற்றும் பல்வேறு மாநில அரசுகள் மத சிறுபான்மையினருக்கு எதிரான பரவலான துன்புறுத்தல் மற்றும் வன்முறையை பொறுத்துக் கொள்கின்றன. பாஜக தலைமையிலான அரசாங்கம் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை (CAA) இயற்றியது, இது ஏற்ெகனவே இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத குடியேறிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமையை விரைவாக வழங்க வகை செய்கிறது. அரசாங்கம் திட்டமிட்டுள்ள நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டை முடிக்கும்போது, மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் தடுப்புக்காவல், நாடு கடத்தல் மற்றும் நாடற்ற நிலைக்கு ஆளாக நேரிடும்” என்று தெரிவித்திருப்பதுடன், பிரதமர் மோடியே சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளைப் பேசுவதாகவும், பல்வேறு ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை மழுப்பல் பதில் தெரிவித்துள்ளது.
மற்றொரு செய்தி: ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரிட்டன் வாழ் இந்தியரான சந்தியா சூரி இயக்கியுள்ள சந்தோஷ் என்ற திரைப்படம் தொடர்பானது. இந்தப் படத்துக்கு இந்திய சென்சார் துறை அனுமதி மறுத்துள்ளது. (இது தொடர்பான இங்கிலாந்தின் தி கார்டியன் நாளேட்டில் வந்துள்ள செய்தியை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.)
ஏன் இந்தப் படத்துக்கு மறுப்பு? இந்தியாவில் பெண்கள் மீது ஆழமாக வேரூன்றிய வெறுப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பாகுபாடு, காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்படும் தவறான நடத்தை, சித்திரவதைகளை இயல்பாக்குதல் ஆகியவற்றை இப்படம் சுட்டிக் காட்டியுள்ளதாம். இந்தியாவில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு தப்பெண்ணத்தின் அலை ஆகியவற்றையும் இந்தப் படம் கையாள்கிறது. அதனால்தான் இப்படத்திற்கு அனுமதி மறுத்து திரைப்படத் தணிக்கைச் சான்றிதழும் தர மறுத்துள்ளது ஒன்றிய அரசு.
ஆனால், பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் என்ன செய்கிறார்கள்? நாடாளுமன்றக் கட்டடத்துக் குள் ‘சாவா’ என்ற படத்தைத் திரையிட்டு ரசிக் கிறார்கள். இந்தப் படம் தான் அண்மையில் மராட் டியத்தில் கலவரத்தைத் தூண்டியது. எப்போதோ செத்துப் போன அவுரங்கசீப் மீதான அவதூறுகளைச் சுமத்தி, அவரது கல்லறையைத் தேடி உடைக்கப் போகிறோம் என்ற பெயரில், இஸ்லாமியர் வீடுகள் மீதான கடுமையான தாக்குதலை நடத்தக் காரணமானது.
நடப்பில் எத்தகைய கொடூர பாசிசத்தை இந்திய அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை ரம்ஜானை ஒட்டி இஸ்லாமியர் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் நமக்குக் காட்டுகின்றன. மீரட் நகரின் சாலைகளில் ரம்ஜான் அன்று தொழுகை நடத்துபவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களின் பாஸ்போர்ட்டுகளை காவல்துறை பறிமுதல் செய்யவிருக்கிறது என ஆர் எஸ் எஸ்சின் ஆர்கனைசர் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இதனைக் கண்டித்து ராஷ்ட்ரிய லோக் தள் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ஜெயந்த் சவுத்ரி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். “ரம்ஜான் தொழுகை சில மணி நேரங்களில் முடிந்துவிடக் கூடியது. ஆனால் ‘கன்வார் யாத்திரை’ பல நாட்களில் வட இந்தியாவின் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து நடப்பது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் வீட்டு மாடிகளில் கூட தொழுகை நடத்தக் கூடாது என்று காவல்துறை மிரட்டுவதாகக் கூறியிருக்கிறார்.
நாட்டின் உண்மை நிலையை எடுத்துச் சொல்ல கருத்துரிமைக்குத் தடை, பாராட்ட வேண்டிய சாதனையை ஒரு பிரிட்டன் வாழ் இந்தியர் செய் தாலும் அதற்குத் தடை.
ஆனால், வன்முறையை விதைத்த படத்துக்கு நாடாளுமன்றத்தில் மகுடம், தங்கள் மத விழாவைக் கூட அச்சுறுத்தலுக்கிடையில் கொண்டாட வேண் டிய கொடுமை (இந்த அச்சுறுத்தலில் கொண்டாட்டம் எங்கிருந்து வரும்?) என்ற அவல நிலைகளைத் தானே அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை அம்பலப்படுத்துகிறது.