வக்பு வாரிய திருத்தச் சட்டமும் அதன் பின்னணியும்!

Viduthalai
3 Min Read

வக்பு வாரியம் என்பது இந்தியாவில் இஸ்லாமி யர்களின் மதம், சமூகம் மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். “வக்பு” என்ற சொல் அரபு மொழியிலிருந்து வந்தது, இது “கொடை” அல்லது “அர்ப்பணிப்பு” என்று பொருள்படும். இஸ்லாமிய சட்டப்படி, ஒரு நபர் தனது சொத்துக்களை (அசையும் அல்லது அசையா) மதம் சார்ந்த பணிகள், அறப்பணிகள் அல்லது சமூக நலன்களுக்காக அர்ப்பணிக்கும் போது அது வக்பு எனப்படுகிறது. இந்த சொத்துக்களை நிர்வகிப் பதற்கும், அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் வக்பு வாரியம் பொறுப்பேற்கிறது.
தமிழ்நாட்டில், வக்பு வாரியம் தமிழ்நாடு அரசின் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. இது 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “வக்பு சட்டம்” மற்றும் பின்னர் 1995 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது. தமிழ்நாடு வக்பு வாரியம் மசூதிகள், மதரஸாக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடக்கத்தலங்கள் (தர்காக்கள்) போன்றவற்றை நிர்வகிக்கிறது.

மேலும், வக்பு சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தை சமூக நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது.
சொத்து நிர்வாகம்: வக்பு சொத்துக்களை பராமரித்தல், ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல் மற்றும் அவற்றை மீட்பது.
நிதி உதவி: உலமாக்களுக்கு ஓய்வூதியம், முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் (1986 சட்டப்படி), பள்ளி-கல்லூரிகளுக்கு மானியம் வழங்குதல்.
கல்வி மற்றும் சமூக மேம்பாடு: வக்பு சொத்துக்களைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை அமைத்தல்.
வெளிப்படைத்தன்மை: வக்பு நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்தல் மற்றும் நிர்வாகத்தில் ஒழுங்கை பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது.
ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள தற்போதைய மசோதாவின்படி, வக்பு சொத்துக்களைப் பதிவு செய்வது, அவற்றின் உரிமையைத் தீர்மானிப்பது போன்ற முக்கிய அதிகாரங்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்படுகின்றன. இதனால், வக்பு வாரியங்களின் சுயாட்சி பெருமளவு குறையும்.

மசோதாவில், வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக நியமிக்கலாம் என்ற பிரிவு உள்ளது.
வக்பு சொத்துக்கள் இஸ்லாமிய மத நோக்கங் களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டவை. இதில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முடிவெடுக்கும் அதிகாரம் பெறுவது அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதில் நியாயம் இருக்கிறது.
ஹிந்து கோயில்களை நிர்வகிக்க இந்து அல்லாதவர்களை அனுமதிக்க ஒப்புவார்களா? திருப்பதி தேவஸ்தான கமிட்டியில் ஒரு முஸ்லிமோ, கிறித்தவரோ அங்கம் வகிக்க முடியுமா?
வக்பு சொத்துக்களின் வருவாய் மசூதிகள், மதரஸாக்கள், கல்வி நிறுவனங்கள், அடக்கத்தலங்கள் மற்றும் ஏழைகளுக்கான நலத் திட்டங்களுக்கு பயன்படுத் தப்படுகின்றன. இந்த மசோதா வக்பு அமைப்பை சிக்கலாக்கி, அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும்.
பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய சமூகத்தில் தொண்டு பாரம்பரியத்தை பராமரித்து வந்த வக்பு அமைப்பு பலவீனமடைந்தால், இஸ்லாமியர்களின் கல்வி, சமூக, மற்றும் பொருளாதார மேம்பாடு பாதிக்கப்படும். ஏழை இஸ்லாமியர்களுக்கான கல்வி மற்றும் இதர உதவிகள் பாதிக்கப்படும்.

வக்பு வாரியங்களை அரசு கட்டுப்படுத்துவது, இஸ்லாமியர்களின் மத நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமையை பறிப்பதாகக் கருதப்படுகிறது. இது அரச மைப்பு உரிமைகளுக்கு எதிரானதாகவும், சிறுபான்மை சமூகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
வக்பு வாரிய சட்டதிருத்த மசோதா, இஸ்லாமிய சமூகத்தின் மத, பொருளாதார, மற்றும் சமூக நலன்களை பாதிக்கும் வகையில் உள்ளது.
ஒன்றிய பிஜேபி ஆட்சியைப் பொறுத்தவரையில் இஸ்லாமியர்களைக் குறி வைத்துத் தாக்குவதில் குறியாகவே இருந்த வருகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் பிரிவு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு தகுதி இருந்து வந்ததை ரத்து செய்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக சிதைக்கப்பட்டதும் சரி, குடியுரிமை சட்டமாக இருந்தாலும் சரி, எல்லாமே இஸ்லாமியர்களுக்கு இருந்து வந்த உரிமைகளைத் தகர்ப்பதே! இந்தப் பின்னணியில் பார்த்தால் தான். ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த வக்பு சட்டத்தின் நோக்கம் புரியும்.

இந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதார் இந்து மதக் கோயில்களில் முறையாக அர்ச்சகப் பயிற்சிப் பெற்ற நிலையிலும்கூட, அவர்களை அர்ச்சகராக்கக் கூடாது – ஆகமங்கள் அவர்களை அனுமதிப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் வரை செல்லும் கூட்டம்தான் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டுகிறது என்பது நினைவிருக்கட்டும்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்து விட்டு, இப்பொழுது வக்பு சட்டத்தை எதிர்ப்பதாக அதிமுக காட்டிக் கொள்வதை சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *