எங்களுக்கு நீங்கள் பாடம் நடத்த வேண்டாம் உத்தரப்பிரதேச சாமியார் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 28 தமிழ்நாடு எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல; தமிழ்நாட்டின் மீது ஹிந்தி மொழி திணிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறோம் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் வெறுப்பை விதைத்து அரசியல் செய்வதாக உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்ததற்கு “அரசியல் பிளாக் காமெடி” என பதிலடி தந்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இரு மொழிக் கொள்கை

முதலமைச்சர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மிகவும் உறுதியாக பின்பற்றுகிறது. அதேபோல நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் அவசியமானது என்கிற குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த விவகாரங்களில் பாஜகதான் மிகவும் பதற்றமாக இருக்கிறது என்பதை அதன் தலைவர்கள் தந்து கொண்டிருக்கும் நேர்காணல்களே வெளிப்படுத்துகின்றன.

நீதிக்கான யுத்தம்

“வெறுப்பு உணர்வு” பற்றி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் நடத்த விரும்புகிறாரா? எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது. இது ஒரு பொலிட்டிக்கல் பிளாக் காமெடி. நாங்கள் எந்த ஒரு மொழியையும் எதிர்க்கவில்லை; நாங்கள் எதிர்ப்பது எல்லாம் மொழி திணிப்பையும் மேலாதிக்கத்தையும்தான். இது ஒன்றும் வாக்கு வங்கி அரசியலுக்கானதும் அல்ல. இது கண்ணியத்துக்கும் நீதிக்குமான யுத்தம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பதிலடி

முன்னதாக ஏ.என்.அய்க்கு உபி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதம், மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்குகிறார். ஹிந்தி மொழியை ஏன் வெறுக்க வேண்டும்? ஒவ்வொரு மொழியையும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. கன்னடம், மலையாளம் மொழிகளையும் கற்றுத்தருகிறோம். அத்துடன் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுத் தருகிறோம். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த மொழிகளை கற்றுத் தருகிறோம். உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளை கற்றுத் தரும்போது ஹிந்தி மொழியை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் ஏன் கற்றுத்தரக் கூடாது? என கூறியிருந்தார். இதற்குத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிலடி தந்துள்ளார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *