புதுடில்லி, மார்ச் 28 ஒன்றிய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்துகாகன நிதி ஒதுக்கீட்டை குறைத்தது ஏன் என மாநிலங்களவையில் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி
கடந்த 2013-ஆம் ஆண்டு மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின் போது உணவு பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது, கரோனா பெருந்தொற்றின்போது ஏழைகளுக்கு இலவசமாக உணவுப் பொருட்களை வழங்க வகை செய்யும் பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது. இதன்படி இப்போது 81 கோடி பேர் பயன்பெறுகின்றனர்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப் பதை உறுதி செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.12 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால், வரும் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.2,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 2022-2023 நிதியாண்டு முதலே குறைக்கப் பட்டு வருகிறது. இது உணவு பாது காப்பு சட்டத்தை மீறும் செயல். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.