புதுடில்லி, மார்ச் 27–- உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள்
கடந்த 2024-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மிக அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்கின்றனர்.
இதற்கு அடுத்து 2.77 லட்சம் சீன மாண வர்கள். 43,149 தென்கொரிய மாணவர்கள் அமெரிக்காவில் பயில்கின்றனர். கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில், மெக்சிகோ நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர்.
41 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் எப் 1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற இந்தியா உட்பட உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். இந்த சூழலில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு அமெரிக்க தூதரகங்களில் 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டில் 7.69 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்க அரசின் எப்1 விசா கோரி விண்ணப்பித்தனர். இதில் 5.96 சதவீத விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 1.73 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. அதாவது 23 சதவீத எப்1 விசா விண்ணப்பங்கள் ஏற்கப் படவில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டில் 25%, 2016-ஆம் ஆண்டில் 34%, 2017-ஆம் ஆண்டில் 35%, 2018-ஆம் ஆண்டில் 35%, 2019-ஆம் ஆண்டில் 25%, 2020-ஆம் ஆண்டில் 31%, 2021-ஆம் ஆண்டில் 20%, 2022-ஆம் ஆண்டில் 35%, 2023-ஆம் ஆண்டில் 36% என்ற வகையில் எப்1 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 6.79 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர் எப்1 விசா கோரி உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களில் விண்ணப்பித்தனர். இதில் 4.01 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
2.79 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதன்படி 41 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இது அதிகபட்சமாகும். குறிப்பாக இந்திய மாணவ, மாணவி யருக்கு வழங்கப்படும் எப்1 விசாக்களின் எண்ணிக்கை சுமார் 38 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.