நாடாளுமன்றத்திலேயே அதிகாரப்பூர்வமான தகவல்!
புதுடில்லி, மார்ச் 27 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர் ஜாதியினர் என்ற தகவல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் நியமிக்கப்பட்டுள்ள மொத்தம் 715 நீதிபதிகளில் 551 பேர் உயர் ஜாதிப் பிரிவினராவர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மாநிலங்களைவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கடந்த வாரம் ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் உயர்நீதிமன்றங்களில் நிய மிக்கப்பட்டு உள்ள 715 நீதிபதிகளில், எஸ்சி பிரிவினர் 22 பேரும், எஸ்டி பிரிவினர் 16 பேரும், இதர பிற்ப டுத்தப்பட்டோர்(ஓபிசி) பிரிவினர் 89 பேரும், சிறுபான்மையினர் 37 பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் குமார் ஜா, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு எழுப்பியிருந்த கேள்வியொன்றில், ‘உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் பொறுப்புகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம்’ குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலின்படி, உயர்நீதி மன்றங்களில் கடந்த 2018 முதல் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளில் மொத்தமுள்ள 715 பேரில் 164 பேர் மட்டுமே மேற்கண்ட பிரிவு களைச் சேர்ந்தோராவர் என்பது தெளி வாகியுள்ளது. இந்த தரவுகள் மூலம் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பதவி வகிப்போரில் உயர் ஜாதிப் பிரிவுகளைச் சேர்ந்தோர் (பெரும்பாலும் பார்ப்பனர்கள்) 77.06 சதவிகிதம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலில், ‘‘நீதிபதி கள் நியமன விவகாரத்தில் உயர்நீதி மன்றங்களிலிருந்து முன்மொழிவுகளை அனுப்பும்போது, அதில் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்து நீதிபதிகள் பெயர்ப்பட்டியலை தயார் செய்யுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும்’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் அனைத்தும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்து ரையின்பேரிலேயே நியமிக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் சொன்னது பலித்தது
நீதிமன்றங்கள் யார் வசம்?
‘டெய்லி ஹண்ட்’ (Daily Hunt) இணையதளத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார் சொன்னது என்ன?
‘நாம் போராடி சட்டங்கள் கொண்டுவரும் நாளில் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்’ என ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பெரியார் குற்றம்சாட்டி இருந்தார். அதனை உண்மை என்பதை உணர்த்தும் விதமாக தான், தற்போது நீதிபதி நியமனங்கள் தொடர்பான தரவுகள் அமைந்துள்ளன.
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு தேவை என்ற திமுக போன்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை அவசியமானது என, மேற்கண்ட தரவுகள் காட்டுகின்றன என அக்கட்சியினர் வலியுறுத்தி வரு கின்றனர். இந்த நிலை நீடித்தால் ஏழ்மையான பின் தங்கிய சமூக மக்களுக்கு சரியான நீதி கிடைக்காது எனவும், இதன் காரணமாகவே ஒன்றிய அரசு ஜாதிவாரி பிரதிநிதித்துவம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தடுப்ப தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.