நந்தனார் என்ற ஒரு திரைப்படம் 1942ஆம் ஆண்டில் திரையில் வந்தது. நந்தன் நாயனார் குறித்த ஒரு படம். கொடும் துன்பத்தில் உழன்ற பிறகு தான் சிவன் அவருக்கு அருள்வானாம். ஆனால் அவரை கொடுமைப்படுத்தியவர்களுக்கு சிவன் என்ன தண்டனை கொடுத்தான் என்று எல்லாம் கேட்கக் கூடாது. படம் பார்த்து பக்தி மழையில் நனையவேண்டும்.
1985ஆம் ஆண்டு அலைஓசை என்ற திரைப்படம் வந்தது. அந்த திரைப்படத்தின் ஒரு பாடலின் சந்தத்தில் ஒரு வரி ”நந்தன் இனமே ஏறும் அரியாசனமே” அரை நூற்றாண்டிற்குப் பிறகு மீண்டும் நந்தன் பெயர் திரைப்படத்தில் உச்சரிப்பிறகு ஆளானது.
முந்தைய படம் பிரபல நகைக்கடைகளின் விளம்பரம் போன்றது. லாஜிக் எதுவும் பார்க்ககூடாது, பின்னால் வந்த படத்தின் பாடல் வரிகள் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கான முழக்கம்
தீண்டாமை – திருநாளைப் போவார்
ஒன்றுமில்லை நந்தன் என்ற தீண்டத்தகாதவனின் பெயரை உச்சரிப்பதா? என்று தீண்டாமை வெறியில் சூட்டப்பட்ட பெயர்தான் இந்த திருநாளைப் போவார்
பார்ப்பனியத்தின் அத்தனை கொடூரங்களுக்கும் இன்றும் சாட்சியாக இருக்கும் இடம் சிதம்பரம் கோவில்தான்.
நந்தனார் பிறந்த காலம் 6 ஆம் நூற்றாண்டு அதாவது பவுத்த, சமண மதங்களுக்கு சைவ மதத்தவரால் கொடூரமாக முடிவெழுதிக்கொண்டு இருந்த காலம், சுமார் 7 நூற்றாண்டு சமணமும் பவுத்தமும் தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்து இயல், இசை, நாடகம், காப்பியம் என அனைத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பவுத்த மரபு பரவலின் காரணமாக ஊர் பெயர்களுடன் பொதுமக்கள் பெயர்களும் சூட்டப்பட்டது, அப்படி வந்த ஒரு பெயர் தான் நந்தனார் – பெயர் காரணம் குறித்து எந்த ஒரு குறிப்பும் இல்லை, ஆனால் அவர் நாளைக்கோவிலுக்குப் போவேன் என்று நாள் தோறும் கூறுவதால் அவருக்கு ’திருநாளைப் போவார்’ என்ற பெயர் வந்தது. இந்தப் பெயரை வைத்துதான் சிவன் அவரை அழைத்தாராம்.
திருநாளைப் போவார் என்பது கிண்டலடிக்கும் சொல் ஆகும்
அதாவது அந்தா வாரான் பாரும் அவன் எப்பப் பார்த்தாலும் பொய் சொல்லுவான். சரியான பொய்க்காரன் என்று கூறும் பழக்கம் உண்டு. அதே போல் தான் நந்தனைப் பார்ப்பவர்கள் அதோ வரான் பாரு அவன் எப்ப பார்த்தாலும் நாளைக்குச் சிதம்பரம் போவேன் என்று கூறிக்கொண்டே இருப்பான் என்பார்கள். அதாவது சிவன் நந்தனின் பெற்றோர்கள் வைத்த பெயரான நந்தா என்று கூறவில்லை. அந்த கற்சிலையும் கிண்டல் அடித்தது.
சரி ஏன் நந்தன் என்ற சொல்லை சொல்லவில்லை என்றால் அது பவுத்த மரபுச்சொல் ஆகும்
சித்தார்த்தனின் சிற்றன்னை மகாபஜாபதி கவுதமியின் மகன் நந்த சாக்கியன். அந்த நந்த சாக்கியனின் பெயரைத்தான் நந்தனாருக்கும் அவரது பெற்றோர் வைத்துள்ளனர்.
ஆகையால் தான் சிவன் கூட நந்தன் பெயரைக்கூறாமல் கிண்டலடித்து அவனை அழைத்தார் என்று எழுதிவைத்துள்ளார்கள் அதாவது பெயரில் கூட தீண்டாமையைக் கண்டார்கள்
அன்று சைவ மதத்தை பரப்புவதற்கு கொடூரங்கள் புரிந்தவர்கள் சாம, தான, தண்ட பேதங்களைக் கடந்து மக்களிடையே பிரபலமானவர்களை தங்களவர்களாக காட்டிக்கொள்ள படைக்கப்பட்ட சூழ்ச்சி நாடகம் தான் நந்தனாரை நாயன்மாராக மாற்றியது.
எப்படி மதுரையில் சமணர்களை அழைத்து வாதத்தில் தோல்வியுறச்செய்து கழுவேற்றினார்களோ அதே போல் தான் கல்வி கேள்வியில் சிறந்த நந்தனாரை அழைத்து நெருப்பில் தள்ளி கொலை செய்தார்கள்.
நெருப்பில் தள்ளி கொலை செய்வது அன்றைய காலகட்டத்தில் பரவலாகா தென்னகம் முழுவதும் இருந்தது,
இன்றைய சுசீந்திரத்தில் பல பவுத்த துறவிகளை நெருப்பில் தள்ளிக் கொலை செய்தார்கள்.. மதுரையில் தெற்கே திருப்பரங்குன்றம், மற்றும் வடக்கே யானை மலை மீதேறி சமண பவுத்த துறவிகளை எரியும் நெருப்பில் தள்ளிவிட்டு கொலை செய்த நிகழ்வுகள் பல கல்வெட்டுச்சான்றுகளாக உள்ளன.
இன்று நாட்டார் மரபு கோவில்களில் தீக்குழி இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் எல்லாம் அன்று பவுத்த சமணர்களை தீயில் தள்ளி எரித்த நிகழ்வுகளின் நினைவூட்டல்தான்.
நந்தன் வரலாற்றைப் பார்க்கும் போது அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருந்திருக்கிறார். அவருக்கு சமூகத்தில் நல்ல மரியாதை இருந்துள்ளது. சமணம் பவுத்தம் போன்றவற்றை அழித்து அதைச்சார்ந்த அடையாளங்கள் சைவ வைணவ அடையாளமாக மாறிக்கொண்டே வந்தது.
அப்படி மாறிய ஒன்றாகத்தான் நந்தன் காப்பியமும் ஒன்றாக இருக்கவாய்ப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் சில நாயன்மார்கள் நெருப்பில் ‘ஜோதி’யான நிகழ்வுகள் உண்டு. திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் ஆகியோர் திருஞான சம்பந்தரின் திருமணத்தின் போது மண்டபம் தீயிடப்பட்டு அனைவரும் இறந்த நிகழ்வு நடந்தது,
அதை அப்படியே ஜோதியில் அய்க்கியமானார்கள் என்று பக்திப் பரவசத்தோடு கிளப்பி விட்டார்கள். இது எல்லாம் யார் பெரியவன் என்ற போட்டியில் நடந்த கொலைகள் தான்.
ஞானப் பரம்பரையில் வந்த நந்தன் கோவிலுக்குள் நுழைந்தது பெருங்குற்றம் என்று கருதி அவரையும் தீயிலிட்டு கொலை செய்து ‘ஜோதி’யில் அய்க்கியமானான் என்று கதைவிட்டார்கள். நந்தனார் நுழைந்த வாசலை இன்று வரை மூடி வைத்திருக்கிறார்கள்.
இப்படிக் கொலைசெய்த குற்றத்தை மறைக்கவே, “சிவ ஜோதியில் அய்க்கியம்”என்ற புனைவை உருவாக்கி நாயன்மாராக உயர்த்தி, குற்றத்தை மறைத்துக் கொண்டது சனாதன தர்மத்தில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக்கும், தீட்டுக்கும் சாட்சி.
ஆணவம்
பவுத்த சமண சமயங்களை அழித்து சைவம் வளர்ந்த பிறகு அன்று முதல் இன்று வரை அனைத்து சிவன் கோவில்களிலும் சைவ ஆகம முறைப்படியில் வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருக்க, சிதம்பரம் கோவிலில் மட்டும் வைதீக முறைப்படி வழிபாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகம விதிப்படி மூலவர் சிலை எந்த வடிவில் உள்ளதோ, அதே வடிவில் தான் உற்சவர் சிலையும் இருக்க வேண்டும்.
ஆனால் தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலை கைப்பற்றிய உடன், அந்த சுயம்புலிங்கத்தை இருட்டடிப்பு செய்து விட்டு அய்ம்பொன்னால் வடிக்கப்பட்ட நடராஜ உற்சவர் சிலையையே மூலவர் ஆக்கி விட்டனர்.
ஆகம விதிகளின்படி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்தச் சிலையும் கருவறையை விட்டு நீங்கக் கூடாது.
அதனால் தான் கோவிலுக்கு வந்து கடவுள் சிலைகளை வழிபட முடியாதவர்களுக்காக, கருவறையில் இருக்கும் கற்சிலைகளை ஒத்திருக்கும் உற்சவர்சிலைகள் அவ்வப்போது நடக்கும் தேர்த் திருவிழாக்களில் உலாவரும்.
ஆனால் இந்தியாவில் கருவறையில் இருக்கும் சிலைகளை ஊர் சுற்றவிடுவதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே.
அதனால் மூலச்சிலை ஆனித் திருமஞ்சன விழாவுக்கு வெளியே போனபிறகு வெறுமனே உள்ள கருவறையை கண்ணிற்கு காட்டாமல் இருக்கத் தான் 4 நாளுக்கு கனகசபையை மூடி வைத்தார்கள்.
பிறகு கனகசபையில் அனைவரும் ஏறி எதைப் பார்க்கிறார்கள் அந்த சிதம்பர ரகசியம் சித்சபையில் இருக்கும் ஒரு சிறிய வாயில்/பீடம்இந்த வாயிலை ஒரு நீல நிறத் துணியால் மூடி இருப்பார்கள். யாராவது சிதம்பர ரகசியத்தை தரிசனம் செய்ய நிறைய பணம் கொடுத்தால் அந்த நீலத் துணியை விலக்கி காண்பிப்பார்கள்.
அதுக்குள்ள தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு வில்வ தள மாலை அந்தரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும். அங்கு எந்தச் சிலையும் இருக்காது. அதாவது இறைவன் என்பவன் ஆதி அந்தம் இல்லாத, எந்த உருவமும் இல்லாத ஆகாயம் போன்றவன் என்பது தான் அந்த சிதம்பர ரகசியம்.
இந்த பக்கம் சித்சபையில் இறைவன் என்பவன் உருவமில்லாதவன் என்று கூறிக்கொண்டு மறுபக்கம் கனகசபையில் நடராஜன்தலை முடியை விரித்துப் போட்டு, ஒற்றைக் காலை தூக்கி பிரபஞ்ச நடனம் ஆடும் உருவம் உள்ளவன்னு கதைவிடுகிறார்கள்
அவர்களுக்குத் தேவை என்றால் 4 வேதத்துலயும் இல்லாத உருவ வழிபாட்டையும் கொண்டுவருவார்கள்.
அங்குள்ள சுயம்பு லிங்கம் என்பதை மறைத்து நடராஜ உற்சவ சிலையை மூலவர்.ஆக்கிடுவானுங்க. அந்த மூலவர் சிலையையும் தேர்த் திருவிழா என்ற பெயரில் ஊர் சுற்றி வந்து காசு பார்ப்பார்கள்.சைவ ஆகம விதிகளை காற்றில் பறக்க விட்டு வைதீக முறைப்படி வழிபாடு நடத்தி ஆன்மீகத்தையே தங்கள் விருப்பம் போல் மாற்றுவார்கள் – சிற்றம்பலத்தை (சிறிய கோவில்) சித்சபைன்னும், பொன்னம்பலத்தை (பெரிய கோவில்) கனகசபைன்னும் சொல்லி சமஸ்கிருதத்துக்கு உயிர் கொடுப்பார்கள் சைவக்கோவில் என்று கூறி,தூய தமிழில் தேவாரம், திருவாசகம் பாட வந்தால் தீட்டு என்று சொல்லி விரட்டுவார்கள்
பெண்ணடிமைக்கு புராணக் கதை
ஒரு சமயம் சிவனுக்கும், பார்வதிக்கும் ஆடல் கலையில் யார் சிறந்தவர் எனும் போட்டி நடக்குது. நடனத்துக்கு.தேவையான நளினம், இயல்பாகவே பெண்களுக்கு இருப்பதால் ஆடற்கலையில் சிவனை விட ஒரு படி மேலே இருந்தாள் பார்வதி.ஆனால் ஒரு பெண்ணிடம் தோற்பதை விரும்பாத ஆணாதிக்க சிவன், தான் தான் ஆடற்கலையில் சிறந்தவன் என தொடர்ந்து பார்வதியிடம் வாதம் புரிந்தான்.
ஆடற்கலையில் யார் சிறந்தவர்? எனும் போட்டி வந்த போது ஆணான சிவன் தான் ஆடற்கலையில் சிறந்தவன் என்று தேவர்கள் தீர்ப்பளித்தனர். ஆனால் இதை ஏற்காத பார்வதி அண்ணன் விஷ்ணுவிடம் வந்தாள்.
தனது அண்ணன் சரியாக தீர்ப்பளிப்பான் எனும் நம்பிக்கையில் ஆடற்கலையில் யார் சிறந்தவர் என அவனிடம் கேட்டாள். உலகில் உள்ள அனைத்து செல்வங்களுக்கும் சொந்தக்காரியான தன் மனைவி மகாலட்சுமியையே தனக்குக்கால் அமுக்கி விடும் வேலைக்காரியாக பார்க்கும் ஆணாதிக்கவாதியான விஷ்ணு எப்படி ஒரு பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பான்? அவனும் சிவனே சிறந்தவன் என்று பொய் தீர்ப்பளிக்கிறான். அந்தத் தீர்ப்பிலும் திருப்தியடையாத பார்வதி சிவனை ஆடல் போட்டிக்கு அழைக்கிறாள்.
ஒருவர் ஆடும் நடனத்தைமற்றவர் அப்படியே ஆடிக் காட்ட வேண்டும். அப்படி ஆட முடியாதவர் தோற்றவர் ஆகி விடுவார். இது தான் போட்டி – போட்டி துவங்கியது. சிவனும் பார்வதியும் ஆடத் துவங்கினர். சிவன் ஆடிய அனைத்து நடனங்களையும் சிவனை விட சிறப்பாகவே ஆடிக் காட்டினாள் பார்வதி. பார்வதியின் பக்கம் வெற்றி போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த சிவன் அவளை வீழ்த்த சூழ்ச்சி செய்கிறான்.ஆடிக் கொண்டிருக்கும் போது கழன்று தரையில் விழுந்த தனது காதணியை காலால் எடுத்து அதை அப்படியே காலாலேயே தனது காதில் மாட்டி கொண்டான். இதைப் பார்த்த பார்வதி அதிர்ந்து போய் நின்றாள். நடன சபையே ஒரு கணம் அதிர்ச்சியில்உறைந்து போய் நின்றது.
இப்படி அனைவரும் அதிர்ந்து உறைந்து போய் நின்றதுக்கு காரணம் சிவன் தனது காலால் கம்மல் மாட்டிய நடனத்தால் அல்ல. வேறு காரணத்தால்.உள்ளாடைகள் எதுவுமே அணியாமல் கால்களைத் தூக்கிய பிறகு அவனது உள்ளுறுப்புகள் அனைவருக்கும் தெரிந்தது. இதைக் கண்டதாலும் ஆனால் பெண் என்பதாலும் தானும் அதைப்போல் ஆடமுடியாது என்று ஒப்புக் கொண்டாள் பார்வதி. இதனால் அவள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்
ஆணாதிக்கத்தால் தோற்கடிக்கப்பட்ட பார்வதி இன்றும் தில்லைக் காளியாக சிதம்பரம் கோவிலில் ஒரு மூலையில் அமரவைக்கப் பட்டிருக்கிறாள்.
21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமை, அகந்தை, ஆணாதிக்கம் அனைத்தும் சேர்ந்த ஒரு இடமாக தீட்சிதர்கள் நிர்வகிக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் காட்சி தருகிறது.
கட்டுக் கதைகளை மக்கள் மனதில் இருந்து மாற்ற நீண்ட கால பரப்புரை தேவை, ஆனால் தீட்சிதர்களின் அகந்தையை அடக்க சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையில் எடுத்து அதை அனைவருக்குமான கோவிலாக மாற்றவேண்டும். இதன் மூலமும் கருவறைத் தீண்டாமை முடிவிற்கு வரும்.