”உ.பி., மீதான ஒன்றிய அரசின் கனிவுப் பார்வை, தமிழ்நாட்டின்மீது இல்லையே ஏன்?” என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சட்டப் பேரவையில் நடந்த விவாதம்:
பா.ஜ., – வானதி சீனிவாசன்: பெண்களுக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என, கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்கிறோம். ஆனால், பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு, ரத்தசோகை பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது.
என் கோவை தெற்கு தொகுதியில், அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 20 சதவீத பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது.
அமைச்சர் கீதாஜீவன்: ஒன்றிய அரசின் போஷன் அபியான் திட்டத்தை விட, தமி்ழ்நாட்டில் கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உணவுப் பழக்க வழக்கங்களால் பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்க முடியும்.
வானதி சீனிவாசன்: பெண்களின் பெயரில் சொத்துகள் வாங்கினால், ஒரு சதவீதம் பதிவுக் கட்டணம் குறைக்கப்படும் என்பது, நல்ல விசயம். குறைந்தபட்சம் அய்ந்து சதவீதம் பதிவுக் கட்டணம் குறைத்தால்தான் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்க ஆர்வம் காட்டுவர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பிடித்து வைத்துள்ள, 2,000 கோடி ரூபாய், 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள, 3000 கோடி ரூபாய், ஒவ்வொரு திட்டத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதை போலவும் தமிழ்நாட்டிற்கும் ஒன்றிய அரசு நிதியைக் கொடுக்க வேண்டும்.
உ.பி., மீது கனிவுப் பார்வை, ம.பி., மீது அன்புப் பார்வை, பீகாருக்குக் கருணைப் பார்வை இருப்பதுபோல, தமிழ்நாட்டிற்கும் ஒன்றிய அரசின் கருணைப் பார்வை கிடைத்து விட்டால், நாங்கள் மகிழ்வோம்.
வானதி சீனிவாசன்: இணக்கமாக செயல்பட, ஒன்றிய அரசு தயாராகவே உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, ஒன்றிய அரசை குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நிதிக்குழு பரிந்துரையின்படி மாநிலங்களின் நிதியை, ஒன்றிய அரசு வழங்காமல் இருக்க முடியாது. ஒன்றிய அரசின் திட்டங்களால், தமிழ்நாடுதான் அதிகம் பலனடைந்துள்ளது.
தங்கம் தென்னரசு: தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு குறைந்து கொண்டே வருகிறது. 9ஆவது நிதிக் குழுவில் தமிழ்நாட்டிற்கு, 7 சதவீதம் நிதிப்பகிர்வு நிர்ணயிக்கப் பட்டது. இப்போது, 15ஆவது நிதிக்குழுவில், 4.07 சத வீதமாக குறைந்து விட்டது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி, 2.63 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை.
கடந்த 2015 -2016இல் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 1.6 சதவீதமாக இருந்த ஒன்றிய அரசின் உதவி மானியம், 2024-2025இல் 0.66 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால், 2015 – 2016 முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில், மாநில அரசு மீது சுமையை ஏற்றி வருகிறது.
ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, மகாராட்டிரா, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குகின்றனர். கேட்டால் இணக்கமாக இல்லை என்கின்றனர்.
‘உறவுக்குக் கை கொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்பதுதான் எங்கள் கொள்கை. மொழிக் கொள்கையை விட்டுக் கொடுத்துதான், சமரசம் செய்து நிதியை பெற வேண்டும் என்றால், அதை தி.மு.க., அரசு ஏற்காது.
சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த விவாதங்கள் எதை உணர்த்துகின்றன? ஒரு கட்டம் வரை ஏதோ சமாளித்து சட்டமன்றத்தில் பேச முயன்ற பிஜேபியைச் சார்ந்த திருமதி வானதி சீனிவாசன் அடுத்து சமாளிக்க முடியாமல் விவாதத்திலிருந்து பின் வாங்கினார்.
அவர் என்ன செய்வார், பரிதாபம்! தான் வரித்துக் கொண்ட கட்சிக்கு எதையாவது பேசியாக வேண் டுமே! அதனால் முடிந்தவரை மூச்சை இழுத்துப் பேசியிருக்கிறார் அவ்வளவுதான்.
‘பசியாத வரம் தருகிறேன் தாயே! ஒரு பிடி சோறு போடு!’ என்றானாம் – அதுதான் நினைவிற்கு வருகிறது.
தேசிய கட்சிகளுக்கு ஏற்படக் கூடிய நெருக்கடியும் விழிபிதுங்கலும் அறியப்பட்டவை தானே!