ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? கவிஞர் வைரமுத்து கேள்வி

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 26- ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஞானபீட விருது

ஞானபீடத்தின் 59ஆம் விருது ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். 58ஆம் விருது சமஸ்கிருத மொழிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை ஹிந்தி மொழி பெறுவது பன்னிரண்டாம் முறையாகும். அதில் எங்களுக்கு கசப்போ காழ்ப்போ இல்லை.

ஆனால், செம்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டு இலக்கண இலக்கியச் சான்றுகளோடு இயங்கும் தமிழ், அனலையும் புனலையும் மணலையும் தாண்டிவந்த தமிழ், ஒரு காலத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்தப் பரப்பெங்கும் ஒரு மொழியாக நின்ற தமிழ் இதுவரை இரண்டே இரண்டு முறை மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறது என்பதை நினைத்தால் இதயத்திற்கு வெளியே ரத்தம் கசிகிறது.

தனக்கு வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தில் என் அறிக்கை அழுவதாக யாரும் தங்கள் அழகுக் கைக்குட்டையை அழுக்குப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
நான் இலக்கிய நீதி கேட்கிறேன். இந்தியப் பட்டியலிலிருந்து தமிழை எடுத்து விட்டது ஏன்?

தென்னகமும் சேர்ந்ததே இந்தியா என்பதை ஞானபீடம் அறியாதா? தமிழ் என்பது மூடப்பட்ட – மொழியென்றும், தீவிரவாதிகளின் ஆயுதக் கிடங்கு என்றும் இன்னும் எத்துணை ஆண்டுகள் கருதிக்கொண்டு இருப்பீர்கள்?

மனசாட்சியோடு விவாதிக்க வேண்டும்

ஞானபீடத்தின் உயர்மட்டக் குழுவில் தமிழுக்குப் பிரதி நிதித்துவம் இருக்கிறதா? தமிழ்ப் படைப்பாளிகள் உங்கள் விதிகளை நிறைவு செய்யவில்லையா? குழு கூடித்தான் முடிவு செய்கிறதா? அல்லது மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா? விருது முடிவுசெய்யும் இடத்தில் பீடம் இருக்க, ஞானம் வெளியேறிவிடுகிறதா? இத்துணை கேள்விகளையும் தென்னகம், குறிப்பாகத் தமிழ்நாடு கேட்கிறது.
ஒரு காலத்தில் இந்தியக் கலாச்சாரத்தின் முகமாக விளங்கிய தமிழை, இன்று முகவரி இழக்கச் செய்வது என்ன நியாயம்? வடக்கை மட்டுமே நோக்குமாறு தெற்கை நோக்கித் திரும்பாதவாறு உங்கள் கண்களைப் படைத்தது யார்?

ஞானபீடம் என்பது வடநாட்டுப் படைப்பாளிகளுக்கே உரியது என்ற எழுதப்படாத விதியை நீங்கள் எழுதிவிடவே போகிறீர்களா? இந்தக் கேள்விகளையெல்லாம் அறிவுலகம் கேட்கிறது.

இந்தியா பெரிதும் மதிக்கும் ஞானபீடம் இந்தக் கேள்விகளை மடியில் முடிந்து கொள்ள வேண்டும்; பிறகு மன சாட்சியோடு விவாதிக்க வேண்டும். செவ்வாய் கோளைக் கழித்துவிட்டு சூரியக் குடும்பம் பூரணமாகாது. தமிழைக் கழித்துவிட்டு ஞானபீடம் முழுமையுறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *