பார்ப்பனர்கள் பார்வையில் பெண்கள்!

viduthalai
4 Min Read

கேள்வி: ஒரு வீட்டில் ஒரு ‘துக்ளக்’தான் வாங்குகிறோம். அதை அந்த வீட்டிலுள்ள ஆண்களும், பெண்களும் படிக்கிறார்கள். எதை வைத்து பெண் வாசகர்கள் அதிகரிக்கின்றனர் என்று மதிப்பீடு செய்கிறீர்கள்?

பதில்: ‘துக்ளக்’ 12.2.2025 இதழில் 40 கேள்விகளில் பெண் வாசகர்களின் கேள்விகள் 18. 42.5% – 26.2.2025 டியர் மிஸ்டர் துக்ளக்கின் 8 கடிதங்களில் பெண் களுடையது – 37.5% அரசியல் கட்சிகள் தரும் 33% பங்கைவிட ‘துக்ளக்’கில் பெண்களின் பங்கு அதிகம்.
‘துக்ளக்’ 26.3.2025 பக்.28.29

வியாபாரக் கண்ணோட்டம் என்று வருகிறபோது, பெண்களை ‘ஆகா ஊகா’ என்று ‘துக்ளக்’ குருமூர்த்திகள் குஷியாகி விடுவார்கள்.

ஆனால், குருமூர்த்தியாகட்டும், அவரின் குருநாதர் சோவாகட்டும், சங்கராச்சாரியாராகட்டும் பெண்களைப் பற்றிய கண்ணோட்டம் என்ன?
இதோ சோ பேசுகிறார்:

கேள்வி: ஆனானப்பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இரங்கும்போது, உங்கள் மனம் மட்டும் அவர்கள்மீது ‘இரக்கம் கொள்ள மறுப்பது ஏன்?

பதில்: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா?
(‘துக்ளக்’ 14.9.2015)
இதே குருமூர்த்தி சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் என்ன பேசினார்? அதன் காரணமாக எவ்வளவு வாங்கிக் கட்டினார்?

‘இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்கள் தான்!’ என்று சொன்னவர்தானே!
10.4.2019 (பக்கம் 29) நாளிட்ட ‘துக்ளக்’கில் கேள்வி ஒன்றிற்கு திருவாளர் குருமூர்த்தி அய்யர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு ஒவ்வாதது என்பது வெட்ட வெளிச்சம்! நம்மைப் பொறுத்தவரை அரசியலில் ஆண்கள் கெட்டதுபோல் பெண்கள் கெடாமல் இருப்பது குடும்பங்களுக்கும் நாட்டுக்கும்கூட நல்லது’ என்று கருதிய ஆசாமிதான் ‘துக்ளக்’கை பெண்கள் தூக்கிக் கொண்டாடுகிறார்கள் எ்னறு ‘துக்ளக்’ வியாபார நோக்கில் எழுதுகிறார்.

வேலைக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் பேர் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார் – விதவைப் பெண்கள் தரிசு நிலம் என்றும் கூறினார்.
இது குறித்து எழுத்தாளர் வாஸந்தி ‘இந்தியா டுடே’ (தமிழ்) இதழில் ‘ஹிட்லரும் சங்கராச்சாரியாரும் – பெண்களை இழிவுபடுத்தி மடாதிபதிகள் பேசுவது ஏன்? என்ற தலைப்பில் ஆத்திரம் பொங்க ஒரு கட்டுரையையே எழுதித் தீர்த்தார் இதோ அந்தக் கட்டுரை.

வாஸந்தி

ஹிட்லரும் சங்கராச்சாரியாரும்.

பெண்களை இழிவுபடுத்தி மடாதிபதிகள் பேசுவது ஏன்?

ஆரிய கலாச்சாரத்தை நிலைநாட்டும் வெறி கொண்டிருந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மன் சமூகத்தின் தூய்மையைக் காப்பாற்றும் வகையாக பெண்களை ‘கிந்தர், கூஹே, ‘கிர்ஹே’ (குழந்தைகள், சமையல், சர்ச்) ஆகியவற்றுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழங்கினான். அதாவது, படி தாண்டா பத்தினிகளினாலேயே சமூகத்தின் பண்பாடு காப்பாற்றப்படும். படி தாண்டி விட்டால், பெண்களின் ஒழுக்கம் கெடும் – மதத்தின் பெயரில், அரசியலின் பெயரில் நடக்கும் அராஜகத் தாலும் எதேச்சாதிகாரத்தாலும் கெடாத சமூகம், பெண்கள் வெளியில் சென்றால் கெட்டுப் போகும்.

ஹிட்லர் காலம்தான் ஆச்சே என்று நினைக்காதீர்கள். இதெல்லாம் நம்ம ஊர் ஆள் ஹிட்லர் சாயலில் சொன்னது. ஒரு விசுவாசப் படையைக் கொண்ட காஞ்சி மடத்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சொல்லியிருக்கிறார். “பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. பணக் கஷ்டத்தால்தான் வேலைக்குச் செல்கின்றனர் என்றால் வீட்டிலிருந்தபடியே சில வேலைகள் செய்து சம்பாதிக்கலாம் (எப்படி? அப்பளம் இட்டா?). வேலைக்குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம் பேர்தான் ஒழுக்கமாக இருக்கின்றனர். ‘‘நமது பாரம்பர்யத்தைக் கட்டிக் காக்கின்றனர்.” காஞ்சி மடத்தில் இப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வுகள் செய்வதில்தான் நேரம் செலவழிகிறது என்று ேதான்றுகிறது. சில மாதங்களுக்கு முன்பு விதவைகளை தரிசு நிலம் என்று சுவாமிகள் சொன்னார். இப்போது ேவலைக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார். எப்படி வந்தது இந்தக் கணக்கு? எப்படி அதை நிரூபிப்பார் சாமியார்? பெண்களில் எத்தனை சதவீதம் ஒழுக்கமானவர்களாம்? அதற்கு ஆய்வு உண்டா அல்லது ஆண்களுக்கு ஒழுக்கமே தேவையில்லை என்ற மனுதர்ம

ஸ்மிருதிகளை ஆதாரமாக்கிக் கொள்கிறாரா?

சங்கர மடம் நடத்தும் ஒரு பள்ளியில் ஒரு ஆண் ஆசிரியரின் ஒழுக்கத்தைப் பற்றி புகார் வந்த போது ஆசிரியருக்கு வக்காலத்து வாங்கி பேசினவர்தானே? ஸ்மிருதிகளில் பெண்களை அடிமைப்படுத்தும்படியான, கேவலப்படுத்தும்படியான பகுதிகளை அகற்றி, நல்ல அறிஞர்களைக் கொண்டு முற்போக்குச் சிந்தனைகளுடன் மறுபடி எழுதப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால் இந்த வேலையை நிச்சயமாக மடாதிபதிகளிடம் விடக் கூடாது என்றும் சொன்னார்.

தெரியாமல் தான் கேட்கிறேன், இந்த சங்கர மடங்கள் எந்த யுகத்தில் புதைந்திருக்கின்றன ?’ ஆணுக்குச் சற்றும் இளைப்பில்லை என்றே இந்த வையகத்தை ஆள வந்தோம்’ என்ற புதுயுகப் பாய்ச்சலோடு, தரிசனத்தோடு புதுமைப் பெண்ணை வரவேற்றானே 50 ஆண்டுகளுக்கு முன், பாரதி என்ற கவிஞன், அவனைப் பற்றி சங்கர மடத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்ற வார்த்தைகளின் சாராம்சமும் இவர்களுக்குப் புரியாது.

முற்போக்குச் சிந்தனைகள் இவர்களுடைய எதேச்சாதிகாரத்துக்கு ஒத்து வராததாலேயே பண்பாடு, ‘கலாச்சாரம் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி பலவீனமானவர்களின் சிந்தையைக் குழப்புகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களின் கஷ்டங்களை உணராமல் சக்தி வாய்ந்த சாதனமான தொலைக்காட்சியின் வழியாக மடத்தின் தலைவர் ஒருவர் இப்படிச் சொல்வது எத்தனை ஆபத்தான விஷயம்? அலுவலகத்திற்குச் செல்லும் மத்திய வகுப்புப் பெண்கள் கையில் மட்டுமே நமது பண்பாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு இருப்பதாக சுவாமிகள் நினைப்பதும் தெரிகிறது. பணத் தேவைக்காக மட்டுமே பெண்கள் வேலைக்கும் போகிறார்கள் என்று நினைப்பதும் மகா கேலிக்கூத்தாக இருக்கிறது.
சுவாமிகளுக்கு உடனடித் தேவை சரித்திரத்தில், சமூகவியலில் டியூஷன். அது கிடைக்கும் வரை வாயை மூடிக்கொண்டு இருக்கட்டும். பெண் பாவம் பொல்லாதது.
நன்றி. “இந்தியா டுடே’’

பெண்களே பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *