மணிப்பூரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள்மீது தாக்குதல்! அமைதியை சீர்குலைக்க முயற்சியா?

viduthalai
2 Min Read

இம்பால், மார்ச் 24 மணிப்பூரில் அமைதியை சீர் குலைக்க முயற்சி மேற்கொள் ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்ட மைதேயி குழு நிர்வாகிகள்மீது மற்றொரு குழு கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது என்று மணிப்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோதல்

வடகிழக்கு மாநிலமான மணிப் பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி மைதேயி, குகி ஆகிய இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

கடந்த பிப்ரவரியில் மாநில முதல மைச்சர் பிரேன் சிங் பதவி விலகினார். தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட ஆளுநர் அஜய் பல்லா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அமைதி ஒப்பந்தம்

இதன் ஒரு பகுதியாக மைதேயி, குகி சமுதாயங்களில் செயல்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் அமைதி ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டு உள்ளன. இரு தரப்பிலும் ஆயு தங்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மைதேயி சமுதாயத்தை சேர்ந்த யுஎன்எல்எப் ((பி) என்ற கிளர்ச்சிக் குழு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது.
இந்த குழுவின் மூத்த நிர்வாகி நந்தகுமார் சிங் (56) என்பவரின் வீடு, மணிப்பூரின் கோங்பால் தாங் நகரில் அமைந்துள்ளது. அவரது வீட்டில் யுஎன்எல்எப் (பி) தொண்டர்கள் நேற்று முன்தினம் குழுமியிருந்தனர்.அப்போது சுமார் 20 பேர் கொண்ட கும்பல், நந்தகுமார் சிங்கின் வீட்டில் நுழைந்து யுஎன்எல்எப் (பி) தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் நந்தகுமார் சிங் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து மணிப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் பார்த்ததும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் 4 பேரை மட்டும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து மணிப்பூர் காவல் துறையினர் கூறியதாவது: மணிப்பூரில் அமைதியை சீர் குலைக்க சில குழுக்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட யுஎன்எல்எப் (பி) நிர்வாகிகள் மீது அடையாளம் தெரியாத கும்பல் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. முதல் கட்ட விசாரணையில் மைதேயி சமுதாயத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற கிளர்ச்சிக் குழு தாக்குதல் நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த குழுவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்து உள்ளோம். இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீதிபதிகள் கள ஆய்வு

மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டும் முயற்சியாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த், விக்ரம்நாத், சுந்தரேஷ், விஸ்வநாதன், கோட்டீஸ்வர் அடங்கிய குழு அந்த மாநிலத்துக்கு சென்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை, நீதிபதிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மணிப்பூரின் சட்டம், ஒழுங்கு நில வரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் களஆய்வு செய்தனர். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *