ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசோடு தொடர்புடையது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

3 Min Read

மதுரை, மார்ச் 23- தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சதீஷ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 1983இல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் வீடு வீடாக ஜாதி, பொருளாதாரம், மற்றும் கல்வி தொடர்பான விவரங்களை நூறு சதவீதம் சேகரித்து 1985இல் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. தற்போது தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

இதனால் தமிழ்நாடு மக்களின் பொருளாதார நிலை, வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு குறித்து ஆய்வு செய்து இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது.

உச்ச நீதிமன்றத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் ஜாதி, பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான கணக்கெடுப்பை நடத்துவது இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் அமையும்.

தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகள், பழங்குடி இனங்கள், குழுக்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து கடந்த 2020 டிச.21இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையில் 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 2020இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு,

எஸ்.சிறீமதி அமர்வு 21.3.2025 அன்று விசாரித்து, ‘ஜாதிவாரியான கணக்கெடுப்பு ஒன்றிய அரசுடன் தொடர்புடையது. மேலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டது.

வாய் சுகாதாரம் பேணாவிடில்
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும்
மருத்துவர்கள் எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 23- பேறு காலத்தில் வாய் சுகாதாரம் பேணாவிடில், கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவமனை சார்பில் வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் டாக்டா் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெரிய திரை அமைத்து சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு காட்சி விளக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
எவ்வாறு பல் துலக்க வேண்டும், வாயை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியின்போது டாக்டா் பிரேம்குமார் மற்றும் பல் மருத்துவ நிபுணா்கள் கூறியதாவது: வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகள் இல்லையென்றால், வாய்வழி நோய்கள் ஏற்படும். அது ஒட்டுமொத்த உடல் நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வாய் சுகாதாரமாக இல்லை என்றால் கண், இதயம், தோல் உள்ளிட்டவை பாதிக்கப்படும்.

வாயினுள் உள்ள கிருமிகள் வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும். இதனால் குறைமாத குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கா்ப்பிணிகள் வாயை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முறையாக பராமரிக்கவில்லை என்றால் பல் சொத்தை, ஈறு நோய்கள், வாய் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும்.
எனவே ஆண்டுக்கு இரண்டு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல் தொடா்பாக அனைத்து பாதிப்புக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்டவா்கள் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனா்.
குறிப்பாக பல் சுத்தம் செய்தல், ஈறு சிகிச்சை, பல் கட்டுதல், பல் சீரமைப்பது, புற்றுநோய்க்கான சிகிச்சை, கட்டி அகற்றுவது, முகவாய் சீா் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

குறிப்பாக முகவாய் சீா் அறுவை சிகிச்சை தமிழ்நாட்டில் இங்கு மட்டும்தான் செய்யப்படுகிறது. இதற்கு வெளியில் பல லட்சம் ரூபாய் செலவு ஆகும். ஆனால், இங்கு இலவசமாக செய்யப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *