சென்னை, மார்ச் 22- `நகர்ப்புறங்களில் வாக்குப் பதிவை அதிகப்படுத்த. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
போலி பதிவுகள்
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து வாக்காளர்களும் வாக்கு செலுத்துவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் அரசியல் கட்சிகளையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர் பெயர்களை 3 மாதங்களுக்குள் நீக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்து உள்ளது. இதற்காக பிறப்பு இறப்பு பதிவு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் அனைத்து வாக்காளர்களையும் எளிதாக வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்ப துதான் எங்களின் நோக்கம். 2 கி.மீ. இடைவெளிக்குள் வாக்குச்சாவடிகளை அமைக்கவும், ஒரு வாக்குச் சாவடிக்கு 1,200 வாக்காளர் என்ற விகிதத்தில் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஊரகத்தின் கடைசி எல்லையில் உள்ள வாக்குச் சாவடியிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். நகர்ப் புறங்களில் வாக்குப் பதிவை அதிகப்படுத்த, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வாக்குச்சாவடி அமைக்கப்படும்.
கட்சிகளின் கருத்து
தேர்தல் ஆணையத்தின் நடவ டிக்கைகள் பற்றி ஆலோசிக்க கடந்த 4 மற்றும் 5ஆம் தேதியில் தேசிய அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பற்றிய பல்வேறு அறிவுறுத்தல்களுடன் கூடிய டிஜிட்டல் பயிற்சிகள் அனைத்து இந்திய மொழிகளிலும் உருவாக்கப்படும். வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களுக்கு அவை அளிக்கப்படும்.
தேர்தல் நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேசும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்சினைகளும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
இதுபற்றி அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்டுள்ளோம். அடுத்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அவர்கள், தேர்தல் நடைமுறைகள் குறித்த கருத்துகளை அனுப்பி வைக்க வேண்டும். டில்லியில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கவும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.