நடிகை மற்றும் அரசியல்வாதியான ஹேமா மாலினி மீது 18.03.2025 அன்று ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹேமா மாலினி நடனமாடினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் கோவிலுக்குச் சொந்தமான அரங்கில் ஹேமாமாலினி நடனம் ஆடியதால் ஹிந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும், மேலும் அவர் பூரி ஜெகநாதர் கோவிலுக்குள் சென்றதால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாகவும் ஹேமாமாலினிக்கு எதிராக பூரியைச் சேர்ந்த உள்ளூர் அமைப்பான ஜகந்நாத் சேனா புகார் அளித்துள்ளது.
சிங்கதுவார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரில், ஹேமா மாலினி மத விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹேமா மாலினியின் கணவர் தர்மேந்திரா, இரண்டாம் திருமணம் செய்வதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறி, பின்னர் மீண்டும் ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டார்.
இதனால் அவரைத் திருமணம் செய்த ஹேமாமாலினி கோயிலுக்குள் நுழைந்தது இந்து உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஜகன்நாத் சேனா தனது புகாரில் கூறியதாவது, தர்மேந்திரா 1979 ஆகஸ்ட் 21 அன்று மும்பையில் இஸ்லாமிய முறைப்படி ஹேமா மாலினியைத் திருமணம் செய்தார். ஒரு நாள் இஸ்லாமியராக இருந்து பிறகு ஹிந்துவாக மாறினாலும் ஹிந்து முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று ஆகும் ஆகவே ஒரு நாள் இஸ்லாமியரைத் திருமணம் செய்த ஹேமா மாலினி மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஹேமாமாலினி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது
தர்மேந்திரா முன்னதாக பிரகாஷ் கவுரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். 1955 ஆம் ஆண்டு இந்து சட்டத்தின் படி, எந்த இந்துவும் இரண்டு திருமணங்கள் செய்ய அனுமதி இல்லை என்பதால், தர்மேந்திரா ஹேமா மாலினியை திருமணம் செய்ய இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
பின்னர் அவர் இந்து மதத்திற்கு மாறிவிட்டார். இவர்களுக்கு ஈஷா மற்றும் அஹானா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களும் ஹிந்துக்கள் ஆவர்.
இந்த செய்தி வெளி வந்துள்ள இந்தத் தரு ணத்தில், ராஜாஜி சொன்ன ஒரு ஆலோசனையை நினைவூட்டுவது பொருத்தமாகும். ராஜாஜி கூறிய இந்த ஆலோசனைபற்றி இந்திய யூனியன் முசுலிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்கள், புதுக்கோட்டை திலகர் திடலில் ஷரியத் விளக்கப் பொதுக் கூட்டத்தில் (10.11.2016) கூறியதாகும்.
‘‘இந்துக்களில் அக்காள் மகளையோ அத்தை மகளையோ திருமணம் செய்து கொள்ள முடியும். அதே போல இஸ்லாமியர்களில் பெரியப்பா மகளையோ, சித்தப்பா மகளையோ திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால் இந்த முறை இந்துக்களுக்கு ஒத்து வராது என்ற நிலையில், பிராமணக் குடும்பம் ஒன்றில் அண்ணன் – தங்கை உறவு முறையுள்ள இருவர் விரும்பி விட்டார்கள்; பிரச்சினை ராஜாஜியின் கவனத்துக்குச் சென்றது அவர் பார்த்து விட்டு, அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அவர்களது உணர்ச்சிக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலையில், இருவரும் முதலில் இஸ்லாத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று யோசனை சொன்னார் ராஜாஜி. அந்த வகையில் ஷரியத் சட்டம் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்’’ என்று இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் ேபராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கூறியதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டினால், ேஹமாமாலினி செய்தது எப்படி தவறானது என்ற நியாயமான கேள்வி எழத்தான் செய்யும்.
இந்துவாக இருந்தவர் இஸ்லாம் மதம் மாறி திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் இந்துவாக மாறினாலும் ஏற்க மாட்டோம் என்று பிடிவாதம் செய்பவர்கள் வழக்குத் தொடுப்பவர்கள் சிறீரங்கம் ரங்கநாதன் கோயிலில் துலுக்க நாச்சியார் சன்னதி இருக்கிறதே – என்ன செய்ய உத்தேசம்?