சென்னை, மார்ச் 22 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, கவிச்சுடர் கவிதைப்பித்தனுக்கு ”திராவிடச்சுடர் மு.க.ஸ்டாலின் விருது” வழங்கி வாழ்த்தி உரையாற்றினார்.
வடசென்னை தமிழ்ச் சங்கம் சார்பில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் 18.03.2025 அன்று மாலை 6 மணியளவில் அரிமா ப.மனோகரன் தலைமையில் கவியரங்கம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் என முத்தரங்கமாக நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் இட்லி இனியவன், நா.கருணாநிதி ஆகி யோர் முன்னிலை வகிக்க, வடசென்னை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் எ.த.இளங்கோ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முதலில் கருத்தரங்கம் எனும் பிரிவில் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! எனும் தலைப்பில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கத்தில் கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையேற்று “முதல்வருள் முதல்வர்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து ”அறச்சீற்றத்தில் பெரியார்”, “அன்பைப் பொழிவதில் அண்ணா, ”தமிழைக் காப்பதில் கலைஞர்”, ”தன்மானத்தில் பேராசிரியர்” ஆகிய தலைப்புகளில் முறையே முனைவர் இரா.மஞ்சுளா, கவிஞர் அமுதா பொற்கொடி, கவிஞர் வி.உ.இளவேனில், கவிஞர் ஆரூர் த.இலக்கியன் ஆகியோர் உரையாற்றினர்.
“திராவிடச்சுடர் மு.க.ஸ்டாலின் விருது”
சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழு தலைவருமான கு.செல்வப்பெருந்தகை வாழ்த்தரங்கில் உரையாற்றினார். அத்துடன் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு “திராவிடச்சுடர் மு.க.ஸ்டாலின் விருது” வழங்கி வாழ்த்தினார்.
நிறைவாக வட சென்னை தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் இ.ரேகா நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு ஏராளமான இனவுணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.