அவுரங்கசீப் பற்றிய சாவா என்ற ஹிந்தி படம் சமீபத்தில் வெளியானது, இதில் மராட்டிய மன்னர் சிவாஜியின் மகன் மற்றும் பேரனை அவுரங்சீப் மிகவும் கொடூரமாக கொன்றதாக கற்பனைக் கதையைக் கலந்து எடுத்த திரைப்படத்தால் 400 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அவுரங்கசீப் கல்லறையைக் கூட உடைத்து எறிந்து கழிப்பறையாக்க வேண்டும் என்று ஹிந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். தலைமை அமைப்பு இருக்கும் நாக்பூரில் கலவரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அவுரங்கசீப் ஒளிப்படத்தை எரிக்கும் போராட்டம் நடத்தினார்கள். லக்னோ, போபால், இந்தூர் மற்றும் புனே போன்ற நகரங்களில் அவுரங்கசீப்பிற்குப் பதிலாக 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி முகலாய மன்னரான பகதூர்ஷாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்துச்சென்று எரித்தனர்.
யார் படம் என்று கூட தெரியாமல் அந்தப் படத்தின் கீழே தெளிவாக பகதூர்ஷா என்று எழுதியிருந்தும் படிக்கத் தெரியாத காரணத்தால் அவுரங்கசீப் என்று நினைத்து எரித்துவரும் ஹிந்துத்துவ வாதிகளின் பேதைமையை என்ன சொல்ல!
* * *
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மய்யம் உள்ளது. இந்த பயிற்சி மய்யத்துக்கு வந்த அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ராணிப்பேட்டை, அரக்கோணம், தக்கோலத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் அமித்ஷாவின் போட்டோவிற்கு பதில் நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் போட்டோ இடம்பெற்றுள்ளது.
அதில் சந்தானபாரதியின் போட்டோவுடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே! வருக! வருக!’’ என எழுதப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் அருள்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாஜகவினர் தாமரைச் சின்னம், சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான போட்டோ மற்றும் காட்சிப் பதிவு தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் மற்ற கட்சியினர் பாஜகவினருக்கு அந்த கட்சியின் மேனாள் தேசிய தலைவர் மற்றும் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கூட அடையாளம் தெரிய வில்லை என்று கிண்டல் மற்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோவை பாஜக சுவரொட்டியில் இடம்பெற செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தார். அப்போது அவரை வரவேற்க அடிக்கப்பட்ட சுவரொட்டியில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படம்தான் இருந்தது.
ஒன்றிய அமைச்சருக்கு
பதில் வானதி படம்
இதே போல் கோவையில் தொழிலதிபர்கள் சந்திப்பிற்கு வருகை புரிந்த நிர்மலா சீதாராமனின் படத்திற்குப் பதிலாக வானதி சீனிவாசன் படத்தைப் போட்டு, ‘‘ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் அவர்களே வருக‘‘ என்று ஒட்டியிருந்தனர். இதை சுட்டிக்காட்டிய பிறகு, இரவோடு இரவாக சாலை நடுவில் இருந்த 100க்கும் மேற்பட்ட பதாகைகளை அகற்றி, நிர்மலா சீதாராமனின் படத்தை மீண்டும் அங்கே வைத்தனர்.
கனடா நாட்டுக்கு எதிரான போராட்டம் –
கனரா வங்கியின் முன்பு
இதே போல் கனடா நாடு இந்தியா வெளியுறவுத் துறையைக் கண்டித்தது தொடர்பாக நடந்த போராட்டத்தில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கனரா வங்கி முன்பாக பாஜகவினரும், ஹிந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். இதுவும் சமூக வலைதளங்களில் பரவலாகி பெரும் நகைப்பை ஏற்படுத்தியது.
கனடாவுக்கும், கனரா வங்கிக்கும் உள்ள வேறுபாடுகூட தெரியாத கூழ்முட்டைகளா?