சண்டிகர், மார்ச் 21 பஞ்சாப்-அரியானா எல்லையில் இரு இடங்களில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அப்பகுதி சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நேற்று (20.3.2025) மேற்கொள்ளப்பட்டது. டில்லி நோக்கி செல்லும் இச்சாலைகளில் விரைவில் வாகனப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அரியானா காவல் துறையினா் தெரிவித்தனா்.
விவசாய விளைபொருள்களுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள கனவுரி-ஷம்பு ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்முதல் முகாமிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அவா்கள் டில்லி நோக்கி பேரணியாக பலமுறை செல்ல முயன்றபோதும் அரியானா காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றக்கோரி விவசாய சங்கத் தலைவா் ஜகஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற பட்டினிப் போர் மேற்கொண்டுள்ளார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, சண்டீகரில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சா்கள் சிவராஜ் சிங் சவுகான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோர் 19.3.2025 அன்று 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனா்.
தல்லேவால் உள்ளிட்டோர் கைது
அரசுத் தரப்புக் குழுவை சந்தித்துவிட்டு போராட்டக் களத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த தல்லேவால், சா்வாண் சிங் பாந்தோ் உள்ளிட்ட விவசாயத் தலைவா்களை மொஹாலி பகுதியில் பஞ்சாப் காவல் துறையினா் கைது செய்தனா். கனவுரி-ஷம்பு எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக முகாமிட்டிருந்த விவசாயிகள் மற்றும் அவா்களின் கூடாரங்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா். கனவுரி-ஷம்பு எல்லைகளில் நெடுஞ்சாலைகள் மூடலால் தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன; இதன் காரணமாக, விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்டதாக பஞ்சாப் அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது.
தடுப்புகள் அகற்றம்
இந்நிலையில், ஷம்பு-கனவுரி எல்லைப் பகுதி சாலைகளில் விவசாயிகள் பேரணியை தடுப்பதற்காக கட்டமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் போன்ற தடைகளை கனரக இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை அரியானா காவல் துறையினா் நேற்று (20.3.2025) மேற்கொண்டனா். இதேபோல், பஞ்சாப் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் விவசாயிகளால் அமைக்கப்பட்ட தற்காலிக கட்டுமானங்களை முழுமையாக இடிக்கும் பணியில் அந்த மாநில காவல் துறையினா் ஈடுபட்டனா்.
விவசாயிகள் கண்டனம்
விவசாயிகள் மீதான காவல் துறையினரின் நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என்று கிஸான் மஸ்தூா் சங்கா்ஷ் கமிட்டியின் தலைவா் சத்னம் சிங் பன்னு கண்டனம் தெரிவித்தார்.
‘விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய அரசுடன் கைகோத்து பஞ்சாப் அரசு செயல்படுகிறது. பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் காவல் துறை அதிகாரிகளின் அலுவலகங்கள் முன் விவசாய அமைப்பினா் மறியலில் ஈடுபட உள்ளனா். பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இப்போராட்டங்களில் பங்கேற்பா்’ என்றார் அவா்.
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டம்
பஞ்சாப்-அரியானா எல்லையில் விவசாயிகள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் பஞ்சாபைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அவா்கள் முழக்கமிட்டனா். காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆம் ஆத்மியும், பாஜக வும் அதிகார ஆணவத்தில் உள்ளன. விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு இவ்விரு கட்சிகளுமே பொறுப்பு. விவசாயிகளுக்கு எதிரான கொள்கை கொண்ட இக்கட்சிகளை நாட்டில் உள்ள 62 கோடி விவசாயிகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ என்று விமா்சித்துள்ளார்.