புதுடில்லி, மார்ச் 21 மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தின் மக்க ளவை, மாநிலங்களவை நேற்று (20.3.2025) காலை 11 மணிக்கு கூடியது. அப்போது மக்களவையில், தொகுதி மறு வரையறை தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து பங்கேற்றனர்.
“நியாயமான தொகுதி மறு வரையறை வேண்டும். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” என்ற கண்டன வாசகங்கள் திமுக எம்பிக்களின் டி ஷர்ட்டில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருந்தன.
மக்களவை ஒத்தி வைப்பு
இதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “விதிகள், பாரம்பரிய நடைமுறைகளின்படி மக்களவை நடத்தப்படுகிறது. அவையின் மாண்பை மக்களவை உறுப்பினர்கள் காப்பாற்ற வேண்டும். வாசகங்களுடன்கூடிய டி ஷர்ட் அணிவது அவை விதி களுக்கு எதிரானது. முறையான ஆடைகளை அணிந்து அவைக்கு வரலாம்” என்று தெரிவித்தார். டி ஷர்ட் விவகாரம் தொடர்பாக மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.மதியம் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் திமுக எம்பிக்கள் அதே டி ஷர்ட் அணிந்து அவைக்கு வந்தனர். இதனால் மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் திமுக எம்பிக்கள் டி ஷர்டை மாற்றவில்லை. இதன்காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
மக்களவையை போன்றே மாநிலங்களவையிலும் மறு வரையறை எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். இதற்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு அவை கூடியதும் திமுக எம்பிக்கள் அதே டி ஷர்ட் அணிந்திருந்தனர். இத னால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலிலும் திமுக எம்பிக்கள் டி ஷர்ட்டை மாற்றவில்லை. இதைத் தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
மக்களவை தொகுதி மறு வரையறை தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.