‘தினமலர்‘ வார மலரில் (16.3.2025, பக். 10) ஒரு கேள்வி பதிலில் வெளிவந்த பதிலுக்கான பதிலடி கட்டுரை இது.
கும்பமேளாவில் அந்த நிகழ்வு தொடங்கியது முதல் முடிவுக்கு வந்த வரை நடந்த அருவருக்கத்தக்க சம்பவங்கள் பற்றிய விவரம் தேதிவாரியாகத் தரப்பட்டுள்ளன.
31.01.2025
உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி!
கும்பமேளாவில் நடந்த மவுனி அம்மாவாசை நிகழ்வில் வதந்தி பரவியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.
இது அரசு கொடுத்த கணக்கு, ஆனால் இன்றுவரை இறந்தவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படவில்லை. காணாமல் போனதாக நூற்றுக்கணக்கானோர் காவல்துறையிலும், அரசு அதிகாரிகளிடமும் புகார் அளித்தால் அடுத்த கும்பமேளாவில் கிடைத்துவிடுவார்கள். என்று கேலியாக பதில் சொல்லி வருகின்றனர்.
இது தொடர்பாக ‘ஜாகரன்’ நாளிதழ் உறவுகளை இழந்த சுமார் 15 பேர்களிடம் பேட்டி கண்டு வெளி யிட்டது, கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக நேரடி சாட்சியாக உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் கூறும் போது நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் புல்டோசர்கள் மூலம் அள்ளி டிரக்டரில் போட்டுச்சென்றனர் என்று கூறினர். பின்னர் அவர்கள் கூறிய அனைத்து சமூகவலைதளக் காணொலிகளும் அழிக்கப்பட்டன இவ்வளவு பெரிய நிகழ்வில் இதுபோன்ற சிறு சம்பவம் நடப்பது இயல்புதான் என்று மக்களின் இறப்பை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார் உத்தரப் பிரதேசத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத்.
13.02.2025
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
அந்த வகையில், மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பிரயாக்ராஜ் நகருக்கு வந்த பெண் ஒருவர், அங்குள்ள ஆசாத் நகர் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவருடன் ஒரு ஆண் வந்திருந்தார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுதியில் உள்ள பொது கழிப்பறையில் அந்த பெண்ணின் உடல் கழுத்தறுக் கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
15.02.2025
கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அந்த படங்களை வைத்து பல்வேறு ஆபாச காணொலிகளை வெளியிடும் இணையதளங்களுக்கு விற்பனை செய்து லட்சங்களை சம்பாதித்த நிகழ்வு உபி சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.
இது தொடர்பாக முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் கூறும் போது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்று கூறினார்.
தீவிபத்து
கும்பமேளாவில் 13.01.2025 முதல் 26.02.2025 வரை நடந்தது. இந்த நிகழ்வின் போது 5 முறைபெரும் தீவிபத்து நடந்தது.
இது 3 தீவிபத்துகளில் பல லட்சம் ருபாய் மதிப்புள்ள கூடாரங்கள், மின்சாரப் பொருட்கள் மற்றும் உடமைகள் எரித்து சாம்பலாயின. 03.02.2025 அன்று நடந்த தீவிபத்தில் சாமியார்கள் கொண்டு வந்த அந்த கட்டுக்கட்டான ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலாயின, தீ அணைத்த பிறகு கருகிய நிலையில் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் பொதுமக்கள் அள்ளிச்சென்றனர். ஆனால் எரிந்த நிலையில் இருப்பதால் இவை செல்லாது, எவ்வளவு பணம் மற்றும் யார் பணம் என்று யாருக்கும் தெரிய வில்லை. மேலும் இந்தப்பணம் எப்படி இங்கு வந்தது என்றும் மேல் விசாரணை நடத்தப்படவும் இல்லை.
இப்பணம் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப் பட்டதா அல்லது சட்டவிரோத செயலுக்காக இங்கு கொண்டுவரப்பட்டதா என்று தெரியவில்லை என்று ஹிந்துஸ்தான் என்ற நாளிதழும், நியுஸ் 9 என்ற யுடியூப் சேனலும் படத்தோடு செய்தி வெளிட்டன.
18.02.2025
பாலியல் வன்கொடுமையால் மாணவி தற்கொலை சாமியார் வேடமிட்டுத் திரிந்த ஆசியர் கைது
கும்பமேளாவில் மாணவி ஒருவரை கடத்தி வந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக குற்றவாளியைத் தேடிய போது ஆசிரியர் சாமியார் வேடமிட்டு தப்ப முயன்றார். இந்த நிலையில் அவரது மொபைல் போன் சிக்னல் அவரைக் காட்டிகொடுத்துவிட்டது, இதனை அடுத்து அவர் பிரயாக்ராஜ் காவல்துறையினரல கைதுசெய்யப்பட்டார்.
பாலியல் உறவிற்காக சிறுமிகளை வாடகைக்கு அழைத்துவந்த சாமியார்கள்
மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெற்றோர்களுக்குப் பணம் கொடுத்து சிறுமிகளை சாமியார்கள் தங்களின் உதவிக்காக என்று பொய் சொல்லி கும்பமேளாவுக்கு அழைத்துவந்து சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், பின்னர் உடனிருக்கும் சாமியார் களோடு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கோர நிகழ்வும் நடந்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் புகார் அளித்த போது சாமியார்களுக்குப் பெற்றோர்கள் அவர்களது சிறுமிகளை கொடையாக கொடுத்துவிட்டனர். என்றும், இவ்வாறு கொடுக்கப்படும் சிறுமிகள் மடங்களில் சாமியார்களுக்கு தங்களின் வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்வார்கள் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவது சமூகவலைதளங்களில் பரவிய பிறகு பல சிறுமிகளை சாமியார்களே அவர்களது வீட்டிற்கு அனுப்பியது தொடர்பான செய்தியை என்.டி.டி.வி. என்ற ஹிந்தி சேனல் ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டிருந்தது.
மாயமான பெண்கள் எங்கே?
தமிழ்நாட்டில் இருந்து சென்ற குடும்பத்தில் உள்ள பெண்கள் கடத்தப்பட்டதாக 21.02.2025 அன்று தங்களுடைய குடும்பப்பெண்களை காணவில்லை என்று தொலைக்காட்சி அலைவரிசைகளில் பேட்டி கொடுக்க அது தமிழ்நாட்டின் பல செய்தி சேனல்களில் ஒளிபரப்பானது. கும்பமேளா போன்ற விழாக்களில் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு, தோட்டத்தொழில்களுக்கு அடிமைகளாக விற்பனை செய்யப் படும் நிகழ்வு தொடர்ந்து நடப்பதாக அலகாபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கவலையோடு தெரிவித்த நிகழ்வுகளும் ஹிந்தி ஆங்கில சேனல்களிலும், நாளிதழ்களிலும் பதிவாகி உள்ளன.
இதே போல் பல ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பல பெண்கள் கும்பமேளாவில் தங்கள் குடும்ப உறவுகளைச் சந்தித்து மீண்டும் அவர்களோடு சென்ற செய்திகளும் ஏராளம் உண்டு, இந்தப் பெண்களை கடத்தியவர்கள் யார், இத்தனை ஆண்டுகளாக இப்பெண்களை என்ன செய்தனர் என்று காவல்துறையினரோ அல்லது மகளிர் அமைப்புகளோ விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தெலுங்கானாவைச் சேர்ந்த பெண்கள்:
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பெண்கள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.
காணாமல் போன பீகார் பெண்:
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளா வில் இருந்து காணாமல் போன பீகார் பெண் குறித்த விவரங்கள் எதுவுமே தெரியவில்லை என்று காவல்துறை கைவிரித்துவிட்டது.
17.02.2025
கும்பமேளாவில் எதற்கு ஆணுறைகள்?
அம்ரிதேஷ்வர் மகாதேவ் பீடாதீஷ்வர் சகதேவானந்த் கிரி கூறும்போது, ‘‘மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும், தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அன்னை கங்கையின் கண்ணியம் பராமரிக்கப்பட வேண்டும். இது அவர்களுடைய கடமையாகும்’’ எனக் கூறினார். ‘‘சமூக மக்கள் அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை மறந்து வருகின்றனர் என்பது பெரிதும் வருந்தத்தக்கது. மக்கள் பாவங்களை கழுவுவதற்காக வருகின்றனர். ஆனால், பாவங்களை செய்து விட்டு செல்கின்றனர்’’ என வேதனையை வெளிப்படுத்தினார். ‘‘இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. ஆனால், மதுபாட்டில்கள், ஆடைகள் மற்றும் அசிங்கங்கள் (பயன்படுத்தப்பட்ட ஆணுறை) என்பன பல்வேறு இடங்களிலும் பரவி காணப் படுகின்றன’’ என்று குறை கூறினார்.
இதேபோன்று ஷிப்ரா பதக் கூறும்போது, கோடிக்கணக்கான மக்கள் பாவ விமோசனம் பெறுவதற்காக கும்பமேளா வுக்கு வருகிறார்கள். கங்கையில் குளித்த பின்னர், அவர்கள் குப்பைகளை விட்டு விட்டுச் செல்கிறார்கள் என்று குமுறினார்.
ரு.30 கோடி சம்பாதித்த படகோட்டி சமூகவிரோதி
சாமியார் முதலமைச்சர் கும்பமேளாவில் படகோட்டி ஒருவர் ரூ30 கோடி சம்பாதித்ததாக உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பெருமை பொங்க பேசினார்.
ஆனால் அவர் கூறிய அந்த படகோட்டியான பிண்டு மெகரா மீது பல கொலை குற்றங்கள், ஆட்கடத்தல் வழக்கு, பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வது, அடிமைத்தொழிலுக்கும், பிச்சை எடுப்பதற்கும் சிறுவர் சிறுமிகளை பீகார், அசாம் போன்ற வட மாநிலங்களில் விற்பனை செய்த வழக்குகளும் உள்ளன. இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா, ஏபிபி லைவ் நியூஸ், சிஎன்பிசி போன்ற ஆங்கில செய்தி நிறுவனங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.
இவர் எத்தனை பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளைக் கடத்தி விற்பனை செய்து வருவாய் ஈட்டினார்? இது குறித்து விவரங்களைத் சாமியார் முதலமைச்சர் தருவாரா என்று உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இவரது 30 கோடி ரூபாய் சம்பாத்தியம் இந்த வகையில் தானா?
இவ்வளவு நடந்திருந்தும் முழு யானையை கைப்பிடி சோற்றில் மறைக்கிறது ‘தினமலர்’.